ஆறு விக்கெட்டுக்களை சாய்த்த யொஹான் டி சில்வா: சமநிலையில் நிறைவுற்ற போட்டிகள்

569
slpaac Tier B Round Up

இலங்கை பிரிமியர் லீகில் B மட்ட கழக அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் இன்று நிறைவுற்றுள்ளதுடன், அப்போட்டிகள் இரண்டும் சமநிலையில் முடிவடைந்துள்ளன.

கயானின் அதிரடிப் பந்து வீச்சினால் பாணதுறை அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

களுத்துறை நகர கழகம் எதிர் இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம்

ஹொரன மைதானத்தில் ஆரம்பாகியிருந்த இப்போட்டியின் இறுதி நாளில் மைதான ஈரலிப்பு காரணமாக ஆட்டம் சற்று தாமதமாகவே ஆரம்பித்தது. இன்றைய நாளில் 4 விக்கெட்டுக்களை இழந்து 78 ஓட்டங்களுடன் போட்டியை ஆரம்பித்த இலங்கை விமானப்படை அணி மத்திய வரிசை வீரரான ரொஸ்கோ தட்டில் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அரைச்சதத்துடன் (50) சகல விக்கெட்டுக்களையும் இழந்து 148 ஓட்டங்களை மாத்திரம் குவித்துக்கொண்டது. ஏனைய வீரர்களின் மோசமான துடுப்பாட்டம் காரணமாக முதல் இன்னிங்சுக்காக குறைவான ஓட்டங்களை பெற்றுக்கொள்ள நேர்ந்தது.

பந்து வீச்சில் அபாரத்தினை வெளிப்படுத்தியிருந்த யொஹான் டி சில்வா (ரஷ்மிக்க) களுத்துறை நகர கழகத்திற்காக ஆறு விக்கெட்டுக்களை வெறும் 38 ஓட்டங்களுக்கு சாய்த்திருந்தார்.

பின்னர், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் இப்போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்ததாக போட்டி மத்தியஸ்தர்களால் அறிவிக்கப்பட்டது. இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது. போட்டியின் முடிவு நேரம் வரை தமது இரண்டாவது இன்னிங்சினை ஆடியிருந்த களுத்துறை நகர கழகம் ஒரு விக்கெட்டினை பறிகொடுத்து 4 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டி சுருக்கம்

களுத்துறை நகர கழகம் (முதல் இன்னிங்ஸ்): 147 (44.1) – சுலான் ஜயவர்தன 30, மங்கல குமார 24, அச்சிர எரங்க 56/4, புத்திக்க சந்தருவன் 20/3

இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்): 148 (41) – ரொஸ்கோ தட்டில் 50*, யொஹான் டி சில்வா 38/6

களுத்துறை நகர கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 4/1 (3.5)

போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது

இப்போட்டியின் மூலம் அணிகள் பெற்றுக்கொண்ட புள்ளிகள்

இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் – 10.39

களுத்துறை நகர கழகம் – 2.24


இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

போட்டியின் இறுதி நாளான இன்று தமது முதல் இன்னிங்சினை 143 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்தவாறு தொடர்ந்த இலங்கை கடற்படை அணியில், நேற்று சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் நின்றிருந்த புத்திக்க ஹஸரங்க இன்று 4 ஓட்டங்களை மாத்திரம் குவித்து 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றார். பின்னர் நடுவரிசை வீரரான குசல் எதுசூரியவின் 47 ஓட்டங்களுடன் கடற்படை தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 232 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சில், துறைமுக அதிகாரசபை அணியின் சாணக்க கோமசாரு மொத்தமாக 5 விக்கெட்டுக்களையும், சமிகர எதிரிசிங்க 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பின்னர், தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த இலங்கை துறைமுக அதிகாரசபை, சுதாரக்க தக்ஷின மற்றும் இஷான் அபேசேகர ஆகியோரின் சுழலில் சிக்கி 148 ஓட்டங்களை மாத்திரம் குவித்தது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக யொஹான் டி சில்வா 45 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு, பந்து வீச்சில் முன்னர் சிறப்பாக செயற்பட்டிருந்த சுதாரக்க தக்ஷின, இஷான் அபேசேகர ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்களை பகிர்ந்தனர்.

பின்னர், துறைமுக அணியின் இரண்டாவது இன்னிங்சின் காரணமாக வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட177 ஒட்டங்களை பெற பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த இலங்கை கடற்படை 3 விக்கெட்டுக்களை இழந்து 33 ஓட்டங்களை பெற்றிருந்த போது போட்டி நிறைவிற்கு வந்தது. இதனால் இப்போட்டி சமநிலை அடைந்தது. இந்த இன்னிங்சில் பறிபோன மூன்று விக்கெட்டுக்களையும் வேகப்பந்து வீச்சாளரான சமிந்த பண்டார கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகார சபை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 260 (93.2) – யொஹான் டி சில்வா 96, ரனேஷ் பெரேரா 36, இஷான் அபேசேகர 58/3, தினுஷ்க மாலன் 38/2

இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்): 232 (77.4) – புத்திக்க ஹஸரங்க 61, மதுர மதுசங்க 56, குசல் எதுசூரிய 47, சாணக்க கோமசாரு 59/5, சமிகர எதிரிசிங்க 62/4

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 148 (57) – யொஹான் டி சில்வா 45, அனுக் டி அல்விஸ் 26, சுதாரக்க தக்ஷின 43/4, இஷான் அபேசேகர 47/4

இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 33/3 (5) – அமித் எரன்த 22, சமிந்த பண்டார 19/3

போட்டியின் முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது

போட்டியின் மூலம் அணிகள் பெற்ற புள்ளிகள்

இலங்கை துறைமுக அதிகாரசபை விளையாட்டு கழகம் – 11.99

இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் – 4.33