இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் 19 வயதிற்குட்பட்ட “B” பிரிவு (டிவிசன்) அணிகளுக்கிடையிலான மகளிருக்கான கூடைப்பந்தாட்ட தோடரில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியினர் சம்பியன் பட்டத்தினை தமதாக்கியுள்ளனர்.
முதல்முறை தேசிய கெரம் சம்பியனாக தெரிவாகிய சஹீட் ஹில்மி
தேசிய கெரம் சம்பியன் பட்டத்தை மூன்று தடவைகள் ..
கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற இந்த தொடரிற்கான தகுதிச் சுற்றில் டி மசெனொட் கல்லூரி அணியினை 58:11 என்ற புள்ளிகள் கணக்கிலும், குணவர்தன மத்திய கல்லூரி அணியினை 62:36 என்ற புள்ளிகளடிப்படையிலும் வெற்றி கொண்ட கொக்குவில் இந்துக் கல்லூரி அணி தோல்விகளேதுமின்றி “B” பிரிவு பி தொடரிற்கு தகுதிபெற்றிருந்தது.
இந்நிலையில், இவ்வாரம் டி மெசெனொட் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற பி பிரிவுக்கான தொடரில், முதலாவது போட்டியில் வத்தளை சென். ஆன்ஸ் மகளிர் பாடசாலை அணியினை 44:30 எனவும், பாணந்துறை லைசியம் சர்வதேச பாடசாலை அணியினை 49:24 என்ற புள்ளிக் கணக்கிலும் வெற்றிபெற்ற கொக்குவில் இந்துக் கல்லூரி அணியினர் அரையிறுதிப் போட்டியில் கண்டி மகமாய மகளிர் கல்லூரி அணியினையும் 47:27 என்ற 20 புள்ளிகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி கொண்டனர்.
இறுதிப் போட்டி
கண்டி கேட்வே கல்லூரிக்கெதிரான இறுதிப் போட்டியினை அபாரமாக ஆரம்பித்த கொக்குவில் இந்துக் கல்லூரியினர் முதலாவது காற்பகுதியினை 18:04 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று 14 புள்ளிகளால் முன்னிலை பெற்றனர். மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இரண்டாவது காற்பகுதியில் மீண்டுவந்த கேட்வே கல்லூரியினர் 16:14 என்ற புள்ளிகளடிப்படையில் குறித்த பகுதியை தமதாக்கினர்.
எனினும், முதலாவது பாதியாட்டம் 32:20 என்ற புள்ளிகள் கணக்கில் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு சாதகமாக நிறைவிற்கு வந்தது.
மூன்றாவது காற்பகுதியும் கேட்வே கல்லூரிக்கு சாதகமாக 13:11 என்ற புள்ளிக் கணக்கில் நிறைவிற்கு வந்தது. தொடர்ந்து நான்காவது காற்பகுதியிலும் ஆதிக்கத்தினை தொடர்ந்த கேட்வே கல்லூரியினர் 15:10 என்ற புள்ளிகளடிப்படையில் நிறைவு செய்தனர்.
தொடர்ச்சியாக மூன்று காற்பகுதிகளையும் கேட்வே கல்லூரியினர் முன்னிலை பெற்றிருந்த போதும் முதலாவது காற்பகுதியின் போது 14 புள்ளிகளால் முன்னிலை பெற்றிருந்த கொக்குவில் இந்துக் கல்லூரியினர் 53:48 என போட்டியை நிறைவிற்கு கோண்டு வந்தனர். எனவே, பலத்த போராட்டத்தின் பின்னர் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் யாழ் மங்கைகள் வெற்றியினை தமதாக்கியிருந்தனர்.
இந்த வெற்றியுடன் “B” பிரிவு கூடைப்பந்தாட்ட தொடரில் ஒரே வருடத்தில் பெண்கள் பிரிவில் முதலாவது இடத்தினையும், ஆண்கள் பிரிவில் மூன்றாவது இடத்தினையும் தம்வசப்டுத்தியுள்ளது கொக்குவில் இந்துக் கல்லூரி.
விருதுகள்
சிறந்த தாக்குதல் வீராங்கனை(Best offensive player) –பாபு பாணு
பெறுமதிமிக்க வீராங்கனை (Most valuable player) – தமிழரசி
ஏற்கனவே, கடந்த மாதம் இடம்பெற்ற ஆண்களுக்கான தொடரில் இதே பிரிவில் முதலாவது இடத்தினை யாழ் இந்துக் கல்லூரி அணியும் மூன்றாவது இடத்தினை கொக்குவில் இந்துக் கல்லூரியும் தமதாக்கியிருந்த நிலையிலேயே யாழின் மற்றொரு அணியாக கொக்குவில் இந்து மகளிர் இந்த வெற்றியை சுவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.