2021இல் எளிமையான ஒலிம்பிக் விளையாட்டு விழா

164

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா வழக்கத்தை விட ஆடம்பரம் இல்லாமல் எளிமையான முறையில் அடுத்தாண்டு நடைபெறும் என ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொஷிரோ முட்டோ தெரிவித்துள்ளார்.  

ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை மாதத்தில் என அறிவிப்பு

எதிர்வரும் ஜுலை மாதம் ஆரம்பமாகவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அடுத்தாண்டு வரை ஒத்திவைக்கப்பட்டது.   

இந்த நிலையில், ஒலிம்பிக் விளையாட்டு விழாவை ஒத்திவைத்ததால் ஏற்பட்ட செலவை பிரதியீடு செய்வதற்காக சர்வதேச ஒலிம்பிக் குழு ஜப்பானுக்கு 800 மில்லியன் ரூபா நிதி உதவி அளிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் செலவைக் குறைக்கும் நோக்கில் கடந்த சில தினங்களுக்கு முன் விசேட பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட்டது.   

சர்வதேச ஒலிம்பிக் குழுவும், டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவும் நடத்திய இந்தப் பேச்சுவார்த்தையின் பிறகு ஒலிம்பிக் விளையாட்டு விழாவை எளிமையான முறையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொஷிரோ முட்டோ, ழக்கமான முறையில், பெரும் பொருட்செலவில் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெற வாய்ப்பிருக்காது” என தெரிவித்தார்.

மேலும், நடக்கவிருந்த ஒலிம்பிக் விளையாட்டு விழா ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்யும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது” என அவர் கூறினார்.   

அத்துடன், வீரர்கள், பார்வையாளர்கள் நீங்கலாக ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் திட்டமிட்டு வருவதாக அவர் கூறினார்

இதன்படி, ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள், போட்டி அமைப்பாளர்கள் என பலர் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.  

கொரோனா தொடர்ந்தால் டோக்கியோ ஒலிம்பிக் இரத்தாகும்

தனி மனித இடைவெளியை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவை சர்வதேச ஒலிம்பிக் குழு எடுக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, ஒலிம்பிக் விளையாட்டு விழாவை முற்றிலும் இரத்து செய்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக வெளியாகிய செய்தியினை டோக்கியோ ஒலிம்பிக் குழுத் தலைவர் யோஷிரோ மோரி மறுத்துள்ளார்.   

எனினும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் ஜப்பான் வெற்றி கொள்ள தவறினால் ஒலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்துவது சிரமமானது என ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<