LPL 2023 தொடரில் களமிறங்கும் தமிழ் பேசும் வீரர்கள்

Lanka Premier League 2023

363

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4ஆவது லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் வீரர்கள் ஏலம் கொழும்பு ஷங்ரி லா ஹோட்டலில் கடந்த 15ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது.

LPL போட்டிகள் வரலாற்றில் முதல் தடவையாக வீரர்கள் ஏலம் நடத்தப்பட்டதுடன், இம்முறை ஏலத்தில் 360 வீரர்கள் பங்குகொண்டதோடு, 5 அணிகளாலும் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலத்தின் மூலம் வாங்கப்பட்டனர்.

இந்த ஆண்டு நடைபெற்ற வரலாற்று முக்கியம் வாய்ந்த LPL வீரர்கள் ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை விட இலங்கை வீரர்களே அதிகூடிய விலைகளுக்கு வாங்கப்பட்டனர். அதிலும் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட முதல் 5 வீரர்களும் இலங்கை தேசிய அணி வீரர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த 3 பருவங்களைப் போல (Seasons) இந்த ஆண்டு LPL வீரர்கள் ஏலத்தின் மூலம் இலங்கையில் உள்ள நான்கு தமிழ் பேசும் வீரர்கள் 2 அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

LPL போட்டிகளில் இலங்கையில் உள்ள ஒருசில தமிழ் பேசுகின்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது ஓரளவு மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தாலும், அங்குரார்ப்பாண LPL தொடரிலிருந்து இதுவரை அந்த எண்ணிக்கையானது குறைவடைந்து வருகின்றமை மிகப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

அதிக விலைக்கு வாங்கப்பட்ட மதுசங்க! ; LPL ஏலம் தொடர்பான முழு விபரம்!

முன்னதாக 2020ஆம் ஆண்டு நடைபெற்ற LPL தொடரில் 7 தமிழ் பேசுகின்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட போதிலும், 2021இல் அது ஐந்தாகவும், 2022இல் 3 ஆகவும் குறைவடைந்தது. எனினும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 4 ஆக                உள்ளது.

அதுமாத்திரமின்றி, ஜப்னா கிங்ஸ் அணிக்காக கடந்த 3 பருவங்களாக ஆடிய விஜயகாந்த் வியாஸ்காந்த் மாத்திரம் தான் ஒரேயொரு தமிழ் பேசுகின்ற வீரராக அனைத்து பருவங்களிலும் விளையாடியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எவ்வாறாயினும், இம்முறை LPL வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்ட அந்த 4 தமிழ் பேசுகின்ற வீரர்கள் பற்றிய ஒரு சிறிய தொகுப்பை இங்கு பார்ப்போம்.

விஜயகாந்த் வியாஸ்காந்த் (ஜப்னா கிங்ஸ்)

இலங்கை கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ஒரு வீரர் தேசிய அணியில் இடம்பெற வேண்டுமாயின் அவர் இலங்கை 19 வயதின்கீழ் அணி, வளர்ந்துவரும் அணி, இலங்கை A அணி அல்லது பிரதான கழக அணிக்காக ஆடி இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, தமிழ் பேசுகின்ற வீரர் ஒருவருக்கு இந்த சவால்கள் அனைத்தையும் தாண்டி வருவது என்பது மிகவும் கடினமான ஒரு விடயமாகவே உள்ளது.

ஆனால், அந்த தடைகளையெல்லாம் LPL தொடரின் மூலம் தகர்த்து எறிந்து இன்று இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்காக ஆடுகின்ற அனைத்து தகுதிகளையும் கொண்ட வீரராக உருவெடுத்திருக்கும் வீரர் தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான விஜயகாந்த் வியாஸ்காந்த், இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணிக்காக ஆடியவர். ஆனாலும் வியாஸ்காந்த் என்ற வீரருக்கு முகவரி கொடுத்தது லங்கா பிரீமியர் லீக் தொடர். குறிப்பாக அவரை கடந்த 3 பருவங்களாக பட்டை தீட்டியது ஜப்னா அணி தான். முதல் பருவத்தில் வெறும் 3 போட்டிகளில் மாத்திரம் ஆடிய அவர், தொடர்ந்து 2ஆவது மற்றும் 3ஆவது பருவங்களில் அந்த அணிக்காக ஒருசில போட்டிகளைத் தவிர மற்றைய அனைத்துப் போட்டிகளிலும் விளையாடியிருந்தார்.

குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற LPL தொடரின் 3ஆவது அத்தியாயத்தில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அவர், அந்த அணிக்கு சம்பியன் பட்டம் வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். அந்த அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 6.68 என்ற பந்துவீச்சு சராசரியுடன், 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்தார். அத்துடன் 2022 LPL தொடரில் வளர்ந்துவரும் வீரருக்கான விருதையும் வென்றிருந்தார்.

எனவே LPL தொடரில் வெளிப்படுத்திய திறமை காரணமாக வியாஸ்காந்த் இந்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் Chattogram Challengers அணிக்காக விளையாடுகின்ற வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார். அந்த அணிக்காக 6 போட்டிகளில் ஆடிய அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் ராஜாஸ்தான் றோயல்ஸ் அணியின் வலைப் பந்துவீச்சாளராக செயல்படுகின்ற வாய்ப்பும் வியாஸ்காந்துக்கு கிடைத்தது. அந்த அணியின் இயக்குனரும், முன்னாள் இலங்கை வீரருமான குமார் சங்கக்காரவின் தலையீட்டினால் வியாஸ்காந்துக்கு இந்த வாய்ப்பு கிடைத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மறுபுறத்தில் LPL, BPL மற்றும் IPL என தொடர்ச்சியாக T20 லீக்கில் ஆடி வந்த வியாஸ்காந்த், உள்ளூர் கழக மட்டப் போட்டிகளிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய சுபர் லீக் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜப்னா அணியில் வியாஸ்காந்த் இடம்பிடித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அவருக்கு எந்தவொரு போட்டியிலும் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை.

முன்னதாக, இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் 23 வயதின் கீழ்ப்பட்ட முன்னணி கழக அணிகளுக்காக நடத்தப்பட்ட இரண்டு நாட்கள் கொண்ட முதல்தர கிரிக்கெட் தொடரில் தமிழ் யூனியன் கழகத்துக்காக ஆடி அவர் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்த நிலையில், அண்மையில் நிறைவடைந்த பிரதான கழகங்களுக்கிடையிலான மேஜர் லீக் T20 தொடரில் தமிழ் யூனியன் கழகத்துக்காக 4 போட்டிகளில் ஆடிய அவர், 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எனவே, இம்முறை LPL வீரர்கள் ஏலத்தில் வியாஸ்காந்தை ஒப்பந்தம் செய்ய ஜப்னா மற்றும் தம்புள்ள அணிகளிடையே ஆரம்பத்திலேயே போட்டி நிலவியது. 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அடிப்படை விலையுடன் வியாஸ்காந்தின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜப்னா மற்றும் தம்புள்ள அணிகளிடையே போட்டி நிலவியது. கடைசியில் 18 ஆயிரம் டொலர்களுக்கு நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் அவரை வாங்கியது. இது இலங்கை பணப்பெறுமதியில் 5,554,000 ரூபாவாகும்.

கடந்த ஆண்டைப் போல இம்முறையும் ஜப்னா கிங்ஸ் அணியின் பிரதான Leg Spin சுழல் பந்துவீச்சாளராக வியாஸ்காந்த் இருப்பார் என்பதில் சந்தேகம் கிடையாது. அதேபோல, ஜப்னா கிங்ஸ் அணியின் பிரதான சுழல் பந்துவீச்சாளரான மஹீஷ் தீக்ஷனவின் அனுபவமும் நிச்சயம் வியாஸ்காந்தின் எதிர்கால கிரிக்கெட் பயணத்துக்கு கைகொடுக்கும் என்பது தான் அனைவரது பிரார்த்தனையாகும்.

