IPL வீரர்கள் ஏலத்தில் இடம்பிடித்துள்ள வியாஸ்காந்த்

IPL 2021 Player Auction

2196

இவ்வருடம் நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கான வீரர்கள் ஏலத்துக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் உட்பட, இலங்கை கிரிக்கெட் அணியின் 9 வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், குறித்த ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை ஐ.பி.எல். நிர்வகாம் வெளியிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியானது

குறிப்பிட்ட இந்த வீரர்கள் ஏலத்துக்காக ஒட்டுமொத்தமாக 1,114 வீரர்கள் பதிவுசெய்திருந்த நிலையில், வெறும் 292 வீரர்கள் மாத்திரமே இறுதி ஏலத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். பதிவுசெய்த வீரர்களிலிருந்து, அணிகள் தெரிவுசெய்திருந்த பட்டியலில் இடம்பிடித்த வீரர்களே இவ்வாறு ஏலத்தில் இடம்பெறவுள்ளனர்.

இதில், இலங்கை அணியைச் சேர்ந்த 31 வீரர்கள் ஐ.பி.எல். ஏலத்துக்கு பதிவுசெய்திருந்த நிலையில், லங்கா ப்ரீமியர் லீக்கில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் உள்ளிட்ட 9 வீரர்கள் மாத்திரமே ஏலத்துக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

விஜயகாந்த் வியாஸ்காந்த்தை தவிர்த்து, குசல் பெரேரா, திசர பேரேரா, கெவின் கொத்திகொட, மஹீஸ் தீக்ஷன, தசுன் ஷானக, இசுரு உதான, வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்துக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீரர்கள் பட்டியலில் குசல் பெரேரா, திசர பெரேரா, வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர,  தசுன் ஷானக மற்றும் இசுரு உதான ஆகியோருக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை இந்திய ரூபாயில் 50 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், மஹீஸ் தீக்ஷன, கெவின் கொத்திகொட மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோருக்கு 20 இலட்சம் ரூபாய் குறைந்தபட்ச ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இம்முறை அதிகபட்சமாக ஐ.பி.எல். ஏலத்தில் ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ், க்ளென் மெக்ஸ்வேல், ஸ்டீவ் ஸ்மித், சகிப் அல் ஹசன், மொயீன் அலி, செம் பில்லிங்ஸ், லியம் ப்ளங்கட், ஜேசன் ரோய் மற்றும் மார்க் வூட் ஆகியோருக்கு 2 கோடி ருபாய் குறைந்தபட்ச ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 18ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு சென்னையில் ஆரம்பிக்கவுள்ளதுடன், இதில் 164 இந்திய வீரர்கள், 128 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 3 அங்கத்துவ நாட்டு வீரர்கள் என 292 வீரர்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<