குளோபல் டி-20 தொடரில் நிலுவை சம்பளத்துக்காக வீரர்கள் போராட்டம்

1029
Twitter/@GT20Canada

சம்பள நிலுவை காரணமாக கனடாவில் தற்பொழுது நடைபெற்று வருகின்ற குளோபல் டி-20 தொடரில் களமிறங்க வீரர்கள் மறுத்தது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. 

கனடா கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குளோபல் டி-20 தொடர் கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கு தொடருக்கு முன் 15 சதவீதமும், முதல் சுற்று போட்டிகள் முடிந்த பிறகு 75 சதவீதமும் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குண்டுப்பொதி பிரச்சினை காணரமாக தாமதமாகிய கிரிக்கெட் போட்டி

குண்டுப்பொதி ஒன்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதனை அடுத்து, கனடாவில்…

ஆனால் பெரும்பாலான வீரர்களுக்கு குறித்த விதிமுறைகளுக்கு அமைய இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வெளிவந்தது. இதனால் நேற்று முன்தினம் (07) யுவராஜ் சிங்கின் டொரன்டோ நேஷனல் மற்றும் ஜோர்ஜ் பெய்லியின் மொட்ரிடல் டைகர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த போட்டியில் களமிறங்குவதற்கு யுவராஜ் சிங் உள்ளிட்ட வீரர்கள் மறுப்பு தெரிவித்து ஹோட்டலை விட்டு வெளிவராமல் எதிர்ப்பினை தெரிவித்தனர்

இதனையடுத்து அணி உரிமையாளர்கள், வீரர்கள் இடையே இடம்பெற்ற சுமூகமான பேச்சுவார்த்தையினை அடுத்து வீரர்கள் மைதானம் வந்து போட்டியில் கலந்துகொண்டனர். இதனால் போட்டி உரிய நேரத்தை விட இரண்டரை மணித்தியாலங்கள் தாமதமாகி ஆரம்பமாகியது

எனினும், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் டொரன்டோ அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால், டொரன்டோ நேஷனல் அணியின் தலைவர் யுவராஜ் சிங் காயம் காரணமாக இந்தப் போட்டியில் களமிறங்கவில்லை என்றாலும், டொரன்டோ நேஷனல் அணி (189/5), மொன்ட்ரியல் அணியை (154/10) 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஓப் சுற்றுக்குத் தகுதிபெற்றது

ஏற்கனவே கடந்த செவ்வாய்க்கிழமை இன்னும் 2 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் இதே குற்றச்சாட்டை முன்வைத்து விளையாட மறுப்பு தெரிவித்திருந்தனர். எனினும், அந்த தருணத்தில் சில வீரர்களுக்கு மாத்திரம் 45 சதவீத சம்பளத்தை வழங்குவதற்கு அவ்விரு அணிகளின் நிர்வாகமும் நடவடிக்கை எடுத்திருந்தன

அதேபோல, கடந்த வருடம் நடைபெற்ற போட்டியிலும் சில வீரர்களின் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.  

இது இவ்வாறிருக்க, குண்டுப்பொதி ஒன்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதனை அடுத்து, கடந்த மாதம் 26 ஆம் திகதி வின்னிபேக் ஹவ்க்ஸ் மற்றும் மொன்ட்ரியல் டைகர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த லீக் போட்டி 90 நிமிடங்கள் வரையில் தாமதமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<