இரண்டு இளம் அறிமுக வீரர்களுடன் முக்கோண ஒருநாள் தொடருக்கான அயர்லாந்து குழாம் அறிவிப்பு

174
radionz.co.nz

முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அயர்லாந்து அணியின் குழாம் நேற்று (29) அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழுத் தலைவர் அண்ட்ரூ வைட்டினால் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி இரண்டு இளம் வீரர்களுக்கு ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்படுகின்ற உலகக் கிண்ண தொடர் ஆரம்பமாகுவதற்கு இன்றுடன் சரியாக ஒரு மாதகாலம் எஞ்சியுள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் அதற்கான தயார்படுத்தலுக்கான பல்வேறு போட்டிகளில் ஈடுபட்டு ஆடி வருகின்றன.

தென்னாபிரிக்காவின் இரண்டு சோகமான உலகக் கிண்ணங்கள்

நீங்கள் திறமையான கிரிக்கெட் அணி …..

அந்த அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்கும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரொன்று அயர்லாந்து கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முக்கோண ஒருநாள் தொடரானது அடுத்த மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை இறுதிப் போட்டியுடன் சேர்த்து மொத்தமாக 7 ஒருநாள் சர்வதேச போட்டிகளைக் கொண்டதாக நடைபெறவுள்ளது.

இதற்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் குழாம் கடந்த 12ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பங்களாதேஷ் அணியின் குழாம் கடந்த 16ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இறுதியாக முக்கோண ஒருநாள் தொடரை ஏற்பாடு செய்துள்ள அயர்லாந்து அணி நேற்று (29) அவர்களது 14 பேர் கொண்ட குழாமினை அறிவித்திருந்தது.

அத்துடன் அயர்லாந்து அணி இங்கிலாந்து அணியுடன் ஒரு ஒருநாள் சர்வதேச போட்டியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03) விளையாடவுள்ளது. அந்த அடிப்படையில் முக்கோண ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள குழாமானது இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டிக்கான குழாமாகவும் பெயரிடப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண குழாத்திலிருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம்

இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டு ..

அதன்படி, 127 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவமுடைய 34 வயதுடைய இடதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான வில்லியம் போட்டர்பீல்ட் முக்கோண ஒருநாள் தொடருக்கான அணியின் தலைவராக தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.

அறிவிக்கப்பட்டுள்ள குழாமின் அடிப்படையில் அயர்லாந்து இளையோர் அணி மற்றும் அயர்லாந்துஅணிகளில் விளையாடியுள்ள இரண்டு வீரர்களுக்கு கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 22 வயதான விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் லோர்கன் டுக்கர் மற்றும் 19 வயதுடைய இளம் வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரரான ஜொஸ் லிட்டில் ஆகிய வீரர்களுக்கு இவ்வாறு முதல் தடவை ஒருநாள் சர்வதேச குழாமில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  

மருத்துவ பிரச்சினை காரணமாக இறுதியாக நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணியுடனான தொடரின் போது தவறவிடப்பட்டிருந்த நம்பிக்கை விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான கெரி வில்சன் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். 99 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர் நடைபெறவுள்ள தொடரில் 100ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இறுதியாக 2017ஆம் ஆண்டு மே மாதம் ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் தொம்ப்ஸன் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒருநாள் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் இளையோர் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் ………….

வேகப் பந்துவீச்சாளரான பீட்டர் சேஸ், ஆப்கான் அணியுடனான தொடரில் ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்ற சுழற் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் கெமரூன்டௌவ் மற்றும் ஆப்கான் அணியுடனான தொடரில் விளையாடிய இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட சகலதுறை வீரான சிமி சிங் ஆகியோர் முக்கோண ஒருநாள் தொடரில் தவறவிடப்பட்டுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் இரண்டு விக்கெட் காப்பாளர்கள் உள்ளடங்களாக ஐந்து துடுப்பாட்ட வீரர்கள், இரண்டு முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளடங்களாக ஆறு பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று சகலதுறை வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.

அயர்லாந்து அணி குழாம்

வில்லியம் போட்டர்பீல்ட் (அணித்தலைவர்), அண்ட்ரூ பல்ப்ரைன், கிரோஜ் டொக்ரெல், ஜொஸ் லிட்டில், அண்ட்ரூ மெக்பிரைன், பெரி மெக்கார்த்தி, ஜேம்ஸ் மெக்கலம், டிம் முர்டெக், கெவின் பிரைன், பெய்ட் ரேங்கின், போல் ஸ்டேர்லிங், ஸ்டுவர்ட் தொம்ப்ஸன், லோர்கன் டுக்கர், கெரி வில்சன்  

முக்கோண ஒருநாள் தொடர் அட்டவணை

  • மே 05 – அயர்லாந்து எதிர் மேற்கிந்திய தீவுகள்
  • மே 07 – பங்களாதேஷ் எதிர் மேற்கிந்திய தீவுகள்
  • மே 09 – அயர்லாந்து எதிர் பங்களாதேஷ்
  • மே 11 – அயர்லாந்து எதிர் மேற்கிந்திய தீவுகள்
  • மே 13 – மேற்கிந்திய தீவுகள் எதிர் பங்களாதேஷ்
  • மே 15 – அயர்லாந்து எதிர் பங்களாதேஷ்
  • மே 17 – இறுதிப் போட்டி

அனைத்து போட்டிகளும் டுப்லின் மலாஹிடை நகரில் அமைந்துள்ள வில்லேஜ்மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<