துல்ஷானின் சகல துறை ஆட்டத்தினால் புனித செர்வதியஸ் அணி இறுதிப் போட்டியில்

171
U17 Cricket

பதினேழு வயதிற்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு (டிவிஷன்  -I) இடையிலான ‘சிங்கர் கிண்ண’ மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று முடிந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மாத்தறை புனித செர்வதியஸ் கல்லூரி அணி 11 ஓட்டங்களால் நாலந்த கல்லூரி அணியினை வீழ்த்தி தொடரின், இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.  

சிங்கர் கிண்ண இறுதிப் போட்டியில் புனித அந்தோனியர் கல்லூரி

இன்று முடிவடைந்திருக்கும் பதினேழு வயதுக்குட்பட்ட (டிவிஷன்-I) பாடசாலை அணிகளுக்கு

முன்னதாக, கொழும்பு சோனகர் கழக மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நாலந்த கல்லூரி அணியின் தலைவர் ரணிந்து டி சில்வா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை மாத்தறை வீரர்களுக்கு வழங்கியிருந்தார்.

இதனடிப்படையில், மைதானத்திற்கு துடுப்பாட்டத்திற்காக விரைந்த புனித செர்வதியஸ் கல்லூரி அணியினர், விரைவாக முன்வரிசை விக்கெட்டுக்களை பறிகொடுத்து ஒரு தடுமாற்றமான ஆரம்பத்தினை வெளிக்காட்டியிருந்தனர்.

எனினும், மத்திய வரிசையில் செர்வதியஸ் கல்லூரி அணியின் தலைவர் கேசார நுவான்த மற்றும் சஷிக துல்ஷான் ஆகியோர் நிதானமான துடுப்பாட்டத்தினை வெளிக்காட்டி ஆறாவது விக்கெட்டுக்காக 117 ஓட்டங்களினை  இணைப்பாட்டமாக பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையினை அதிகரித்தனர்.

இவர்கள் இருவரினதும் விக்கெட்டுக்களைத் தொடர்ந்து நாலந்த கல்லூரி அணியின் புத்தி சாதுர்யமான செயற்பாடு காரணமாக தொடர்ந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட மீண்டும் சரிவினை சந்தித்த புனித செர்வதியஸ் கல்லூரி அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 206 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

செர்வதியஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணியின் தலைவர் கேசார நுவான்த 77 பந்துகளிற்கு 8 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 70 ஓட்டங்களினையும், சஷிக துல்ஷான் 6 பெளண்டரிகள் உடன் 51 ஓட்டங்களினையும் பெற்றிருந்தனர்.

அதேபோன்று, நாலந்த கல்லூரி அணியின் பந்து வீச்சில் ஜனித் ஜயரத்ன மொத்தமாக 23 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களையும் வர்ஷ அனன்த  மற்றும் ஜயோத் கெல்தர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து, வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 207 ஓட்டங்களினை 50 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு ஆடியிருந்த நாலந்த கல்லூரி அணி, 45.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 195 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று தோல்வியினை தழுவியதால் தொடரின் இறுதிப் போட்டி வாய்ப்பினையும் பறிகொடுத்தது.

இறுதிவரை விறுவிறுப்பாக சென்ற இந்தப் போட்டியில் நாலந்த கல்லூரி சார்பாக இறுதி வரை போராடியிருந்த சசித்த குணத்திலக்க ஆட்டமிழக்காமல், 66 ஓட்டங்களினை பெற்றதுடன் பின்வரிசையில் ஆடியிருந்த ருசார பாணுக்கவும் 32 ஓட்டங்களினை தன் பங்கிற்கு வழங்கியிருந்தார்.

எதிரணியினை இறுதிவரை மிரட்டி, முன்னர் துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்பட்ட புனித செர்வதியஸ் கல்லூரியின் சஷிக துல்ஷான் வெறும் 21 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை பதம் பார்த்ததுடன், நவீன் சஹித் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது கல்லூரியினை இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகளில் ஒன்றாக மாற்றியிருந்தார்.

இப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் புனித செர்வதியஸ் கல்லூரி அணி ஒகஸ்ட் 30ஆ் திகதி இடம்பெறவுள்ள சம்பியன் அணியை தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டியில் கண்டி, புனித அந்தோனியார் கல்லூரியுடன் மோதவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

புனித செர்வதியஸ் கல்லூரி 206 (49.3) கேசார நுவன்த 70, சஷிக துல்ஷான் 51, ஜனித் ஜயரத்ன 23/3, வர்ஷ அனந்த 23/2, ஜயோத் கல்தெர 33/2

நாலந்த கல்லூரி – 195 (45.3) சஷித குணத்திலக்க 66*, ருசார பாணுக்க 32, சஷிக துல்ஷான் 21/4, நவீன் சஹீத்  31/3

போட்டி முடிவுபுனித செர்வதியஸ் கல்லூரி அணி 11 ஓட்டங்களால் வெற்றி