இலங்கை ஒலிம்பிக் குழு இன்று டோக்கியோ புறப்படுகிறது

Tokyo Olympic - 2020

187

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியின் முதல் குழு இன்று டோக்கியோ புறப்படுகிறது. 

32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜுலை 23ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. 

இம்முறை ஒலிம்பிக் விழா பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்பட உள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் அந்நாட்டில் மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் போராட்டங்களை தவிர்க்கும் வகையில் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் இலங்கை கொடியை ஏந்திச் செல்லவுள்ள சாமர நுவன், மில்கா

இதனிடையே, ஒலிம்பிக்கில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் அணிகள் ஜப்பான் சென்ற வண்ணம் உள்ளதுடன், ஒலிம்பிக் கிராமமும் நேற்று உத்தியோகப்பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. 

இதனிடையே, இலங்கை தரப்பில் 9 வீர வீராங்கனைளும், 17 அதிகாரிகளும் இம்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளனர். இதன்படி, இலங்கை குழுவினர் இன்று முதல் டோக்கியோ புறப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்பதற்கு தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் அதிகாரிகள் நேற்றைய தினம் டோக்கியோ புறப்பட்டுச் சென்றதாக தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதில் இலங்கை ஒலிம்பிக் குழுவின் தலைமை அதிகாரி காமினி ஜயசிங்க மற்றும் நிருவாக உத்தியோகத்தர் ஹன்சிகா தர்மவர்தன ஆகிய இருவரும் டோக்கியோவை சென்றடைந்துள்ளார்கள். 

இலங்கை ஒலிம்பிக் அணிக்கு கொவிட் தடுப்பூசி டிஜிட்டல் அட்டை

இதன்படி, இலங்கையின் முதல் குழு இன்று டோக்கியோவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்கள். இதில் பெட்மிண்டன் வீரர் நிலூக கருணாரத்ன, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை டெஹானி எகொடவெல மற்றும் அவரது முகாமையாளர், இலங்கை அணியின் கொவிட் வைத்தியர் உள்ளிட்ட ஐவர் ஜப்பானை சென்றடையவுள்ளார்கள். 

இதுஇவ்வாறிருக்க, ஒலிம்பிக்கில் பங்குபற்றவுள்ள பல இலங்கை வீரர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்கள் தற்போது வெளிநாடுகளில் இருப்பதால் அவர்கள் அங்கிருந்து நேரடியாக ஜப்பானை சென்றடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெட்மிண்டன் வீரர் நிலூக கருணாரத்னவின் உதவியாளர் தினுக கருணாரத்ன லண்டனில் இருந்தும், நீச்சல் வீராங்கனை அனிக்கா கபூர் பாங்கொக்கிலிருந்தும் டோக்கியோவை சென்றடையவுள்ளனர். 

இதனிடையே, தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், அதன் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா ஆகிய இருவரும் 19ஆம் திகதி டோக்கியோவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்கள்.

இதே தினத்தன்று ஜுடோ வீரர் சாமர நுவன் தர்மவர்தன கொசோவா தீவுகளில் இருந்து ஜப்பானை சென்றடையவுள்ளார். 

இதனையடுத்து நீச்சல் வீரர் மெதிவ் அபேசிங்க அமெரிக்காவில் இருந்து 20ஆம் திகதியும், யுபுன் அபேகோன் இத்தாலியிருந்து 23ஆம் திகதியும், நிமாலி லியனஆராச்சி இலங்கையிலிருந்து 23ஆம் திகதியும் ஜப்பானை சென்றடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேநேரம், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கெஹானி தற்போது ஜப்பானில் இருப்பதால் அவர் நேரடியாக ஒலிம்பிக் கிராமத்தை வந்தடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இம்முறை ஒலிம்பிக்கில் முதல் இலங்கையராக தகுதிபெற்ற சுவீடனைச் சேர்ந்த இலங்கை வம்சாவளி குதிரைச் சவாரி வீராங்களையான மெதில்டா கார்ல்சன், தனது ஐந்து பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களுடன் இம்மாதம் 25ஆம் திகதி ஜப்பானை வந்தடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுஇவ்வாறிருக்க, ஜப்பான் நாட்டு அரசின் அழைப்பின் பேரில் ஆரம்ப விழா நிகழ்ச்சியில் இலங்கை சார்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளதுடன், எதிர்வரும் 21ஆம் திகதி அவர் டோக்கியோவை சென்றடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<