கேமர் ரோச்சிற்கு பதிலாக மேற்கிந்திய தீவுகள் ஒரு நாள் அணியில் அன்ரூ ரசல்

216
courtsey - Getty Images

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம் இன்று (25) அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, தமது சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிய பின்னர் தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் விளையாடி வருகின்றது.

திரில் வெற்றியை சுவைத்த மேற்கிந்திய தீவுகள்

இங்கிலாந்துடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடும் போராட்டத்தை…

ஏற்கனவே இந்த ஒரு நாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்குமான மேற்கிந்திய தீவுகள் ஒரு நாள் அணிக்குழாம் அறிவிக்கப்பட்டு ஒரு நாள் தொடரில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இன்று கிரனேடா நகரில் (25) இடம்பெறும் மூன்றாவது போட்டியிலும் முதல் இரண்டு போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் ஒரு நாள் அணியே பங்கேற்கின்றது. ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நிறைவடைந்த போட்டிகளில் ஒவ்வொரு அணியினரும் தலா ஒரு வெற்றி வீதம் பெற்று 1-1 என தொடரை சமநிலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக ஒரு நாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி, தொடரின் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிக்கான குழாமை அறிவித்திருக்கின்றது.

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் ஒரு நாள் அணியில் அதிரடி சகலதுறை வீரரான அன்ரூ ரசல் மீண்டும் இடம்பிடித்திருப்பதுடன், முதுகு உபாதை காரணமாக வேகப்பந்து வீச்சாளரான கேமர் ரோச் அணியிலிருந்து வெளியேறியிருக்கின்றார்.

“கேமர் ரோச் முதுகு உபாதை காரணமாக ஒரு நாள் தொடருக்கான (அணியில்) இருந்து விலகியிருப்பதனால், ஒரு நாள் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளிலும் அனுபவம் கொண்ட அன்ரூ ரசலை பிரதியிட்டிருக்கின்றோம். நாங்கள் நம்புவதின் அடிப்படையில் ரசலின் இந்த இணைப்பானது மேற்கிந்திய தீவுகள் குழாத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக இருக்கும்“ என  மேற்கிந்திய தீவுகள் அணியின் சிரேஷ்ட தேர்வாளரான கோர்ட்னி ப்ரவ்னி அன்ரூ ரசல் அணிக்குள் உள்வாங்கப்பட்டது தொடர்பில் பேசும் போது தெரிவித்திருந்தார்.

மேலும் பேசிய ப்ரவ்னி “ரசலிற்கு முழங்காலில் உபாதை ஆபத்து ஒன்று இருக்கும் காரணத்தினால் பந்துவீசும் போது அவரை கவனமாக பயன்படுத்த வேண்டியிருக்கின்றது. எனினும், அவரது அசுர துடுப்பாட்டம் எமது அணிக்கு பெறுமதிமிக்க சொத்தாகும். எமது தேர்வுக் குழாம் ஒரு நாள் தொடரில் எஞ்சியிருக்கும் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், அதன் தலைவர் ஜேசன் ஹோல்டரிற்கும் சிறப்பாக செயற்பட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது“ எனக் குறிப்பிட்டார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இதுவரையில் 52 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் 30 வயதான அன்ரூ ரசல் அவற்றில் நான்கு அரைச்சதங்களுடன் 998 ஓட்டங்களை குவித்திருப்பதோடு, 65 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றியை நழுவவிட்டிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டாம் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தியிருப்பதால் தொடரின் எஞ்சிய போட்டிகள் தீர்மானம் கொண்டதாக அமையவிருக்கிறது.

இன்று நடைபெறும் ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டியினை அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்துடனான ஒரு நாள் தொடரின் நான்காவது ஒரு நாள் போட்டியில் எதிர்வருகின்ற புதன்கிழமை (27) இங்கிலாந்து அணியை மூன்றாவது ஒரு நாள் போட்டி இடம்பெறும் இதே கிரேனடா நகரில் சந்திக்கின்றது.

டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரவரிசையில் குசல் மெண்டிஸ், ஓஷத பெர்ணான்டோ அசுர முன்னேற்றம்

தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரை இலங்கை அணி முழுமையாக…

அதனை அடுத்து மார்ச் மாதம் 02ஆம் திகதி இடம்பெறவுள்ள தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டிக்காக இரண்டு அணிகளும் சென். லூசியா நகருக்கு பயணமாகின்றன.

மேற்கிந்திய தீவுகள் ஒரு நாள் அணி  – ஜேசன் ஹோல்டர் (அணித்தலைவர்), பாபியன் அலன், தேவந்திர பிஷூ, கார்லோஸ் ப்ராத்வைட், டர்ரன் ப்ராவோ, ஜோன் கெம்பல், செல்டொன் கொட்டரேல், கிறிஸ் கெயில், சிம்ரோன் ஹெட்மேயர், ஷாய் ஹோப், ஆஷ்லி நேர்ஸ், நிகோலஸ் பூரான், அன்ரூ ரசல், ஒசானே தோமஸ்

Embed the link with this caption – https://www.thepapare.com/tamil/cricket/மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க