டெஸ்ட் துடுப்பாட்ட வரிசையில் ரோஹித் சர்மாவுக்கு பாரிய முன்னேற்றம்

81
ICC

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் சபை புதிய டெஸ்ட் தரவரிசையை வெளியிட்டுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என வைட்வொஷ் செய்தது. இந்த தொடரில், இந்திய வீரர்கள் பலர் சிறந்த முறையில் பிரகாசித்திருந்ததுடன், அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை குவித்திருந்தார்.

வைட்வொஷ் வெற்றியுடன் இந்தியா டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முன்னிலையில்

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட்…

இந்த தொடரில் கன்னி இரட்டைச் சதம் அடங்கலாக 529 ஓட்டங்களை குவித்திருந்த ரோஹித் சர்மா, டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 34 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை பிடித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பமாகும் போது, இவர் 44வது இடத்தில் இருந்தார்.

இவருக்கு அடுத்தப்படியாக  இந்த டெஸ்ட் தொடரில் ஒரு சதம் அடங்கலாக 216 ஓட்டங்களை குவித்திருந்த அஜின்கியா ரஹானே 4 இடங்கள் முன்னேறி துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 5வது இடத்தை பிடித்துள்ளதுடன், செட்டேஸ்வர் புஜாரா தொடர்ந்தும் 4வது இடத்தை தக்கவைத்துள்ளார். அதேநேரம், இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி 2வது இடத்தை தக்கவைத்துள்ளார்.

துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஹென்ரி நிக்கோல்ஸ், ஜோ ரூட், டொம் லேத்தம் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் ஒவ்வொரு இடங்கள் பின்னடைவை சந்தித்து முறையே 6, 7, 8 மற்றும் 9ம் இடங்களை பிடித்துள்ளனர்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையை பொருத்தவரை, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் வீழ்த்தியிருந்த இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 10வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், சகலதுறை வீரர்கள் பட்டியலில் இவர், 5வது இடத்திலிருந்து 6வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார். இதேநேரம், 6வது இடத்திலிருந்த வெர்னொன் பில்லெண்டர் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

BCCI இன் புதிய தலைவராக சௌரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சௌரவ் கங்குலி, இந்திய…

இதேவேளை, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத ஜஸ்ப்ரிட் பும்ரா பந்துவீச்சாளர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திலிருந்து 4வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், சகலதுறை வீரர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்தும் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளார்.

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணியின் வீரர்கள் பிரகாசிக்க தவறியதன் காரணமாக தரவரிசையில் பேசப்படும் அளவிற்கு முன்னேற்றங்களை அடையவில்லை.

ஐசிசி வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசையின் படி, துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித், பந்துவீச்சாளர்கள் வரிசையில் பெட் கம்மின்ஸ் மற்றும் சகலதுறை வீரர்கள் வரிசையில் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் முதலாவது இடத்தை தக்கவைத்துள்ளனர்.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<