மும்பை அணியில் மீண்டும் இணைந்த ட்ரெண்ட் போல்ட்

163

ஐக்கிய அரபு இராச்சியத்தில் முதல் தடவையாக ஒழுங்கு செய்யப்படவுள்ள சர்வதேச லீக் T20 (ILT20) தொடரில் களமிறங்கவுள்ள மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் உள்வாங்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுறவுள்ள UAE சர்வதேச T20 லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர்களான ரிலைன்ஸ் நெட்வேர்க் உரிமையாளர்கள் ஒரு அணியை வாங்கியுள்ளனர். அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு இந்த அணி இயங்கும்.

Mumbai Emirates என்ற பெயரில் களமிறங்கவுள்ள இந்த அணியில் இடம்பெற்றுள்ள 14 வீரர்களின் பெயர் விபரங்களை மும்பை அணி நிர்வாகம் இன்று (13) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன் படி, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள், இந்நாள் வீரர்கள் UAE சர்வதேச T20 லீக் தொடரில் MI எமிரேட்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.

இதில், மும்பை அணிக்காக ஆரம்பத்தில் இருந்தே விளையாடி வரும் கிரென் பொல்லார்டை முதல் வீரராக மும்பை எமிரேட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதே போன்று, சென்னை சுபர் கிங்ஸ் அணியின் நட்சத்திர விரரும், முன்னாள் மும்பை வீரருமான டுவைன் பிராவோ தற்போது மும்பை எமிரேட்ஸ் அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளார்.

மேலும், மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிகோலஸ் பூரனும் தற்போது மும்பை எமிரேட்ஸ் அணியில் இணைந்திருக்கிறார்.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் நியூசிலாந்து வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக முடிவு செய்த நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரும், முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணி வீரருமான டிரெண்ட் போல்ட், UAE சர்வதேச T20 லீக் தொடரில் மும்பை எமிரேட்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

33 வயதான ட்ரெண்ட் போல்ட் பணிச்சுமை, குடும்பத்தினருடன் கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டும் போன்ற காரணங்களால் தன்னை நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்திலிருந்து விலக்கிக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதனை நியூசிலாந்து கிரிக்கெட் சபையும் ஏற்றுக்கொண்டு அவரை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரு பிளெட்சர், தென்னாபிரிக்காவின் முன்னாள் சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் இம்ரான் தாஹிர் ஆகிய வீரர்களையும் மும்பை எமிரேட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இங்கிலாந்து அணியின் அனுபவ சகலதுறை வீரர் சமித் படேல், தற்போது நடைபெற்று வருகின்ற The Hundred தொடரில் முதல் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்திய இங்கிலாந்து வீரர் வில் ஸ்மீட் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜோர்டன் தோம்ப்சனும் எமிரேட்ஸ் அணிக்காக விளையாட உள்ளனர்.

இது இவ்வாறிருக்க, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 3 வீரர்கள் மும்பை எமிரேட்ஸ் அணிக்காக விளையாடவுள்ளனர். இதில் நஜிபுல்லா சத்ரான், சஹீர் கான், பஸல் ஹக் பாரூகி ஆகிய வீரர்களை எமிரேட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இதே போன்று நெதர்லாந்தைச் சேர்ந்த சகலதுறை வீரர் பாஸ் டி லீடி, ஸ்கொட்லாந்து வீரர் பிராட்லி வீல் ஆகியோரை மும்பை எமிரேட்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

எனவே, மொத்தம் இதுவரை 14 வீரர்களை தேர்வு செய்துள்ள மும்பை எமிரேட்ஸ் அணி, இந்த ஆண்டு இறுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த பிறகு நடைபெறவுள்ள வீரர்கள் ஏலத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த வீரர்கள் சிலரையும் ஒப்பந்தம் செய்ய உள்ளது.

இதேவேளை, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில், ‘ எமது மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் இணையும் 14 வீரர்கள் பெயர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவர்கள் மும்பை எமிரேட்ஸ் அணிக்காக விளையாடப் போகிறார்கள். எங்களின் தூணாக இருக்கும் கிரென் பொல்லார்ட் மும்பை எமிரேட்ஸ்க்கு ஆடுகிறார். இவருடன் டுவைன் பிராவோ, ட்ரெண்ட் போல்ட், நிகோலஸ் பூரன் ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர். மும்பை எமிரேட்ஸ் அணிக்கு ஆடும் அனைத்து வீரர்களையும் வரவேற்கிறோம். எப்போதும் இளம் திறமைக்கும், அனுபவ வீரர்களுக்கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்துவது மும்பை இந்தியன்ஸின் அடிப்படைகளில் ஒன்று’ என்றார்.

மும்பை எமிரேட்ஸ் அணியின் 14 வெளிநாட்டு வீரர்கள்

டுவைன் பிராவோ, கிரென் பொல்லார்ட், நிகோலஸ் பூரன், ஆண்ட்ரு பிளெட்சர் (மேற்கிந்திய தீவுகள்), ட்ரெண்ட் போல்ட் (நியூசிலாந்து), இம்ரான் தாஹிர் (தென்னாப்பிரிக்கா), நஜிபுல்லா ஸத்ரான், சஹீர் கான், ஃபஸல் ஹக் பாரூகி (ஆப்கானிஸ்தான்), சமித் படேல், வில் ஸ்மீத், ஜோர்டன் தோம்ப்சன் (இங்கிலாந்து), பிராட் லீ வீல் (ஸ்காட்லாந்து), பாஸ் டி லீடி (நெதர்லாந்து).

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<