மலையக நீலச் சமரில் திரித்துவக் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

164

திரித்துவக் கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கல்லூரிகளுக்கு இடையிலான 101ஆவது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று (17) மழை குறுக்கிட்டமையால் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது. எனினும் முதலாம் இன்னிங்சில் வெற்றி பெற்றதன் மூலம் திரித்துவக் கல்லூரி கிண்ணத்தை கைப்பற்றிக்கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி திரித்துவக் கல்லூரியின் தலைவர் ஹசித போயகொட புனித அந்தோனியார் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். ஆரம்பம் முதலே திரித்துவக் கல்லூரி பந்துவீச்சாளர்கள் எதிரணிக்கு கடுமையான அழுத்தத்தை கொடுத்து வந்தனர். இலங்கை கனிஷ்ட அணி வீரரான திசரு தில்ஷான் முதலாவது ஓவேரிலேயே விக்கெட் எடுத்து அசத்தினார். அந்தோனியார் கல்லூரியின் சுநேர ஜயசிங்க முதல் ஓவேரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.

4ஆவது ஓவரில் திரித்துவக் கல்லூரியின் உபதலைவரான ட்ரெவோன் பர்ஸிவேல் டியோன் ஸ்டோடரை ஆட்டமிழக்க செய்ய, அந்தோனியார் கல்லூரியின் அடுத்த இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அந்தோனியார் கல்லூரி ஒரு கட்டத்தில் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் காணப்பட்டது.

வெற்றி தோல்வியின்றி முடிவுற்ற பிரபல பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் சமர்

மொகமட் அப்சர் மற்றும் நவோதய விஜேகுமார ஆகியோர் 55 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அந்தோனியார் கல்லூரி இன்னிங்சை வலுப்படுத்தினாலும் ருவின் பீரிஸ் இரண்டு வீரர்களையும் ஒரே ஓவரில் ஆட்டம் இழக்கச் செய்து திரித்துவக் கல்லூரி ரசிகர்களுக்கு விருந்தளித்தார். தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்கு முன்னர் அந்தோனியார் கல்லூரியின் தலைவரான ஜனிது ஹிம்ஸர ஆட்டமிழக்க, அந்தோனியார் கல்லூரி மீண்டும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டது.

திசரு டில்ஷான் இடைவேளைக்குப் பின்னர் மிகுதி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்ற, புனித அந்தோனியார் கல்லூரி 115 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

திரித்துவக் கல்லூரி திசரு டில்ஷான் 4 விக்கெட்டுகளையும் ருவின் பீரிஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நவோதய விஜேகுமார புனித அந்தோனியார் கல்லூரி சார்பாக அதிகபட்சமாக 32 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாட களமிறங்கிய திரித்துவக் கல்லூரியின் முதல் இரண்டு விக்கெட்டுகளும் 2 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது. நவோதய விஜேகுமார மற்றும் சதீஷ் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி புனித அந்தோனியார் கல்லூரிக்கு நம்பிக்கை அளித்தனர். எனினும் இலங்கை கனிஷ்ட அணியின் நட்சத்திர வீரரான ஹசித போயகொட அரைச் சதம் கடந்து திரித்துவக் கல்லூரிக்கு வலுச்சேர்த்தார். கல்ஹார செனவிரத்ன ஹசித போயகொடவை 72 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்து 93 ஓட்ட இணைப்பாட்டத்தை துண்டித்தார்.

நிம்னக ஜயதிலக்க, அபிஷேக் ஆனந்தகுமாரை ஓட்டம் எதுவும் பெற முன்னர் ஆட்டமிழக்க செய்தார். தொடர்ந்து 86 பந்துகளில் 37 ஓட்டங்கள் பெற்ற ஜெப் வீரசிங்கவை ஆட்டமிழக்க செய்தார். முதல் நாள் ஆட்டம் முடிவடைய முன்னர் திரித்துவக் கல்லூரி புனித அந்தோனியார் கல்லூரியின் ஓட்ட எண்ணிக்கையை கடந்தது. முதல் நாள் ஆட்டம் முடிவடையும் போது திரித்துவக் கல்லூரி 150 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து காணப்பட்டது.

முதல் நாள் இரவில் பெய்த மழையின் காரணமாக, போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் சற்று தாமதமாகி ஆரம்பமானது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய திரித்துவக் கல்லூரி, இரண்டாம் நாளில் சற்று வேகமாக ஓட்டங்களைக் குவித்தது. முதல் நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்த அஷான் லொகுஹெட்டிய 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். நிம்னக ஜயதிலக மேலும் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி திரித்துவக் கல்லூரிக்கு அழுத்தம் கொடுத்தார். இறுதியில் திரித்துவக் கல்லூரி 196 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஐந்தாவது தடவையாகவும் மஸ்டாங் கிண்ணத்தை தம்வசமாக்கிய தோமியர் கல்லூரி

81 ஓட்டங்கள் பின்னிலையில் புனித அந்தோனியார் கல்லூரி இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்தது. எனினும் மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. ஆட்டம் நிறுத்தப்படும்போது புனித அந்தோனியார் கல்லூரி 42 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை இழந்து காணப்பட்டது.

மழையின் காரணமாக போட்டியின் இரண்டாம் நாளில் அதிக நேரம் கைவிடப்பட்டது. போட்டி 3 மணியளவில் மறுபடியும் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்படும் போழுது புனித அந்தோனியார் கல்லூரி 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து காணப்பட்டது.

இதனால் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது. எனினும் போட்டியின் முதல் இன்னிங்சில் திரித்துவக் கல்லூரி வெற்றிபெற்றதன் காரணமாக, கிண்ணம் திரித்துவக் கல்லூரிக்கு கையளிக்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 115 (37.2) – நவோதய விஜேகுமார 32, மொகமட் அப்சர் 29, திசரு டில்ஷான் 4/30, ருவின் பீரிஸ் 3/31,

திரித்துவக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 196 (53.3) – ஹசித போயகொட 72, ஜெப் வீரசிங்க 37, அஷான் லொகுஹெட்டிய 35, நிம்னக ஜயதிலக்க 4/53, நவோத் விஜேகுமார 2/35

புனித அந்தோனியார் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 62/2 (20) – டியோன் ஸ்டோடர் 27*, மொகமட் அப்சர் 22

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.

விருதுகள்

  • ஆட்ட நாயகன் – ஹசித போயகொட (திரித்துவக் கல்லூரி)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – ஹசித போயகொட (திரித்துவக் கல்லூரி)
  • சிறந்த பந்துவீச்சாளர் – திசரு டில்ஷான் (திரித்துவக் கல்லூரி)
  • சிறந்த களத்தடுப்பாளர் – ஜனிது ஹிம்ஸர