சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் முடிவுக்கு கொண்டுவரப்படுமா?

1276

சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரியான டேவிட் ரிச்சர்ட்சன் அவர்களின் கருத்தின்படி, இம்முறை நடைபெற்று நிறைவடைந்த தொடருடன் சம்பியன்ஸ் கிண்ண சுற்றுப்போட்டியை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தெரிகின்றது.

இம்முறை இடம்பெற்ற 2017ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இச்சுற்றுப்போட்டி நிறைவடைந்து ஒரு வாரமேனும் கடக்காத நிலையில் இச்செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது. இரண்டு வருடங்களிற்கு ஒருமுறை இருபதுக்கு இருபது (T20) உலகக் கிண்ண சுற்றுப் போட்டியை நடாத்தவிருப்பதால் சர்வதேச கிரிக்கெட் கால அட்டவணையில் போதியளவு காலத்தை ஒதுக்கீடு செய்யும் நோக்குடன் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் எட்டு அணிகளை உள்ளடக்கி நடத்தப்படும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரை விடுத்து பத்து அணிகளை உள்ளடக்கி நடத்தப்படும் 2019ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண தொடரின் மீது அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றமையும் இதற்கு ஒரு காரணமாகும்.

டேவிட் ரிச்சர்ட்சன் அவர்களின் கருத்தின்படி சர்வதேச சுற்றுப் போட்டிகளில் பல முக்கிய மாற்றங்களை கொண்டுவர எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற ஏற்பாடாகியிருந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இடம்பெறுவதில் சந்தேக நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் வருடாந்த மாநாட்டின் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ஒரே முறையிலான சுற்றுப் போட்டிகளுக்கு பதிலாக பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் மாறுபட்ட விதத்திலான சுற்றுப் போட்டிகளை நடத்துவதே எமது நோக்கமாகும்,”  எனத் தெரிவித்தார்.

“2021ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடரானது இந்தியாவில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. இத்தொடரிற்கு பதிலாக நான்கு வருடங்களிற்கு ஒருமுறை நடைபெற உத்தேசிக்கப்பட்டிருந்த T20 உலகக் கிண்ணப் போட்டிகளை இரண்டு வருடங்களிற்கு ஒருமுறை நடாத்த ஆலோசித்து வருகின்றோம். அல்லாவிட்டால் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரை இருபதுக்கு இருபது போட்டிகளைக் கொண்ட தொடராக நடத்தவும் நாம் கலந்துரையாடி வருகின்றோம்,” என மேலும் தெரிவித்தார்.

இருபதுக்கு இருபது போட்டிகளை பார்வையிடும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தினால் போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனங்களும் அதிக இலாபத்தை ஈட்டுவதாக ரிச்சர்ட்சன் குறிப்பிட்டார். இதன் காரணமாக அதிக அணிகளை உள்ளடக்கும் வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே ஏறத்தாழ 20 அணிகளை உள்ளடக்கிய இருபதுக்கு இருபது தொடர் ஒன்றினை நடாத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“16 அல்லது 20 அணிகளைக் கொண்ட சுற்றுப் போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்வதில் நாம் ஆர்வம் காட்டி வருகின்றோம். இதேவேளை 10 அணிகளை மாத்திரம் கொண்ட உலகக் கிண்ணப் போட்டியினை நடத்துவதன் மூலம் பெரும்பாலான அணிகள் ஒரே மட்டத்தில் காணப்படுவதால் அணிகளுக்கிடையிலான போட்டித் தன்மை உயர் நிலையில் காணப்படும். எனவே 50 ஓவர்களைக் கொண்ட மற்றுமொரு சுற்றுப் போட்டியினை ஏற்பாடு செய்வது அவசியமற்றதாகவே காணப்படுகின்றது.”

மேலும், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்தினை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கலந்தாலோசிக்க சர்வதேச கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் நேற்று (20ஆம் திகதி) லண்டனில் ஒன்றுகூடியதுடன், அது தொடர்பான இறுதி முடிவு வியாழக்கிழமை அறிவிக்கப்படும்.