சன்ரைசர்ஸ் அணியில் இணையும் இளம் வேகப்பந்து வீச்சாளர்

Indian Premier League 2022

209
ICC

நடப்பாண்டு இந்தியன் பிரீமியர் (IPL) லீக் தொடரில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் சௌரப் துபே விலகியதால் சுஷாந்த் மிஷ்ரா என்ற இளம் வேகப் பந்துவீச்சாளரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

IPL தொடரின் 15 ஆவது அத்தியாயம் மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இடம்பிடித்துள்ள முன்னாள் சம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இதவரை 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி 4 தோல்வி என புள்ளிப் பட்டியலில் 4 ஆவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சௌரப் துபே முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.

இதனால் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான இடதுகை வேகப் பந்துவீச்சாளர் சுஷாந்த் மிஷ்ரா மாற்று வீரராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

சுஷாந்த் மிஷ்ரா சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 20 இலட்சம் ரூபாவுக்கு (இந்திய ரூபாய்) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன், எஞ்சியுள்ள போட்டிகளில் அணியுடன் இணைந்துகொள்வார் என சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணத்தில் இந்திய அணியில் இடம்பெற்றவர் சுஷாந்த் மிஷ்ரா. 5 போட்டிகளில் விளையாடிய அவர் 7 விக்கெட்டுகளை எடுத்தார். அத்துடன், இதுவரை 4 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<