த்ரில் வெற்றியுடன் ஒருநாள் தொடரை சமப்படுத்தியது இங்கிலாந்து

72
ICC Twitter

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக வொண்டரஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தியது.

முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில், இன்று (9) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

பிக் பேஷ் லீக் சம்பியனாக மகுடம் சூடியது சிட்னி சிக்ஸர்ஸ்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த பிக்…..

இங்கிலாந்து அணியின் பணிப்பின்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி குயிண்டன் டி கொக்கின் சிறந்த துடுப்பாட்டத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்த போதும், குறைந்த ஓட்ட வேகத்தின் காரணமாக 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 256 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக குயிண்டன் டி கொக் 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இறுதியில் களமிறங்கி வேகமாக ஓட்டங்களை குவித்த டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர்களுக்கு அடுத்தபடியாக ஜேஜே. ஸ்மட்ஸ் 31 ஓட்டங்களை பெற்றார்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சுழல் பந்துவீச்சாளர் ஆதில் ரஷீட் 3 விக்கெட்டுகளை கைப்பற்ற, சகிப் மஹ்மூட் மற்றும் மொயீன் அலி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஜோ டென்லி, ஜோ ரூட் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோவ் ஆகியோரின் துடுப்பாட்ட பங்களிப்பின் உதவியுடன் 43.2 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பாக ஜோ டென்லி 66 ஓட்டங்கள், அரைச் சதத்தை தவறவிட்ட ஜோ ரூட் 49 ஓட்டங்கள் மற்றும் வேகமாக ஓட்டங்களை குவித்த ஜொனி பெயார்ஸ்டோவ் 43 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் ப்யூரன் ஹென்ரிக்ஸ் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

11 மாதங்களின் பின்னர் தென்னாபிரிக்க அணியில் இணைந்த டேல் ஸ்டெய்ன்

இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள……

இதேவேளை, இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதன் மூலம்  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

தென்னாபிரிக்கா – 256/7 (50) – குயிண்டன் டி கொக் 69, டேவிட் மில்லர் 69*, ஜே.ஜே. ஸ்மட்ஸ் 31, ஆதில் ரஷீட் 51/3, மொயீன் அலி 42/1, சகீப் மஹ்மூட் 17/1

இங்கிலாந்து – 257/8 (43.2) – ஜோ டென்லி 66, ஜோ ரூட் 49, ஜொனி பெயார்ஸ்டோவ் 43, டொம் பென்டன் 32, ப்யூரன் ஹென்ரிக்ஸ் 59/3, லுங்கி என்கிடி 63/3

முடிவு – இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் – ஆதில் ரஷீட்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<