தங்கப் பதக்கத்தை தவறவிட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

95

தெற்காசிய விளையாட்டு விழாவின் T20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் கிரிக்கெட் மற்றும் ஆடவர் கிரிக்கெட் அணிகள் விளையாடிய போட்டிகள் இன்று (8) நடைபெற்றிருந்தன.

மகளிர் கிரிக்கெட் 

T20 கிரிக்கெட் தொடரின் மகளிர் பிரிவு இறுதிப்போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷிடம் 2 ஓட்டங்களால் துரதிஷ்டவசமான தோல்வியினை தழுவியதுடன் தங்கப் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பினையும் இழந்திருந்தது.

SAG கிரிக்கெட்: நேபாளத்தை வென்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

தெற்காசிய விளையாட்டு விழாவின் T20 கிரிக்கெட் தொடரில் இன்று நேபாளத்தினை எதிர்கொண்ட…

அதேநேரம் இறுதிப் போட்டியில் தோல்வியினை தழுவிய போதும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தெற்காசிய விளையாட்டு விழாவின்  மகளிர் அணிகளுக்கான T20 கிரிக்கெட் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று நாடு திரும்புகின்றது.

இலங்கை – பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதிய தெற்காசிய விளையாட்டு விழாவின் மகளிர் T20 தொடரின் இறுதிப் போட்டி நேபாளத்தின் போக்காரவில் இன்று (8) ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை பங்களாதேஷ் மகளிருக்கு வழங்கியது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் அணியினர் இலங்கை மகளிரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து  91 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.

பங்களாதேஷ் மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் நைகர் சுல்தானா பெற்ற 29 ஓட்டங்களே பங்களாதேஷ் தரப்பில் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது. 

இதேநேரம் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் அதிரடியாக செயற்பட்டிருந்த உமேஷா திமாஷினி வெறும் 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

முன்னதாக மகளிர் அணிகளுக்கான T20 தொடரின் குழுநிலைப் போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணியுடன் கடுமையாக போராட்டத்தை காண்பித்தே தோல்வியடைந்திருந்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியின் வெற்றி இலக்கு (92) குறைவானது என்பதால் நம்பிக்கையுடன் தொடர்ந்து தமது பதில்  துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.

எனினும், இலங்கை மகளிர் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி, தொடக்கத்தில் இருந்தே பங்களாதேஷ் மகளிர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க தவறிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களைப் பறிகொடுக்கத் தொடங்கியது.

இலங்கை மகளிர் அணியின் நம்பிக்கைகுரிய வீராங்கனைகளான உமேஷா திமாஷினி, ஜனதி அனாலி ஆகியோர் மிகவும் குறைவான ஓட்டங்களுடன் மோசமான ஆட்டத்தைக் காட்டி வெளியேறினர். ஆனாலும், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி ஹர்சித மாதவி போராட்டத்தை காண்பித்திருந்தார். 

மாலைத்தீவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் அணி இலகு வெற்றி

தெற்காசிய விளையாட்டு விழாவின் (SAG) T20 கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை ஆடவர்…

இறுதியில் அவரது போராட்டமும் வீணாக இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 89 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பாக போராட்டம் காண்பித்திருந்த அணித்தலைவி ஹர்சித மாதவி 32 ஓட்டங்கள் பெற, லிஹினி அப்சரா 25 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

பங்களாதேஷ் மகளிர் அணியின் பந்துவீச்சு சார்பில் நஹிதா அக்தர் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், ஜஹன்ரா அலம், சல்மா கட்டுன் மற்றும் கதீஜா துல் குப்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்ததோடு, மகளிர் T20 கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் மகளிர் அணி தங்கப் பதக்கம் வெல்ல காரணமாகவும் மாறினர்.

போட்டியின் சுருக்கம் 

பங்களாதேஷ் மகளிர் – 91/8 (20) – நைகர் சுல்தானா 29(38), உமேஷா திமாஷினி 4/8(4)

இலங்கை மகளிர் – 89/9 (20) – ஹர்சித மாதவி 32(33), லிஹினி அப்சரா 25(28), நஹிதா அக்தர் 9/2(4)

முடிவு – பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி  2 ஓட்டங்களால் வெற்றி

ஆடவர் கிரிக்கெட் 

ஆடவர் T20 கிரிக்கெட் தொடரின் இறுதி லீக் போட்டியாக அமைந்த மோதலில் இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி பங்களாதேஷிற்கு எதிராக 9 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினை பதிவு செய்ததோடு, தொடரில் எப்போட்டிகளிலும் தோல்வியுறாத அணியாக இறுதிப் போட்டிக்கும் தெரிவானது.

கிர்த்திப்பூர் நகரில் ஆரம்பமான போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் ஆடவர் கிரிக்கெட் அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்கள் குவித்தது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் யாசிர் அலி அரைச்சதம் தாண்டி 51 ஓட்டங்கள் எடுக்க, விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான மஹிதுல் இஸ்லாம் அன்கோன் 44 ஓட்டங்களைக் குவித்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் அசித்த பெர்னாந்து 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 151 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி பதிலுக்கு துடுப்பாடியது.

இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி வெற்றி இலக்குக்கான பயணத்தில் ஆரம்பத்தில் தடுமாற்றம் காட்டிய போதிலும் பெதும் நிஸ்ஸங்க மற்றும் லஹிரு குரூஸ்புள்ளே ஆகியோர் அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

இலங்கை அணியில் இருந்து விலகும் சுரங்க லக்மால்

டெங்கு நோயின் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி…

இவர்களின் அதிரடி துடுப்பாட்ட உதவியோடு இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றி இலக்கை 151 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த பெதும் நிஸ்ஸங்க மற்றும் லஹிரு குரூஸ்புள்ளே ஆகிய இருவரும் அரைச்சதம் விளாசினர். இதில் குரூஸ்புள்ளே 41 பந்துகளுக்கு 7 பெளண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 73 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்க, பெதும் நிஸ்ஸங்க 67 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பங்களாதேஷ் ஆடவர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் மெஹிதி ஹஸன் ரனா ஒரு விக்கெட்டினை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி ஆடவர் T20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தங்கப் பக்கத்திற்காக மீண்டும் பங்களாதேஷ் அணியுடன் நாளை (9) மோதவுள்ளது. 

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் ஆடவர் – 151/6 (20) – யாசிர் அலி 51(45), மஹிதுல் இஸ்லாம் அன்கோன் 44(38), அசித்த பெர்னாந்து 29/2(4)

இலங்கை ஆடவர் – 151/1 (16.1) – லஹிரு குரூஸ்புள்ளே 73(41)*, பெதும் நிஸ்ஸங்க 67(52)*

முடிவு – இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி

>>For More South Asian Games 2019 news  <<