உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஆரம்பம்

169

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்ட இலங்கையின் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளை இம்மாத இறுதி வாரத்தில் ஆரம்பிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபையின் போட்டிகள் ஏற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகள், சுகாதார அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்றுமுன்தினம் (06) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பிறகு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

>> இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட் தடுப்பூசி?

இதன்படி, முதல்தர கழகங்களுக்கிடையிலான 23 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கடந்த வருடம்க்டோபர் மாதம் 07ஆம் திகதி நிறைவுக்கு வந்தன. 

எனினும், நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் தலைதூக்கியதை அடுத்து குறித்த தொடரின் அரையிறுதிப் போட்டிகளும், இறுதிப் போட்டியும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், குறித்த தொடரில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை என்பன இம்மாதம் 26ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இதன் முதல் அரையிறுதிப் போட்டியில் எஸ்.எஸ்.சி மற்றும் பதுரெலிய விளையாட்டுக் கழகம் என்பன மோதவுள்ளதுடன், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் லங்கன் கிரிக்கெட் கழகம் ஆகியன பலப்பரீட்சை நடத்தவுள்ளன

இதனையடுத்து அரசாங்கத்தின் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி 2020/2021 பருவகாலத்துக்கான முதல்தர கழகங்களுக்கிடையிலான T20 தொடர் மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், முதல்தர கழகங்களுக்கிடையிலான ஒருநாள் தொடர் மார்ச் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளது.

>> Video – Sri Lanka Cricket இன் வளர்ச்சிக்காக கைகோர்க்கும் முன்னாள் வீரர்கள்..!

இந்த தொடர்களுக்கான போட்டி அட்டவணை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், குறித்த தொடரில் பங்குபற்றுகின்ற ஒவ்வொரு கழகங்களும் தலா இரண்டு வெளிநாட்டு வீரர்களை இணைத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, 2021 பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 2020/2021 பருவகாலத்துக்கான முதல்தர கழகங்களுக்கிடையிலான T20 தொடரில் பங்குபற்றவுள்ள அனைத்து கிரிக்கெட் கழகங்களுக்கும் தமது பெயர் மற்றும் வீரர்களின் விபரங்களை பதிவுசெய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<