தேசிய விளையாட்டு விழா பெண்கள் கிரிக்கெட்; சம்பியனானது வட மாகாண அணி

47th National Sports Festival

189

ளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 47ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற பெண்களுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாண அணியை வீழ்த்தி வட மாகாண அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. 

எம்பிலிப்பிட்டிய மகாவலி விளையாட்டு மைதானத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 64 ஓட்டங்களைக் குவித்தது.   

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வட மாகாண அணி 9.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. 

இதன்மூலம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய விளையாட்டு விழா மென்பந்து கிரிக்கெட் போட்டியில் வட மாகாண பெண்கள் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கத்தை வென்றமை சிறப்பம்சமாகும். முன்னதாக அந்த அணி 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா பெண்களுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது 

அதேபோல, 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் வட மாகாண பெண்கள் மென்பந்து கிரிக்கெட் அணி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது 

எவ்வாறாயினும், இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான மென்பந்து கிரிக்கெட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற வட மாகாண அணி இம்முறை முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

இதனிடையே, 47ஆவது தேசிய விளையாட்டு விழா பெண்களுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் தொடர் நாயகி விருதை வட மாகாண அணியின் எஸ். கஜனி பெற்றுக் கொண்டார்

இதேவேளை, இம்முறை தேசிய விளையாட்டு விழா மென்பந்து கிரிக்கெட் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற வட மாகாண அணியில் 3 பாடசாலை மாணவிகள் விளையாடி இருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும் 

வட மாகாண மகளிர் கிரிக்கெட் அணி விபரம்  

பி. ரஜிதா, எஸ். சோபிகா, வி. தேனுஷா, கே. ஜீவிகா, எஸ். கஜனி, ஜே. அபிரா, கே. திபிகா, எம். சர்மிலி, கெ. தயாயினி, எல். அஷ்வினி, ரீ. துஷானி, பி. தினேஷ் (பயிற்சியாளர்) கே. சுதாகரன் (மாவட்ட கிரிக்கெட் பயிற்சியாளர்)  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<