சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் பிஜே வெட்லிங்

New Zealand tour of England 2021

65

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் பிஜே வெட்லிங், இங்கிலாந்துக்கான சுற்றுத் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதுடன், அதன் பின்னர், முதன்முறையாக நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

குறித்த இந்த அனைத்து போட்டிகளிலும் பிஜே வெட்லிங் விளையாடும் பட்சத்தில், நியூசிலாந்து டெஸ்ட் அணிக்காக அதிக போட்டிகளில் விக்கெட் காப்பாளராக செயற்பட்டிருந்த எடம் பரோர்ஸின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் ஓய்வுபெறவுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட பிஜே வெட்லிங், ஓய்வுபெறுவதற்கு இதுதான் சரியான தருணம். நியூசிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன். கிரிக்கெட்டை பொருத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட் உச்சத்தை எட்டியது என்பதுடன், அதன் ஒவ்வொரு நிமிடத்தையும் விரும்பி விளையாடுகிறேன்.

நான் சிறந்த முன்னணி வீரர்களுடன் மற்றும் சிறந்த நண்பர்களுடன் விளையாடியுள்ளேன். அதேநேரம், அவர்களிடமிருந்து எனக்கு பல உதவிகள் கிடைத்துள்ளன. இதுவரை காலமும் எனக்கு ஆதரவாக இருந்த எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன்என்றார்.

பிஜே வெட்லிங் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தமாக 249 பிடியெடுப்புகள் (10 பிடியெடுப்புகள் களத்தடுப்பாளராக) மற்றும் 8 ஸ்டம்பிங் ஆட்டமிழப்புகளை கைவசப்படுத்தியுள்ளார். அதேநேரம், கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இரட்டை சதம் கடந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக 38.11 என்ற ஓட்ட சராசரியில், 3,773 ஓட்டங்களை குவித்துள்ளார். அதேநேரம், நியூசிலாந்து அணிக்காக 28 ஒருநாள் மற்றும் 5 T20I போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…