DFCC வங்கியின் அனுசரணையுடன், ப்லாக்ஹெம் விஜயவர்தன நினைவுச்சின்ன கேடயத்திற்காக நேற்று ஆரம்பித்திருந்த ‘சகோதரர்கள் சமர்’ என்னும் இசிபதன மற்றும் தர்ஸ்டன் கல்லூரி அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட 54ஆவது மாபெரும் வருடாந்த கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

சகோதரர்கள் சமரில் சம பலத்துடன் உள்ள தர்ஸ்டன், இசிபதன அணிகள்

நேற்று SSC மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியின் இரண்டாவது மற்றும் இறுதி நாளில், தமது முதல் இன்னிங்சினை 78 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்தவாறு இசிபதன கல்லூரி தொடர்ந்தது. களத்தில் அணித் தலைவர் சஞ்சுல அபயவிக்ரமவுடன் நின்றிருந்த பத்தும் நிசங்க இன்றைய நாளில் வீசப்பட்ட முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

சரண நாணயக்காரவின் வேகத்தில் வீழ்ந்த நிசங்க, இன்றைய நாளில் ஓட்டக்குவிப்பு எதனையும் செய்யாமல் நேற்றுப் பெற்ற 17 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.

இசிபதன கல்லூரியின் ஐந்தாவது விக்கெட்டினைத் தொடர்ந்து, தர்ஸ்டன் கல்லூரியின் இடது கை சுழல் வீரர் நவீன் குணவர்தனவின் பந்து வீச்சுக்கு திணறிய இசிபதன கல்லூரி அணி, குறுகிய ஓட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆரம்பித்தது. எனவே, அவ்வணி தமது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் 44.1 ஓவர்களில் இழந்து 144 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இசிபதனவின் பின்வரிசை வீரர்கள் அனைவரும் மிகவும் குறுகிய ஓட்டங்களுக்குள் வீழ்ந்திருந்தனர். அவ்வணி சார்பாக அணித் தலைவர் சஞ்சுல அபயவிக்ரம மாத்திரம் அதிகபட்சமாக 27 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டார்.

[rev_slider dfcc728]

.

நவீன் குணவர்தன வெறும் 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது சிறப்புமிக்க சுழலின் மகத்துவத்தை ஒருமுறை நிரூபித்தார். மறுமுனையில் சிறப்பாக செயற்பட்டிருந்த சரண நாணயக்கார 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

பின்னர், 87 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த தர்ஸ்டன் கல்லூரி அணி, மோசமான ஆரம்பத்தினை தந்திருந்தாலும் கடந்த இன்னிங்ஸ் போன்று இந்த இன்னிங்சிலும் அரைச் சதம் கடந்த சரண நாணயக்காரவின் உதவியுடன் 34 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் தமது இரண்டாவது இன்னிங்சினை நிறுத்திக்கொண்டது.

இதில், ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரேனும் 15 ஓட்டங்களினை தாண்டாத நிலையில் சரண நாணயக்கார மாத்திரம் 55 ஓட்டங்களினை 8 பவுண்டரிகளுடன் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில், இந்த இன்னிங்சில் நெரன்ஞன் வன்னியாராச்சி மற்றும் அயான சிறிவர்தன ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 219 ஓட்டங்களினைப் பெறுவதற்காக தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த இசிபதன கல்லூரி அணி, போட்டியின் ஆரம்பம் முதல் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய காரணத்தினால் போட்டியின் ஆதிக்கம் மெதுவாக தர்ஸ்டன் கல்லூரியின் பக்கம் மாறியது.

எனினும், தொடர்ந்தும் பந்துகளை சிறப்பாக தடுத்தாடி போட்டி முடிவு நேரம் வரை துடுப்பாட்ட வீரர்கள் தமது ஆட்டத்தைக் கொண்டு வந்த நிலையில் போதிய வெளிச்சம் இன்றி போட்டி நிறுத்தப்பட்டது. எனினும், தொடர்ந்தும் அதே நிலை நீடித்த காரணத்தால் வரலாற்று சிறப்பு மிக்க இச்சமர்  சமநிலை அடைந்தது.

போட்டியின் ஆட்ட நேர முடிவின்போது, இசிபதன தமது இரண்டாவது இன்னிங்சிற்காக 6 விக்கெட்டுக்களை இழந்து 68 ஓட்டங்களினைப் பெற்றிருந்ததுடன், மீண்டும் பந்து வீச்சில் அச்சுறுத்தல் காட்டியிருந்த நவீன் குணவர்தன இன்று பறிபோன விக்கெட்டுகளில் மூன்றினை தன்வசப்படுத்தியிருந்ததோடு, துஷால் மதுசங்கவும் இரண்டு  விக்கெட்டுகளை தர்ஸ்டன் கல்லூரி சார்பாக சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

தர்ஸ்டன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 228 (56.2) சரண நாயக்கார 58, கசுன் அபயரத்ன 43, நவோத் சமரக்கோன் 34, நிமேஷ் லக்ஷான் 34, நிப்புன் லக்ஷான் 26, நெரன்ஞன் வன்னியாராச்சி 3/66, லஹிரு தில்ஷான் 3/53, ஹெஷான் பெர்னாந்து 2/19

இசிபதன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 141 (44.1) சஞ்சுல அபயவிக்ரம 27, கலன பெரேரா 20, பத்தும் நிசங்க 17, நவீன் குணவர்த்தன 33/5

தர்ஸ்டன் கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்) – 131/7 dec (34) சரண நாணயக்கார 55, நவோத் சமரக்கோன் 15, அயான சிறிவர்தன 29/3, நெரஞ்சன் வன்னியாராச்சி 59/3

இசிபதன கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்) – 68/6 (26) சஞ்சுல அபயவிக்ரம 13, நவீன் குணவர்த்தன 31/3, துஷால் மதுசங்க 22/2

போட்டி முடிவுபோட்டி சமநிலை அடைந்தது.

WATCH REPLAY