ஆதிலின் 5 விக்கெட்டுக்கள் வீண் : இக்கட்டான நிலையில் ஸாஹிராக் கல்லூரி

178

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதின் கீழானவர்களுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பிரிவு 1 (டிவிசன் 1) கிரிக்கெட் தொடரின் 2 போட்டிகள் இன்று நடைபெற்றன.

கொழும்பு புனித பேதுரு கல்லூரி எதிர் கொழும்பு வெஸ்லி கல்லூரி  

புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித பேதுரு கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

சச்சின் சில்வா ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களையும், முஹமட் அமீன் 41 ஓட்டங்களையும், சஜித் பெர்னாண்டோ 36 ஓட்டங்களையும் பெற, அவ்வணி தமது முதல் இன்னிங்சுக்காக 64.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் வெஸ்லி கல்லூரியின் செனால் தங்கல்ல மற்றும் மோவின் சுபசிங்ஹ ஆகியோர் தலா 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.  

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வெஸ்லி கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவு வரை 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 58 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக சஹில் டயஸ் 25 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் புனித பேதுரு கல்லூரியின் சச்சின் சில்வா 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 250/10 (64.4) சச்சின் சில்வா 80*, முஹமட் அமீன் 41, சஜித் பெர்னாண்டோ 36, செனால் தங்கல்ல 3/56, மோவின் சுபசிங்ஹ 3/56

வெஸ்லி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 58/3 (30) சஹில் டயஸ் 25, சச்சின் சில்வா 3/19


கல்கிசை புனித தோமியர் கல்லூரி எதிர் மருதானை ஸாஹிரா கல்லூரி

ஸாஹிராக் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித தோமியர் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய அவ்வணி வீரர்கள் தமது முதல் இன்னிங்சுக்காக 69.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அவ்வணிக்காக டெல்லன் பீரிஸ் 65 ஓட்டங்களையும், கிஷான் முனசிங்ஹ 44 ஓட்டங்களையும், மனீஷ ரூபசிங்ஹ 37 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.

பந்து வீச்சில் ஸாஹிராக் கல்லூரியின் முஹமட் ஆதில் 66 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், முஹமட் ரிபாத் 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.  

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸாஹிராக் கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவு வரை 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 32 ஓட்டங்களைப் பெற்றது. முஹமட் சம்மாஸ் 20 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் தோமியர் கல்லூரியின் கலன பெரேரா 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 244/10 (69.1) டெல்லன் பீரிஸ் 65, கிஷான் முனசிங்ஹ 44, மனீஷ ரூபசிங்ஹ 37, சலின் டி மேல் 24.  முஹமட் ஆதில் 5/66, முஹமட் ரிபாத் 3/50

ஸாஹிராக் கல்லூரி (முதல் இன்னிங்க்ஸ்) – 42/5 (18) முஹமட் சாமாஸ் 20. கலன பெரேரா 3/9