கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கண்டி திரித்துவக் கல்லூரிகளுக்கு இடையில் 74 ஆவது முறையாக நடைபெற்ற ப்ரெட்பி கிண்ணத்தின், முதல் சுற்றில் 39-07 என்ற புள்ளிகள் கணக்கில் ரோயல் கல்லூரி வெற்றிபெற்றது.

கொழும்பு ரோயல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் (Sports Complex) நடைபெற்ற இப்போட்டியில் ரோயல் கல்லூரி, சிங்கர் லீக் போட்டிகளின் முதலாவது சுற்றில் எந்த ஒரு போட்டியிலும் தோல்வியுறாத நிலையில் கலந்துகொண்டது. மறுமுனையில் திரித்துவக் கல்லூரி 2 போட்டிகள் தோல்வியடைந்த நிலையில், தம்மை பலம் கொண்ட அணியாக நிரூபிக்கும் நம்பிக்கையோடு களம் இறங்கியது.

ஆரம்ப சில நிமிடங்களுக்கு இரண்டு அணிகளும் சமமாக எதிரணிக்கு அழுத்தும் கொடுத்தன. பின்னர் ரோயல் கல்லூரி தனது சிறப்பான முன் வரிசை வீரர்கள் மூலம் திரித்துவக் கல்லூரிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து முன்னேறி நகர்ந்தது. இதன் மூலமாக ரோயல் கல்லூரி பெனால்டி வாய்ப்பொன்றை வென்றாலும், துலான் குணவர்தனவினால் கம்பத்தின் நடுவே பந்தை உதைக்க முடியாமல் போக 3 புள்ளிகளைப் பெறும் வாய்ப்பை தவறவிட்டது. தொடர்ந்து திரித்துவக் கல்லூரிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைக்க அதனை அகீத சகலசூரிய உதையை தவறவிட்டார்.

15 நிமிடங்களுக்கு பின்னர் ரோயல் கல்லூரியின் அற்புதமான விளையாட்டுக்கு பலன் கிடைத்தது. ரோயல் கல்லூரியின் சசித ஸியத் ட்ரை கோட்டை கடந்து ரோயல் கல்லூரிக்காக முதலாவது ட்ரையை வைத்தார். எனினும் துலான் குணவர்தனவினால் கொன்வெர்சனை பூர்த்தி செய்ய முடியவில்லை. (ரோயல் கல்லூரி 05 – 00 திரித்துவக் கல்லூரி)

திரித்துவக் கல்லூரி  மீண்டும் ஒரு முறை பெனால்டி வாய்ப்பொன்றை பெற்றபோதும், மீண்டும் அகீத சகலசூரிய தமது அணிக்கு உதையின் மூலம் புள்ளிகளை பெற்றுக்கொடுக்க தவறினார். எனினும் ரோயல் கல்லூரி தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு மீண்டும் ஒரு ட்ரை வைத்தது. இம்முறை ஜனிது டில்ஷான் ட்ரை வைத்து அசத்தினார். குணவர்தன இரண்டு வாய்ப்புகளை தவறவிட்டபோதும், இம்முறை கொன்வெர்சனை சிறப்பாக உதைத்தார். (ரோயல் கல்லூரி 12 – 00 திரித்துவக் கல்லூரி)

முதல் பாதி முடிவடைய முன்னர் ரோயல் கல்லூரி மீண்டும் ஒரு ட்ரை வைத்து தமது ரசிகர்களுக்கு விருந்தளித்தது. பிம்சர இந்துவர, திரித்துவக் கல்லூரி வீரரை கடந்து சிறப்பாக கம்பத்தின் அடியே ட்ரை வைத்தார். துலான் குணவர்தனவின் கொன்வெர்சனுடன் ரோயல் கல்லூரி  முதல் பாதியில் அசாத்திய முன்னிலையுடன் இரண்டாம் பாதிக்கு நகர்ந்தது (ரோயல் கல்லூரி 19 – 00 திரித்துவக் கல்லூரி)

