உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தின் ஆசிய மாநாடு கொழும்பில் ஆரம்பம்

97

உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தின் ஆசிய கடல்சூழ் பிராந்தியங்களுக்கான 15ஆவது மாநாடு நேற்று (18) கொழும்பில் ஆரம்பமானது. இதன்போது ஊக்கமருந்து பாவனையைத் தடுக்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் அவுஸ்திரேலிய ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான அமைப்புக்கும், இலங்கை ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான அமைப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது.

சங்கா, மஹேல உள்ளிட்ட வீரர்களின் நிராகரிப்பு வரவேற்கத்தக்கது – அர்ஜுன ரணதுங்க

இரண்டு நாட்கள் நடைபெறும் இம்முறை மாநாட்டில் 45 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 பிரதிநிதிகளும், 29 விளையாட்டுத்துறை அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர். குறிப்பாக, உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தின் தலைவர் கிரைக் ரிடீ மற்றும் அதன் பணிப்பாளர் நாயகம் ஒலிவியர் நேகி ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், மாநாட்டின் முதல் நாளான நேற்று தடைசெயப்பட்ட ஊக்கமருந்து பாவனையைத் தடுக்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் பொருட்டு அவுஸ்திரேலிய ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான அமைப்புக்கும், இலங்கை ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான அமைப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது.

இந்த உடன்படிக்கையில் அவுஸ்திரேலிய ஊக்கமருந்து பாவனை தடுப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் டேவிட் ஷார்ப், இலங்கை ஊக்கமருந்து பாவனைத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சீவலி ஜயவிக்ரம ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இதில் இலங்கை ஊக்கமருந்து பாவனைத் தடுப்புப் பிரிவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கருத்து வெயிடுகையில்,

உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற இவ்வாறான மாநாடொன்று இலங்கையில் நடைபெறுவது இதுவே முதற்தடவையாகும். அத்துடன், ஊக்கமருந்து பாவனையை தடுப்பதற்காக முன்நின்று செயற்படுகின்ற நாடுகளுக்கு மாத்திரமே இந்த வாய்ப்பு வழங்கப்படுகின்றது. எனவே, இது இலங்கைக்கு மிகப் பெரிய கௌரவமாகும். அதுமாத்திரமின்றி, உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்துடன் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் இங்கு வந்துள்ள அனைத்து நாடுகளினதும் அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்களும், அனுபவங்களும் இந்த மாநாட்டின் ஊடாக கிடைக்கவுள்ளது.

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையினால் விளையாட்டு வீர, வீராங்கனை மட்டுமல்லாது பொதுமக்களும் எதிர்கொள்ளும் விளைவுகளைத் தடுப்பதற்கான அறிவுரைகளும், ஆலோசனைகளையும் வழங்குவதை நோக்காகக் கொண்டு இந்த உடன்டிக்கை கைச்சாத்திடப்பட்டது என தெரிவித்தார்.

இந்நிலையில், விளையாட்டுத்துறையில் ஊக்கமருந்து பாவனையைத் தடுக்கும் ஆசிய கடல்சூழ் பிராந்தியங்களைச் சேர்ந்த 29 விளையாட்டுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடும் கொழும்பு கிங்ஸ்பறி ஹோட்டலில் நேற்று (18) ஆரம்பமாகியது.

இதேநேரம், இம்முறை மாநாட்டில் ஆயுர்வேத மருந்துகள், அரிஷ்ட போன்ற பானங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத்தின் வரலாற்றுக் கதை

அத்துடன், எதிர்காலத்தில் ஊக்கமருந்து பாவனையை தடுக்கும் நோக்கில் வீர, வீராங்கனைகளுக்கு தெளிவுபடுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த இந்த மாநாட்டின் போது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து அதன் தலைவர் கிரைக் ரிடீ கருத்து வெளியிடுகையில்,

ஊக்கமருந்து பாவனையை தடுப்பதற்காக எமது அமைப்பு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்கான நிபுணத்துவம் மிக்க புலனாய்வாளர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, இந்த மாநாட்டின் பிறகு ஆசிய கடல்சூழ் பிராந்தியங்களில் ஊக்கமருந்தை தடுப்பதற்கு அதிக கவனம் செலுத்தப்படும். அதற்காக விசேட வேலைத்திட்டமொன்றையும் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். அதிலும் இலங்கைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார்.

மேலும், வீரர்கள் ஊக்கமருந்தை உட்கொண்ட பிறகு அதனை மறைப்பதற்காக சில ஏமாற்று வழிகளை பின்பற்றி வருகின்றனர். எனினும், எமது அமைப்பு இதுதொடர்பில் நேர்த்தியான ஆய்வுகளை நடாத்தி தவறு செய்த வீரர்களுக்கு தண்டணை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேநேரம், இந்த மாநாட்டின் கடைசி நாளான இன்றைய தினம் தெற்காசிய நாடுகளுக்கிடையிலான ஊக்கமருந்து தடுப்பு தொடர்பான விசேட மாநாடொன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.