T20 உலகக் கிண்ண அரையிறுதிக்கு தெரிவாகிய அணிகள்

ICC T20 World Cup 2022

149
T20 World Cup 2022: Semi-Final Qualified Teams

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுபர் 12 லீக் சுற்று போட்டிகள் நேற்று (06) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் கடந்த ஒக்டோபர் 16ஆம் திதி ஆரம்பமாகிய T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த 2 வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குழு 1 பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளுமே 5 போட்டிகளில் தலா 3 வெற்றிகளை பெற்று 7 புள்ளிகளுடன் இருந்தன. ஆனால் புள்ளிப்பட்டியலில் நிகர ஓட்டவேக வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி முதலிடத்தையும், இங்கிலாந்து அணி 2ஆவது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

குழு 2 பிரிவை பொறுத்தவரை இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே முதலிடத்தைப் பிடித்தது.. குறித்த பிரிவில் 2ஆவது இடத்திற்கு தோல்வியுறாத மற்றுமொரு அணியாக வலம்வந்த தென்னாபிரிக்கா வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று (06) காலை நெதர்லாந்திடம் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வியடைந்து அரையிறுதிக்கான வாய்ப்பை தவறவிட்டது.

இதன்மூலம் ஏற்கனவே அரையிறுதியில் வெளியேறியது என நினைத்த பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு உருவாகியது. அதாவது அந்த அணிக்கு இன்று நடைபெற்ற பங்களாஷே; அணியுடனான கடைசி லீக் போட்டியில் வெற்றியீட்டினால் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிட்டியது. அதேபோல, புள்ளிப்பட்டியலில் இந்த இரு அணிகளுமே தலா 4 புள்ளிகளுடன் காணப்பட்டன. எனவே இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும். என்ற நிலை ஏற்பட்டது.

இதன்படி, அடிலெய்ட்டில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி, குழு 2 இருந்து இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

எனினும் இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியின் முடிவை வைத்து தான் அரையிறுதியில் யார்? யார்? மோதவுள்ளனர் என்பது தீர்மானிக்கப்படவிருந்தன. அதன்படி ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் 71 ஓட்டங்களால் இந்தியா வெற்றியீட்டியதால் புள்ளிப்பட்டியலில் அந்த அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தையும், பாகிஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் உறுதி செய்தன.

அரையிறுதி சுற்றை பொறுத்தவரையில் குழு 1 இல் முதலிடத்தைப் பிடித்த நியூசிலாந்து அணியும், குழு 2 இல் 2ஆவது இடத்தைப் பிடித்த பாகிஸ்தான் அணியும் 9ஆம் திகதி சிட்டினியில் நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதியில் மோதும். அதேபோல குழு 1 இல் 2ஆவது இடத்தைப் பிடித்த இங்கிலாந்து அணியும், குழு 2 இல் முதலிடத்தைப் பிடித்த இந்தியா அணியும் 10ஆம் திகதி அடிலெய்டில் நடைபெறவுள்ள 2ஆவது அரையிறுதியில் மோதும்.

அரையிறுதியில் வெற்றி பெறுகின்ற அணிகள் நவம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்னில் நடைபெறுகின்ற இறுதிப்போட்டியில் சந்திக்கும்.

இதனிடையே அரையிறுதிப் போட்டிகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் வெற்றிப் பெற்றால், 2007 இல் நடைபெற்ற அங்குரார்ப்பண T20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியைப் போல இரு அணிகளும் மீண்டும் ஒருதடவை இறுதிப்போட்டியில் மோதும் சூழல் உருவாகலாம்.

இதேவேளை, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் T20 உலகக் கிண்ணத்தை ஒரு தடவை வென்றுள்ளது. நியூசிலாந்து அணி இதுவரை ஒரு தடவை கூட T20 உலகக் கிண்ணத்தை முத்தமிடவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவுடன், நியூசிலாந்து அணி விளையாடியது. எனினும், குறித்த போட்டியில் அவுஸ்திரேலியா அணி சம்பியனாக மகுடம் சூடியது. இதனால், இந்த முறை எப்படியாவது T20 உலகக் கிண்ணத்தை வெல்ல நியூசிலாந்து அணி களமிறங்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<