மொஹமட் சிராஸ் (கோல் டைட்டன்ஸ்)

இலங்கையின் தமிழ் பேசுகின்ற கிரிக்கெட் வீரர்களில் அண்மைக்காலமாக பேசப்பட்டு வருகின்ற முன்னணி வீரர்களில் மொஹமட் சிராஸும் ஒருவர். கண்டி மடவளை மதீனா தேசிய பாடசாலையின் மூலம் கிரிக்கெட் விளையாட்டுக்கு காலடி எடுத்து வைத்த வலது கை வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் சிராஸ், இம்முறை LPL வீரர்கள் ஏலத்தில் கோல் டைட்டன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அடிப்படை விலைக்கே அந்த அணி வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண LPL தொடரில் கோல் கிளெடியேட்டர்ஸ் அணிக்காக மொஹமட் சிராஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், அந்த பருவத்தில் அவருக்கு எந்தவொரு போட்டியிலும் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற LPL தொடர்களில் அவருக்கு எந்தவொரு அணியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, இம்முறை 2ஆவது தடவையாக மீண்டும் கோல் அணியில் விளையாடுகின்ற வாய்ப்பு மொஹமட் சிராஸுக்கு கிடைத்துள்ளது.

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் ஊடாக முதல்தரப் போட்டிகளில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட சிராஸ், தற்போது BRC கழகத்துக்காக ஆடி வருகின்றார். குறிப்பாக, இலங்கை ஏ அணிக்காகவும், இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்காகவும் ஒருசில போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாத்திலும் இடம்பிடித்திருந்தார்.

கிரிக்கெட்டில் சாதிக்க பொறியியல் துறையை விட்ட ஆகாஷ் மத்வால்

இதனிடையே, இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற தேசிய சுபர் லீக் தொடர்களைப் போல, கழக மட்ட போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடி வருகின்ற சிராஸ், இந்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற்ற தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் காலி அணிக்காக விளையாடியிருந்தார். அந்த அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றதில் முக்கிய பங்கு வகித்த அவர், 5 போட்டிகளில் ஆடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதில் தம்புள்ள அணிக்கெதிரான போட்டியில் 5 விக்கெட் குவியலையும் பதிவு செய்தார்.

எனினும், குறித்த தொடரையடுத்து நடைபெற்ற தேசிய சுபர் லீக் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் மீண்டும் காலி அணிக்காக அவர் உள்வாங்கப்பட்ட போதிலும், அவருக்கு எந்தவொரு போட்டியிலும் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக அவர் பிரதான கழகங்களுக்கிடையிலான மேஜர் லீக் டி20 தொடரில் BRC கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 4 போட்டிகளில் ஆடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

எனவே, இம்முறை LPL தொடரில் பிரபல வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ள தசுன் ஷானக தலைமையிலான கோல் டைட்டன்ஸ் அணியில் லஹிரு குமார, கசுன் ராஜித, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லஹிரு சமரகோன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பலர் பிரதான வேகப் பந்துவீச்சாளர்களாக இருப்பதால் அந்த அணியில் இடம்பிடித்துள்ள மொஹமட் சிராஸுக்கு, கோல் டைட்டன்ஸ் அணிக்காக குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

தீசன் விதுஷன் (ஜப்னா கிங்ஸ்)

வியாஸ்காந்த்தை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட்டில் அதிகளவில் பேசப்படுகின்ற ஒரு இளம் தமிழ் வீரராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தீசன் விதுஷன். 21 வயதுடைய இடதுகை சுழல் பந்துவீச்சாளரான தீசன், யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் அதீத திறமைகளை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றுக் கொண்ட வீரராக மாறியுள்ளார்.

இலங்கையின் முன்னணி கிரிக்கெட் கழகங்களில் ஒன்றான முவர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கான ஆடி வருகின்ற அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் 6 போட்டிகளில் ஆடி 38 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல, குறித்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.

எனவே, அந்த தொடரில் வெளிப்படுத்திய திறமையின் காரணமாக முதல்தரப் போட்டிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்ட அவர், கடந்த ஆண்டு 8 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 39 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையினால் அண்மையில் நடத்தப்பட்ட 23 வயதின் கீழ் முன்னணி கழக அணிகளுக்கு இடையிலான 2 நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் கொழும்பு முவர்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது. அந்த கழகத்தின் வெற்றியில் பிரதான பங்காற்றிய ஒருவர் தான் தீசன் விதுஷன். குறிப்பாக, இந்தத் தொடரில் 4 லீக் போட்டிகளில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த தீசன் விதுஷன் தொடரின் அதிசிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை வென்றெடுத்தார்.

