டோனியை பின்பற்றி ஓய்வை அறிவித்தார் சுரேஸ் ரெய்னா

265

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி ஓய்வை அறிவித்திருந்த ஒருசில நிமிடங்களில், இந்திய அணியின் மற்றுமொரு அனுபவ வீரரான சுரேஸ் ரெய்னா, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

மகேந்திரசிங் டோனியின் பாணியில் தன்னுடைய ஓய்வையும், சுரேஸ் ரெய்னா இன்ஸ்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டோனி மற்றும் ரெய்னா ஆகியோர் ஐ.பி.எல். தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகின்றனர்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டோனி

ஐக்கிய அரபு அமீரகத்தில் இம்முறை ஐ.பி.எல். தொடர் நடைபெறவுள்ளதுடன், குறித்த தொடருக்கான குறுகிய கால பயிற்சி ஒன்றிற்காக, இருவரும் சென்னை வருகைத்தந்துள்ளனர். இந்தநிலையில், இருவரும் அடுத்தடுத்து, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளமை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுரேஸ் ரெய்னா தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஓய்வு பதிவில், “உங்களுடன் (டோனியுடன்) விளையாடும் போது, மிகவும் மகிழ்ச்சியாக உணருவேன். அதற்கு மத்தியில் நான் ஒன்றும் இல்லை. எனது உள்ளத்தின் முழு பெருமையுடன் உங்களின் (டோனியின்) பாதையை தொடர முடிவெடுத்துள்ளேன். இந்தியாவுக்கு நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் மறக்கமுடியாத இடதுகை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ரெய்னா, இந்திய அணிக்கான மிக முக்கிய வெற்றிகளில் பங்கு வகித்தவர். எனினும், இவருக்கு ஏற்பட்டுவந்த உபாதைகள் காரணமாக தொடர்ந்தும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

சுரேஸ் ரெய்னா, இறுதியாக இந்திய அணிக்காக 2018ம் ஆண்டு விளையாடியிருந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியிலேயே இவர் இறுதியாக விளையாடியிருந்தார். அதன் பின்னர், இந்திய அணியை எந்தவொரு போட்டியிலும் இவர் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

Video – IPL தொடரின் மறுவடிவமா? LPL | Cricket Galatta Epi 32

முழு துடுப்பாட்ட வீரராக இந்திய அணியில் விளையாடியிருந்த சுரேஸ் ரெய்னா, 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 T20 போட்டிகளில் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இதில், டெஸ்ட் போட்டிகளில் 768 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டிகளில் 5 சதங்கள், 36 அரைச்சதங்கள் உள்ளடங்களாக 5615 ஓட்டங்களையும், T20 போட்டிகளில் 1190 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

சுரேஸ் ரெய்னா துடுப்பாட்ட வீரராக மாத்திரமின்றி, பகுதிநேர சுழல் பந்துவீச்சாளராகவும் இந்திய அணிக்கு பலம் சேர்த்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 62 விக்கெட்டுகளை இவர் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<