IPL Playoffs, இறுதிப் போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

Indian Premier League 2022

118

இந்தியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் (IPL) பிளே-ஆப் மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை நடைபெறும் இடங்களை பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

IPL தொடரின் 15 ஆவது அத்தியாயம் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி முதல் நடைபெற்று வருவதுடன், லீக் போட்டிகள் அனைத்தும் மே மாதம் 22 ஆம் திகதியுடன் நிறைவடையும். கொரோனா பரவலால் IPL தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இம்முறை IPL தொடரின் பிளே-ஆப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி என்பன நடைபெறும் இடங்களை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

அதன்படி, இந்த ஆண்டு IPL தொடரின் முதல் தகுதிச் சுற்று (Qualifier-1) மற்றும் எலிமினேட்டர் சுற்றுப் போட்டிகள் கொல்கத்தாவிலும், இரண்டாவது தகுதிச் சுற்று (Qualifier-2) மற்றும் இறுதிப் போட்டி அகமதாபாத்திலும் நடைபெறும் என தெரிவித்துள்ளார் .

முதல் தகுதிச் சுற்றுப் போட்டி (Qualifier-1) மே 24 ஆம் திகதியும், எலிமினேட்டர் சுற்றுப் போட்டி மே 25 ஆம் திகதியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி (Qualifier-2) மே 27 ஆம் திகதியும், இறுதிப் போட்டி மே 29 ஆம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

இதனிடையே, இந்த ஆண்டு பிளே-ஆப் சுற்று மற்றும் இறுதிப் போட்டிக்கு 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதேவளை, IPL தொடரின் ஓர் அங்கமாக நடைபெற்று வருகின்ற மகளிருக்கான T20 சவால் கிண்ணத் தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை புனேவில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ட்ரையல்ப்லேசர்ஸ், சுபர்நோவாஸ் மற்றும் வெலோசிடி ஆகிய 3 அணிகள் பங்குபற்றும் இந்தப் போட்டித் தொடரின் கீழ் இறுதிப் போட்டி உள்ளடங்கலாக 4 போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<