தேசிய நகர்வல ஓட்டத்தில் நூலிழையில் தங்கத்தை தவறவிட்ட வக்ஷான்

166
Talawakelle Vakshan

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஆகியன இணைந்து இவ்வருடம் ஏற்பாடு செய்துள்ள 48ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியாக நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தலவாக்கலையைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷான் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். 

நான்கு வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற இம்முறை தேசிய விளையாட்டு விழா நகர்வல ஓட்டப் போட்டியானது நேற்று முன்தினம் (16) நுவரெலியா கோல்வ் புற்தரையில் நடைபெற்றதுடன், நாட்டிலுள்ள 9 மாகாணங்களையும் சேர்ந்த 79 வீரர்களும், 47 வீராங்கனைகளும் பங்கேற்றிருந்தனர் 

10 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றதுடன், மத்திய மாகாண அணியில் இடம்பெற்ற விக்னராஜ் வக்ஷான், அப் போட்டியை 34 நிமிடங்கள், 04 செக்கன்களில் நிறைவுசெய்தார். இதே நேரத்தை மேல் மாகாண வீரர் சமந்த புஷ்பகுமாரவும் பதிவுசெய்த போதிலும் புஷ்பகுமார தங்கப் பதக்கதை வென்றதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

எனவே, தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் முதல் தடவையாக தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை வக்ஷான், நூலிழையில் தவறவிட்டார். அண்மைக்காலமாக தேசிய ரீதியிலான நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் குவித்து வருகின்ற வக்ஷான், இறுதியாக கடந்த ஜனவரி மாதம் தெற்காசிய நகர்வல ஓட்டம் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக் கொண்டு நடைபெற்ற தெரிவுப் போட்டியில் முதலிடம் பிடித்து அசத்தியதுடன், பாகிஸ்தாhனின் நடைபெறவுள்ள 3ஆவது தெற்காசிய நகர்வல ஓட்டம் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை அவர் பெற்றுக்கொண்டார். 

இதனிடையே, இம்முறை தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஊவா மாகாண வீரர் எரந்த தென்னக்கோன் (34 நி. 38 செக்.) வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார். இவர் இறுதியாக 2019இல் நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது 

அத்துடன், இப் போட்டியில் பங்குபற்றிய ஊவா மாகாணத்தைச் சேர்ந்த எம். கோபிநாதன் (35:28) ஐந்தாவது இடத்தைப் பிடித்தார் 

இந்த நிலையில், ஆண்கள் பிரிவில் ஊவா மாகாணம் ஒட்டுமொத்த சம்பியனானதுடன், மத்திய மாகாணம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது 

இதேவேளை, பெண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியில் மத்திய மாகாண வீராங்கனை எச்.எம்.சி.எஸ். ஹேரத் (39 நி. 30 செக்.) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த .எம்.ஆர். விஜேசூரிய (39:32) வெள்ளிப் பதக்கத்தையும், ஊவா மாகாணத்தைச் சேர்ந்த என். நிதர்ஷனி (39:50) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். 

அத்துடன், பெண்கள் பிரிவில் மத்திய மாகாணம் ஒட்டுமொத்த சம்பியனானதுடன், சப்ரகமுவ மாகாணம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது 

48ஆவது தேசிய விளையாட்டுப் விழாவின்; எஞ்சிய போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது. 30 விளையாட்டு நிகழ்ச்சிகள் குறித்த காலப்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஜூலை 17, 18, 19 ஆகிய திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள மெய்வல்லுனர் போட்டிகளுடன் இந்த வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழா நிறைவுக்கு வரும்.  

மேலும்பலமெய்வல்லுனர்  செய்திகளைப்படிக்க