மலிந்து மதுரங்கவின் அபார ஆட்டத்தால் மஹாநாம கல்லூரி முன்னிலையில்

162
U19 Schools Cricket

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று ஆரம்பமான போட்டிகளில் மஹாநாம கல்லூரி மற்றும் மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரி அணிகள் முன்னிலையிலுள்ளன.

மஹாநாம கல்லூரி எதிர் ரோயல் கல்லூரி

தொடரின் குழு ‘B’ இற்கான போட்டியொன்றில் மஹாநாம கல்லூரியை எதிர்த்து ரோயல் கல்லூரி போட்டியிட்டது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மஹாநாம கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்கள் அணிக்கு சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மலிந்து மதுரங்க 115 ஓட்டங்களை விளாசினார். அவருக்கு சிறந்த பங்களிப்பை எஷான் ஹெட்டியாரச்சி (75*) மற்றும் கவிந்து முனசிங்க (53) ஆகியோர் வழங்கி அரைச்சதம் கடந்தனர். இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும்போது மஹாநாம கல்லூரி 8 விக்கெட்டுகளை இழந்து 361 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

மஹாநாம கல்லூரி – 361/8 (84) – மலிந்து மதுரங்க 115, எஷான் ஹெட்டியாரச்சி 75*, கவிந்து முனசிங்க 53, கனித் சந்தீப 3/51

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.


மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரி எதிர் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘A’ இற்கான போட்டியொன்றில் மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரி மற்றும் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி அணிகள் மோதிக் கொண்டன. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித செபஸ்டியன் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தாஷிக் பெரேரா (49) மற்றும் துலாஜ் சில்வா (44) ஆகியோர் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்த போதிலும், பந்து வீச்சில் அசத்திய கவீஷ துலஞ்சன மற்றும் கவிந்து ஹெட்டியாரச்சி இருவரும் தலா 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்த, புனித செபஸ்டியன் கல்லூரி 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளை இழந்தது.

தொடர்ந்து களமிறங்கிய புனித அந்தோனியார் கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 72 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி – 195 (56) – தாஷிக் பெரேரா 49, துலாஜ் சில்வா 44, தருஷ பெர்னாண்டோ 37, கவீஷ துலஞ்சன 4/54, கவிந்து ஹெட்டியாரச்சி 4/64

புனித அந்தோனியார் கல்லூரி – 72/4 (29) – எரங்க மதுஷான் 31*, தருஷ பெரேரா 1/03

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.