அபார சதம் கடந்த சந்தருவன், சுரவீர: முதல் நாளில் வலுப்பெற்றுள்ள ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரிகள்

1102
U19 Schools Cricket

பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிரிக்கெட் தொடரில் இன்று ஆரம்பமாகிய 4 போட்டிகளில், சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த ஆனந்த, நாலந்த, கல்லூரி அணிகள் வலுப்பெற்றுள்ளன.

தர்மராஜ கல்லூரி எதிர்  நாலந்த கல்லூரி

தர்மராஜ கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில், விருந்தினர் அணியான நாலந்த கல்லூரி நாணய சுழற்சியினை வெற்றி கொண்டு முதலில் துடுப்பெடுத்தாட மைதானம் நோக்கி விரைந்தது.

இதன்படி துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த நாலந்த அணியின் கசுன் சந்தருவன் அபாரமாக சதம் கடந்து 127 ஓட்டங்களைக் குவித்தார். மறுமுனையில் லக்ஷித்த ரன்ஜன (88), கலன பத்தியாராச்சி (52) ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தினை  வெளிப்படுத்தி அரைச் சதம் கடந்தனர். இதன் காரணமாக 9 விக்கெட்டுக்களை இழந்து 387 ஓட்டங்களினை பெற்றிருந்த நாலந்த கல்லூரி, தமது முதல் இன்னிங்சினை நிறுத்திக்கொண்டது.

பந்து வீச்சில் தர்மராஜ கல்லூரி மோசமாக செயற்பட்டிருப்பினும் கிஹான் விதாரன அதிகமாக நான்கு விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

பின்னர், தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த தர்மராஜ கல்லூரி, போட்டியின் ஆட்ட நேர நிறைவின்போது 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

போட்டியின் சுருக்கம்

நாலந்த கல்லூரி: 387/9d (74.4) – கசுன் சந்தருவன் 127, லக்ஷித ரன்ஜன 88, கலான பத்தியாராச்சி 52, சுஹங்க விஜயவர்தன 40, கிஹான் விதாரன 4/117, சத்துரங்க அலுதெனிய 2/43

தர்மராஜ கல்லூரி: 67/3 (18)  


ஸாஹிரா கல்லூரி எதிர் டி.எஸ் சேனநாயக்க கல்லூரி

புளும் பீல்ட் மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுக்கொண்ட ஸாஹிரா கல்லூரி அணியின் தலைவர் சஜித் சமிர முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

இதன்படி, துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த ஸாஹிரா அணி, எதிரணியின் பந்து வீச்சிற்கு முகம்கொடுக்க முடியாமல் 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 127 ஓட்டங்களினை தமது முதல் இன்னிங்சுக்காக குவித்துக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் சஜீத் சமிர மாத்திரம் 24 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். டி.எஸ் சேனநாயக்க கல்லூரியின் சார்பாக பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த தத்சர பண்டார வெறும் 15 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும் முதித லக்ஷன், கீதாஞ்ச டேனியல், விஹான் குணசேகர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த டி.எஸ் சேனநாயக்க கல்லூரி 106 ஓட்டங்களிற்கு 7 விக்கெட்டுக்களை இழந்திருந்தபோது போட்டியின் ஆட்ட நேரம் நிறைவுற்றது.

போட்டியின் சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி: 127 (46.4) சஜீத் சமீர 24, தில்ஹான் ரமீஷ் 23, தத்சார பண்டார 3/15, கீதாஞ்ச டேனியல் 2/15, விஹான் குணசேகர 2/19, முதித லக்ஷன் 2/33

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி: 106/7 (41.4) செஹ்ஷாத் அமீன் 38, கிஹான்குணசேகர 30, மொஹம்மத் மஹ்தி 4/19


கண்டி திரித்துவக் கல்லூரி எதிர் ஆனந்த கல்லூரி

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சிக்கு அமைவாக ஆனந்த கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட மைதானம் நோக்கி வந்தது.

இதன்படி, துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த அவ்வணியில், சிறப்பாக செயற்பட்ட சஹான் சுரவீர சதம் (121) கடந்தார். இவருடன் சேர்த்து கவிஷ்க அஞ்சுல பெற்றுக்கொண்ட 78 ஓட்டங்களின் துணையுடன் 60 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 333 ஓட்டங்களினை பெற்றிருந்த ஆனந்த தரப்பு, தமது முதல் இன்னிங்சினை நிறுத்திக்கொண்டது.

பந்து வீச்சில், திரித்துவ கல்லூரியின் திரவென் பெர்சிவேல் 83 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து, தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த திரித்துவ கல்லூரி அணி 61 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்து இக்கட்டான நிலையில் இருந்த போது இன்றைய ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது.

இந்த இன்னிங்சில் பறிபோன விக்கெட்டுக்களில் அசேல் சிகர, சமிக்க குணசேகர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை தம்மிடையே பகிர்ந்து கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி: 333/6d (60) – சஹான் சுரவீர 121, கவிஷ்க அஞ்சுல 78, துஷான் ஹெட்டிகே 44, திரவென் பெர்சிவேல் 4/83

திரித்துவ கல்லூரி: 61/5 (27) சனோகீத் சண்முகநாதன் 26, சமிக்க குணசேகர 2/9, அசேல் சிகர 2/11


பண்டாரநாயக்க கல்லூரி எதிர் குருகுல கல்லூரி

பண்டாரநாயக்க கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்த இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுக்கொண்ட பண்டாரநாயக்க கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது.  

இதன்படி, அவ்வணி தமது முதல் இன்னிங்சுற்காக 57.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 196 ஓட்டங்களினைப் பெற்றது. மதவ்வ சத்சார அதிகபட்சமாக 56 ஓட்டங்களைக் குவித்தார். குருகுல கல்லூரியின் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட ப்ருதுவி ருசார மூன்று விக்கெட்டுக்களையும் மறுமுனையில் பத்தும் மகேஷ், பிரவீன் நிமேஷ், உதார ரவிந்து ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த களனி குருகுல கல்லூரி அணி, அசிந்த மல்ஷான் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 59 ஓட்டங்களின் துணையுடன், போட்டியின் முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

போட்டியின் சுருக்கம்

பண்டாரநாயக்க கல்லூரி: 196 (57.3) – மதவ்வ சத்சார 56, ஹச்சித திமல் 39, அரோஷ் மதுஷன் 33, ப்ருதுவி ருசார 3/50, பத்தும் மகேஷ் 2/16, பிரவீன் நிமேஷ் 2/22, உதார ரவிந்து 2/39

குருகுல கல்லூரி: 175/4 (36) – அசிந்த மல்ஷான் 59*, உதார ரவிந்து 44*

இன்று ஆரம்பமாகிய இந்த அனைத்து போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்