மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் அணியில் மூன்று மாற்றங்கள்

468
Sky Sports

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் குழாமில் இருக்கும் மூன்று வீரர்கள் உபாதைக்குள்ளாகியுள்ளதன் காரணமாக மூன்று புதிய வீரர்கள் ஒருநாள் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகின்றது.

டர்பனில் இலங்கை அணியும் குசல் பெரேராவும் பதிவு செய்த சாதனைகள்

சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான டெஸ்ட் தொடர் தற்சமயம் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை மேற்கிந்திய தீவுகள் அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றி தரவரிசையில் மூன்றாமிடத்தில் காணப்பட்ட இங்கிலாந்து அணியை ஐந்தாமிடத்திற்கு பின்தள்ளியள்ளது.

இந்நிலையில் இருதரப்பு தொடரின் அடுத்த தொடரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் புதன்கிழமை (20) ஆரம்பமாகின்றது. எனவே குறித்த ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் பங்குபற்றுவதற்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் 14 பேர் கொண்ட குழாம் கடந்த 07 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மூன்று மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆறு மாதங்களுக்கு பின்னர் ஒருநாள் அணியில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான எவின் லூவிஸ் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரின் போது இடுப்புப்பகுதியில் உபாதைக்குள்ளாகியிருந்ததன் காரணமாக ஒருநாள் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவரின் வெற்றிடத்திற்காக இங்கிலாந்து அணியுடன் நிறைவு பெற்றிருந்த டெஸ்ட் தொடரில் சர்வதேச அரங்கிற்கு அறிமுகம் பெற்றிருந்த 25 வயதுடைய இடதுகை துடுப்பாட்ட வீரரான ஜோன் கெம்ப்பெல் அடுத்ததாக ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அறிமுக வீரராக இணைக்கப்பட்டுள்ளார்.

மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் போது சகலதுறை வீரரான கிமோ போல் உபாதைக்குள்ளாகியிருந்தார். இதன் காரணமாக அவருக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவரின் வெற்றிடத்திற்கு மற்றுமொரு சகலதுறை வீரரான கார்லஸ் பரெத்வெயிட் ஒரு வருட இடைவெளியின் பின்னர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். இவர் தற்சமயம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் லாஹூர் கலண்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார். இந்நிலையிலேயே இவர் குறித்த லீக் தொடரிலிருந்து விலகி மேற்கிந்திய தீவுகள் அணியில் இணையவுள்ளார்.

மேலும் உபாதைக்குள்ளாகியுள்ள மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான ரொவ்மன் பொவலின் இடத்திற்கு 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள வேகப்பந்துவீச்சாளரான சில்டொன் கொட்ரில் 14 பேர் கொண்ட ஒருநாள் குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஐ.சி.சி இனுடைய நடைமுறையிலுள்ள ஒருநாள் அணிகளின் தரவரிசையின்படி இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மேற்கிந்திய தீவுகள்  அணி 72 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும் காணப்படுகின்றது.

தனித்துப் பேராடிய குசல் பெரேரா டெஸ்ட் தரவரிசையில் அதிரடி முன்னேற்றம்

மாற்றத்தின் பின்னரான புதிய குழாம்.

ஜெசன் ஹோல்டர் (அணித்தலைவர்), பெபியன் அல்லென், தெவேந்திர பிஷ்ஸோ, கார்லஸ் பரெத்வெயிட், டெரன் பிராவோ, ஜோன் கேம்ப்பெல், சில்டொன் கொட்ரில், கிறிஸ் கெயில், சிம்ரோன் ஹெட்மேயர், ஷாய் ஹோப், ஆஷ்லி நேர்ஸ், நிகோலஸ் பூராண், கேமர் ரோச், ஒசானே தோமஸ்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<