கால்பந்தில் ஆரம்பித்து ஜப்பான் வரை கிரிக்கெட் சுற்றுலா செய்த தீசன்

இதன் காரணமாக, இலங்கையின் முன்னணி வீரர்கள் பங்குகொண்ட தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் ஜப்னா அணியின் மேலதிக வீரர்களில் ஒருவராக இடம்பிடிக்கின்ற வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இதனையடுத்து நடைபெற்ற இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் ஜப்பான் சுற்றுப்பயணத்திலும் தீசன் விதுஷன் இடம்பிடித்தார். 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 4ஆவது போட்டியில் ஆடிய அவர், 4 ஓவர்கள் பந்துவீசி 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்த நிலையில், அண்மையில் நிறைவடைந்த LPL தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ஜப்னா கிங்ஸ் அணி, தீசன் விதுஷனை அடிப்படை விலையான 5 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்தது. கடந்த ஆண்டும் ஜப்னா கிங்ஸ் அணியை தீசன் பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும் எந்தவொரு போட்டியிலும் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு LPL தொடரில் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது தான் அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

ரத்னராஜா தேனுரதன் (ஜப்னா கிங்ஸ்)

இலங்கை இராணுவ கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வருகின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ரட்னராஜா தேனுரதன், இந்த ஆண்டு LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடிப்படை விலையான 5 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு தேனுரதனை இம்முறை LPL ஏலத்தில் வைத்து ஜப்னா கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் முன்னாள் வீரரான இவர், 2020இல் நடைபெற்ற  தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வலைப் பந்துவீச்சாளராக செயல்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து 2021 பருவத்தில் ஜப்னா கிங்ஸ் அணியில் அவர் இடம்பிடித்திருந்தாலும் எந்தவொரு போட்டியிலும் விளையாடுகின்ற வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில், இம்முறை LPL வீரர்கள் ஏலத்தின் மூலம் மீண்டும் ஜப்னா கிங்ஸ் அணியுடன் இணைகின்ற வாய்ப்பு தேனுரதனுக்கு கிடைத்துள்ளது.

பாடசாலைக் காலத்தில் கிரிக்கெட்டில் அதீத திறமைகளை வெளிப்படுத்தி வந்த இவர், 13 வயதின்கீழ், 15 வயதின்கீழ், 17 வயதின்கீழ் மற்றும் 19 வயதின்கீழ் அணிகளுக்காக ஆடியுள்ளார். குறிப்பாக இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாணங்களுக்கிடையிலான 19 வயதின்கீழ் கிரிக்கெட் தொடரில் கிழக்கு மாகாண அணியின் தலைவராகவும் அவர் செயல்பட்டுள்ளார்.

இதனையடுத்து இலங்கை இராணுவ கிரிக்கெட் அணியில் இணைந்த தேனுரதன், 2020இல் 23 வயதின்கீழ் அணிக்காக ஒருநாள் போட்டியில் ஆடினார். அதே ஆண்டு நடைபெற்ற இராணுவ கொமாண்டர்ஸ் T20 லீக் தொடரில் களமிறங்கிய அவர், சகலதுறையிலும் பிரகாசித்து தொடரின் சிறந்த களத்தடுப்பாளருக்கான விருதை தட்டிச் சென்று அனைவரது கவனத்தையும் பெற்றுக் கொண்டார். எவ்வாறாயினும், கடந்த ஆண்டு தான் முதல்தர போட்டிகளில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட அவர், இதுவரை ஒரு முதல்தரப் போட்டி மற்றும் 3 List A போட்டிகளில் ஆடியுள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் தேனுரதன் என்ற திறமையான ஒரு வீரனை தேசிய மட்டத்தில் அறிமுகப்படுத்திய பெருமை இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஆதிரடி சகலதுறை வீரருமான திசர பெரேரா, தினேஷ் சந்திமால் மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகிய மூவரையும் சாரும். இந்த வீரர்களின் பரிந்துரையில் ஒரு தமிழ் வீரராக இராணுவ கிரிக்கெட் கழகத்திற்காகவும், ஜப்னா அணிக்காகவும் ஆடுகின்ற வாய்ப்பு தேனுரதனுக்கு கிடைத்தது என்றால் மிகையாகாது.

எனவே, ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவர் திசர பெரேராவுடன் இராணுவ கிரிக்கெட் அணியில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ள தேனுரதனுக்கு இம்முறை LPL தொடரில் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது தான் எமது பிரார்த்தனையாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<