தவான் தலைமையில் இலங்கை வரும் இந்திய கிரிக்கெட் அணி

46
GETTY IMAGES

இம்மாத இறுதியில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள 20 பேர் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இனவெறி கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ள இங்கிலாந்து வீரர்கள்

அதன்படி இம்மாதம் 28ஆம் திகதி இலங்கை வரவுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடவுள்ளது. 

இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளின் போது இந்திய அணியின் தலைவராக செயற்பட ஷிக்கர் தவான் அழைக்கப்பட்டிருக்கின்றார். 

மறுமுனையில், இந்த தொடர்களின் போது இந்திய அணியின் உப தலைவராக முன்னணி வேகப்பந்துவீச்சாளர் புவ்னேஸ்வர் குமார் இருப்பார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.  

இதேநேரம், இந்திய கிரிக்கெட் அணி ICC இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்காக தமது முன்னணி வீரர்களை இந்திய மண்ணுக்கு அனுப்பியிருப்பதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளின் போது விளையாடும் இந்திய அணியில் அதிக இளம் வீரர்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர். 

“உலகக் கிண்ணத்துக்கு நேரடி தகுதி பெறுவதே எமது இலக்கு” – பிரமோதய

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான இந்திய பிரிமியர் லீக் தொடரில் அபாரமாக செயற்பட்ட துடுப்பாட்டவீரர்களான பிரித்வீ சாஹ், சன்ச்சு சாம்சன், நிதிஷ் ரானா, ருத்துராஜ் காய்க்வாட், டேவ்டட் படிக்கல் மற்றும் சுழல்பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியா ஆகிய வீரர்கள் இந்திய அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கவிடயமாகும். 

மறுமுனையில் இளம் வீரர்களுடன் இணைந்து சிரேஷ்ட வீரர்களான ஹர்திக் பாண்டியா, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய வீரர்களும் இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த தொடரில் பலம் சேர்க்கவிருக்கின்றனர். 

இதேவேளை இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது நடைபெறவுள்ள ஒருநாள் தொடர், ICC இன் ஒருநாள் சுபர் லீக்கினுள் உள்ளடங்குகின்றமை சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும். 

மறுமுனையில், இரு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள T20 தொடர் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான தயார்படுத்தல்களாக அமைகின்றது. 

இலங்கை – இந்திய அணிகள் இடையிலான போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தினுள் பார்வையாளர்கள் எவருமின்றி இடம்பெறவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணிக்கு எதிரான போட்டிகளுக்கு முன்னதாக தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் T20 தொடர் என்பவற்றில் விளையாடவிருக்கின்றது. 

இந்திய அணிக்குழாம் – சிக்கர் தவான் (தலைவர்), பிரித்வீ சாஹ், டேவ்டட் படிக்கல், ருத்துராஜ் காய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ரானா, இஷான் கிஷான், சன்ச்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், றாகுல் சாஹர், K. கெளதம், க்ருனால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருன் சக்கரவர்த்தி, புவ்னேஸ்வர் குமார் (உப தலைவர்), தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சேட்டன் சக்கரியா

தொடர் அட்டவணை

ஒருநாள் தொடர்

ஜூலை 13 – முதல் ஒருநாள் போட்டி – ஆர். பிரேமதாச சர்வதேச மைதானம் கொழும்பு 

ஜூலை 16 – இரண்டாவது ஒருநாள் போட்டி – ஆர். பிரேமதாச சர்வதேச மைதானம் கொழும்பு 

ஜூலை 18 – மூன்றாவது ஒருநாள் போட்டி – ஆர். பிரேமதாச சர்வதேச மைதானம் கொழும்பு 

T20 தொடர்

ஜூலை 21 – முதல் T20 போட்டி – ஆர். பிரேமதாச சர்வதேச மைதானம் கொழும்பு 

ஜூலை 23 – இரண்டாவது T20 போட்டி – ஆர். பிரேமதாச சர்வதேச மைதானம் கொழும்பு 

ஜூலை 25 – மூன்றாவது T20 போட்டி –

ஆர். பிரேமதாச சர்வதேச மைதானம் கொழும்பு 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…