தேசிய கூடைப்பந்தாட்ட சம்பியனாக முடிசூடிய யாழ். இந்துக் கல்லூரி

205

இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கம் நடாத்திய 2018 ஆம் ஆண்டிற்கான 19 வயதுக்கு உட்பட்ட “B” பிரிவு (B டிவிஷன்)  கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அணி சம்பியனாக முடிசூடியுள்ளது. அதேவேளை, மற்றொரு யாழ் பாடசாலையான கொக்குவில் இந்துக் கல்லூரி இதே பிரிவில் மூன்றாவது இடத்தினை தம்வசப்படுத்தியுள்ளது.

அரையிறுதிப்போட்டியில் லைசியம் சர்வதேச பாடசாலை அணியினை 52-71 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலகு வெற்றிபெற்ற யாழ் இந்துக் கல்லூரி அணியினரும், மற்றொரு யாழ் மாவட்ட பாடசாலை அணியான கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு எதிராக ஒரு புள்ளி வித்தியாசத்தில் (62-61) த்ரில் வெற்றிபெற்ற தர்மபால கல்லூரி அணியினரும் இறுதிப்போட்டியில் மோதியிருந்தனர்.

ஒருநாள் அரங்கில் வரலாறு படைத்த திசர பெரேராவின் சாதனைத் துளிகள்

இன்று கந்தானை டி மெசனொட் கல்லூரியில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் பலத்த சவாலைக் கொடுக்குமென எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு தர்மபாலா கல்லூரி அணியினை 35 புள்ளிகள் வித்தியாசத்தில் 74 – 39 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவான வெற்றியொன்றினை பதிவுசெய்து யாழ் இந்துக் கல்லூரி அணியினர் தொடரின் சம்பியன்களாக முடிசூடிக்கொண்டனர்.

இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணியில் தொடர்ச்சியாக பிரகாசித்து வரும் துரைசிங்கம் வாகீசன் போன்ற திறமையான வீரர்களை உருவாக்கிய இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் துறைக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக தொடரின் சிறந்த தாக்குதல் ஆட்டக்காரராக (Offensive Player) சஞ்சயனும், தொடரின் பெறுமதிமிக்க வீரராக (Most Valuable Player) கீர்த்தனனும் தெரிவுசெய்யப்பட்டனர்.

2017 ஆம் ஆண்டு இதே பிரிவில் இரண்டாவது இடத்தினை தமதாக்கிய மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை யாழின் முதலாவது பாடசாலையாக A பிரிவிற்கு முன்னேறியிருந்தது. அதேவேளை Thepapare கூடைப்பந்தாட்ட தொடரில் அறிமுக வருடத்திலேயே காலிறுதிவரை முன்னேறி அசத்தியிருந்தது.

தேசிய ரீதியிலான கூடைப்பந்தாட்ட தொடர்களில் தமது பிரவேசத்தினை ஆரம்பித்த வடக்கு மாகாண கூடைப்பந்தாட்ட வீரர்கள், ஓரிரு வருடங்களிலேயே தேசிய ரீதியில் வெற்றிகளைப் பெறுவதுடன்,  முன்னணி தொடர்களை நோக்கிய தமது பயணத்தையும் ஆரம்பித்துள்ளனர். மேல் மாகாணம் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த கூடைப்பந்தாட்டத்தில் வடக்கு, கிழக்கினை சேர்ந்த வீர, வீராங்கனைகள் தமது பெயர் பதிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<