பாகிஸ்தான் T20 உலகக் கிண்ண அணியில் நான்கு மாற்றங்கள்

338

T20 உலகக் கிண்ணத்திற்கான பாகிஸ்தான் குழாத்தில் மொத்தம் நான்கு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி துடுப்பாட்ட வீரர்களான பக்கார் சமான், சர்பராஸ் அஹ்மட் ஹைதர் அலி மற்றும் சொஹைப் மலிக் ஆகியோர் பாகிஸ்தானின் T20 குழாத்திற்குள் மாற்று வீரர்களாக உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.

அபு தாபி T10 லீக்கில் விளையாடவுள்ள 8 இலங்கை வீரர்கள்

இந்த வீரர்களில் பாகிஸ்தானின் T20 உலகக் கிண்ண குழாத்தின் மேலதிக வீரராக இருக்கும் பக்கார் சமான், பாகிஸ்தான் பிரதான T20 உலகக் கிண்ண குழாத்தில் உள்வாங்கப்பட்டிருந்த குஸ்தில் ஷாவினை பிரதியீடு செய்திருக்கின்றார். இந்நிலையில் குஷ்தில் ஷா மேலதிக வீரராக மாற்றப்பட்டிருக்கின்றார்.

மறுமுனையில் சர்பராஸ் அஹ்மட் மற்றும் ஹைதர் அலி ஆகியோர் T20 உலகக் கிண்ணத்திற்கான பாகிஸ்தான் குழாத்தில் அஷாம் கான் மற்றும் மொஹமட் ஹஸ்னைன் ஆகியோரினை பிரதியீடு செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வீரர்களின் பிரதியீடு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் நெஷனல் T20 (National T20) தொடரில் பாகிஸ்தானின் T20 உலகக் கிண்ணத்திற்காக தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் வெளிப்படுத்திய ஆட்டத்தினை வைத்து மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளர் முஹம்மட் வசீம் குறிப்பிட்டிருக்கின்றார்.

பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்ற நெஷனல் T20 தொடரில் விளையாடிவரும் ஹைதர் அலி 300 ஓட்டங்களுக்கு மேல் குவித்து தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறியிருக்க, சர்பராஸ் அஹ்மட் மற்றும் பக்கர் சமான் ஆகியோரும் குறித்த T20 தொடரில் திறமையினை வெளிப்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் காயத்திற்கு முகம் கொடுத்த துடுப்பாட்டவீரரான சொஹைப் மக்சூத்தும் உபாதை காரணமாக T20 உலகக் கிண்ணத்திற்கான பாகிஸ்தான் அணியில் விளையாட முடியாத நிலையில் அவரின் இடம் சிரேஷ்ட வீரரி சொஹைப் மலிக் மூலம் பிரதியீடு செய்யப்பட்டிருக்கின்றது.

ICC சிறந்த வீரர் விருதிற்கு முதல் தடவை அமெரிக்க வீரரின் பெயர்

இதேநேரம், T20 உலகக் கிண்ணத்திற்கான சுபர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்று குழு 1 இல் காணப்படுகின்ற பாகிஸ்தான் அணி, தமது முதல் போட்டியில் எதிர்வரும் 24ஆம் திகதி இந்திய அணியினை எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் T20 உலகக் கிண்ண அணி – பாபர் அசாம் (அணித்தலைவர்), சதாப் கான் (பிரதி தலைவர்), ஆசிப் அலி, பக்கார் சமான், ஹைதர் அலி, ஹரிஸ் ரவுப், இமாத் வஸிம், மொஹமட் ஹபீஸ், மொஹமட் நவாஸ், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் வஸீம், சர்பராஸ் அஹ்மட், சஹீன் சாஹ் அப்ரிடி, சொஹைப் மலிக்

மேலதிக வீரர்கள் – குஷ்தில் ஷா, சஹ்னவாஸ் தஹானி, உஸ்மான் காதிர்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<