முதல் பாதி: ரோயல் கல்லூரி 19 – 00 திரித்துவக் கல்லூரி

இரண்டாம் பாதியில் திரித்துவக் கல்லூரி சிறந்த போட்டியை வழங்கும் என எதிர்பார்த்தாலும், இரண்டாம் பாதி ஆரம்பித்து 2 நிமிடங்களில் ரோயல் கல்லூரி மீண்டும் ஒரு ட்ரை வைத்து திரித்துவக் கல்லூரி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. தனது பலம் மிக்க மோலின் மூலம் முன் நகர்ந்த ரோயல் கல்லூரி, உப தலைவரான மலீஷ மதுமேவன் மூலமாக ட்ரை வைத்தது. துலான் குணவர்தன கொன்வெர்சனை தவறவிட்டதால், ரோயல் கல்லூரி 24 புள்ளிகளுடன் முன்னிலையில் காணப்பட்டது.

24 புள்ளிகள் பின்னிலையில் காணப்பட்டாலும், திரித்துவக் கல்லூரி போட்டியின் கட்டுப்பாட்டை சற்று தன் பக்கம் எடுத்து. தொடர்ந்து சில கட்டங்கள் முன்னேறி ரோயல் அணிக்கு அழுத்தம் கொடுத்தாலும், ரோயல் கல்லூரி சிறப்பாக தடுத்து வந்தது. எனினும் 49 ஆவது நிமிடத்தில் விங் நிலை வீரரான விஸ்வ ரணராஜா திரித்துவக் கல்லூரி சார்பாக முதலாவது ட்ரை வைத்தார். தலைவர் ஷீக் கொன்வெர்சனை சிறப்பாக உதைத்து தமது ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார். (ரோயல் கல்லூரி 24 – 07 திரித்துவக் கல்லூரி)

எனினும் திரித்துவக் கல்லூரியின் கனவை கலைக்கும் வண்ணம் , ரோயல் கல்லூரியின் ஜனிது டில்ஷான் திரித்துவக் கல்லூரியின் தடையை தாண்டி சென்று தனது 2 ஆவது ட்ரையை வைத்தார். துலான் குணவர்தன இலகுவாக கொன்வெர்சனை பூர்த்தி செய்தார். இதன் மூலம் ரோயல் கல்லூரி தனது வெற்றியை உறுதி செய்துகொண்டது. (ரோயல் கல்லூரி 31 – 07 திரித்துவக் கல்லூரி)

ரோயல் கல்லூரி  24 புள்ளிகள் முன்னிலையில் காணப்பட்டாலும், தொடர்ந்து புள்ளிகள் பெற்று முன்னிலையை அதிகரிக்க தீவிரமாக விளையாடியது. இந்த நிலையில் திரித்துவக் கல்லூரியானது போட்டியை சற்று தளரவிட்ட நிலையில் காணப்பட்டது. இதனால் ரோயல் கல்லூரி மற்றுமொரு ட்ரை வைத்து முன்னிலையை அதிகரித்துக்கொண்டது. ஹிமந்த ஹிருஷன் இம்முறை ட்ரை கோட்டை கடந்தார். துலான் குணவர்தன கொன்வெர்சனை தவறவிட்டார். (ரோயல் கல்லூரி 36 – 07 திரித்துவக் கல்லூரி)

போட்டி நிறைவடைய சற்று முன்னர் ரோயல் கல்லூரி தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. இம்முறை பாதில் அதான் கம்பத்தின் நடுவே பந்தை உதைத்து புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். திரித்துவக் கல்லூரி இப்போட்டியில் மோசமான விளையாட்டை வெளிக்காட்டியது எனலாம்.

முழு நேரம்: ரோயல் கல்லூரி  39 – 07 திரித்துவக் கல்லூரி

சிங்கர் லீக் போட்டிகளின் முதலாவது சுற்று முடிவடைந்த நிலையில், ரோயல் கல்லூரி எந்த ஒரு போட்டியிலும் தோல்வியுறாது முன்னிலையில் உள்ளது.

இரண்டு சுற்றுக்களைக் கொண்ட ப்ரெட்பி கிண்ணத்தில், ரோயல் கல்லூரி 32 புள்ளிகளால் முன்னிலையில் காணப்படுகிறது.