இறுதி நொடி வரையிலான போராட்டத்தில் யாழ் சென் மேரிசை வீழ்த்தியது சுபர் சன்

2930
Super Sun vs St.Mary''s

இந்த பருவகால FA கிண்ண சுற்றுத் தொடரின் 16 அணிகளுக்கு இடையிலான மோதலின் ஒரு போட்டியாக இடம்பெற்ற விறு விறுப்பான ஆட்டத்தில் களுத்துறை சுபர் சன் விளையாட்டுக் கழகம், யாழ்ப்பாணம் சென் மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது.

இறுதி நிமிடம் வரையிலான போராட்டத்தின் முடிவில் பெற்ற இந்த வெற்றியின் மூலம், தொடரின் இறுதி 8 அணிகளுக்குள் முன்னேறும் வாய்ப்பு சுபர் சன் அணிக்கு கிடைத்துள்ளது.  

பொலிஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள பாடும் மீன்

இதற்கு முன்னைய சுற்றில் சுபர் சன் அணி, டிவிஷன் 1 அணியான மாவனல்லை செரண்டிப் விளையாட்டுக் கழகத்தை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியிருந்தது. அதேபோன்று, யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு டிவிஷன் 1 அணியான சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம், புத்தளம் விம்பிள்டன் விளையாட்டுக் கழகத்தை 12-0 என்ற கோல்கள் கணக்கில் அபாரமாக வெற்றி கொண்டு இந்த சுற்றுக்குத் தெரிவாகியிருந்தது.

பேருவளை மற்றும் களுத்துறையைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களது ஆதரவுக்கு மத்தியில் களுத்துறை வெர்னன் பெர்னாண்டோ அரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் சில நிமிடங்களில் இரு தரப்பினரும் சம அளவிலான வாய்ப்புக்களுடன் மோதினர்.

இரு திசையின் கோல்கள் வரை பந்து மாறி மாறி சென்று வந்த போதும், பின்கள வீரர்களின் தடுப்புக்கள் மூலம் கோல்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் பெறப்படவில்லை.

சென் மேரிஸ் வீரர் அன்றனி நெக்னோ, தமது பெனால்டி எல்லையில் வைத்து எதிரணி வீரரை முறையற்ற விதத்தில் வீழ்த்தியமையினால் சுபர் சன் அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று வழங்கப்பட்டது. எனினும் அதன்போது சப்ராஸ் கைஸ் உதைந்த பந்தை, மேரிசின் கோல் காப்பாளர் சுதர்சன் சிறந்த முறையில் பாய்ந்து தடுத்தார்.

அதனைத் தொடர்ந்தும் சுபர் சன்னின் முன்கள வீரர் கைசுக்கு ஒருசில கோல் போடும் வாய்ப்புக்கள் கிடைத்தும், இறுதி நேரத்தில் அவை தடுக்கப்பட்டன.  

மேரிஸ் வீரர் எபிரோன், எதிர் தரப்பினரின் கோல் வரை பந்தை கொண்டு சென்று, கோல் பெறுவதற்கான இறுதி முயற்சியை மேற்கொள்ளும்பொழுது கோல் காப்பாளர் நிஷாட் அதனைத் தடுத்து பந்தை தன்னகப்படுத்தினார்.

முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் இரு அணி வீரர்களும் எதிரணி வீரர்களுடன் முட்டி மோதி விளையாடிக்கொண்டிருந்தனர்.

முதல் பாதி: சுபர் சன் விளையாட்டுக் கழகம் 0 – 0 சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியின் முதல் முயற்சியாக மேரிஸ் வீரர் மதிவதனன் மத்திய களத்தில் இருந்து கோலை நோக்கி வேகமாக உதைய, பந்து கம்பங்களுக்கு மேலால் உயர்ந்து சென்றது. அதற்கு அடுத்த நிமிடத்தில் றெக்னோ ஹெடர் மூலம் மேற்கொண்ட முயற்சியும் வீணானது.

பின்னர் சுபர் சன் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின்போது, நுவன் பிரியன்கர உதைந்த பந்தும் கோல் கம்பங்களை விட உயர்ந்து சென்றது.

பலத்த போராட்டத்தின் பின் செரண்டிப் அணியை தோற்கடித்த சுபர் சன்

சில நிமிடங்களில் சுபர் சன் வீரர் ஒருவரின் கையில் பந்து பட்டமையினால் மேரிஸ் வீரர்களுக்கு கோலுக்கு நேராக ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. இதன்போது ஜக்சன் உதைந்த மிகவும் நுணுக்கமான உதை கோலை அண்மித்த வகையில் வெளியேறியது.

பின்னர் மீண்டும் கிடைத்த ப்ரீ கிக்கின்போது, எபிரோன் வழங்கிய பந்தை நிதர்சன் சிறந்த முறையில் நெஞ்சினால் தடுத்து மதிவதனனுக்கு வழங்க, இறுதியாக அவர் கோலை இலக்கு வைத்து உதைந்தார். எனினும் பந்து கோல் கம்பத்தை அண்மித்த வகையில் வெளியே சென்றது.

தொடர்ந்து, பேருவளை தரப்பின் பின்கள வீரர் பயாசில் நீண்ட தூரத்திலிருந்து வழங்கிய பந்தை ரிஷ்மார்க் தலையால் முட்டி கோலுக்குள் செலுத்த, கோல்காப்பாளர் சுதர்சன் பந்தை இலகுவாகப் பிடித்தார்.

பின்னர் மேரிஸ் வீரரிடமிருந்து பந்தைப் பெற்ற சுபர் சன் கோல் காப்பாளர் நிஷாட், மிக மோசமாகப் பந்தைக் கையாண்டமையினால் மீண்டும் மேரிஸ் வீரர்களுக்கு கோல் பெறுவதற்கான அறிய வாய்ப்பு கிடைத்தது. எனினும் அதன்போது கோலை நோக்கி சென்ற பந்தை சஸ்னி வெளியே தட்டி விட்டார்.

நுவன் பிரியன்கர எல்லைக் கோட்டிற்கு அருகாமையினால் மிக நீண்ட தூரத்திற்கு பந்தை எடுத்துச் சென்று, மேரிசின் கோல் திசையில் அவ்வணியின் இரண்டு வீரர்களைக் கடந்து வந்து கோலை நோக்கி உதைய, சுதர்சன் பந்தைத் தட்டி விட்டார்.

எனினும் மற்றொரு வீரர் பந்தை கொழும்பு ஸாஹிராக் கல்லூரி அணியின் தலைவர் பரூட் பாயிசுக்கு வழங்கியதும், கோல் காப்பாளர் தனது இடத்தில் இல்லாததை அவதானித்த பரூட் பந்தை மிக வேகமாக கோலுக்குள் செலுத்தி போட்டியில் சுபர் சன் கழகத்தை முன்னிலைப்படுத்தினார்.

மேரிஸ் வீரர்கள் பெற்ற கோணர் உதையின்போது, றெக்னோ ஹெடிங் மூலம் பந்தை செலுத்த, அது கம்பங்களுக்கு சற்று உயர்ந்தவாறு சென்றது.

ஆட்டத்தை சமப்படுத்துவதற்கான சிறந்த கோல் வாய்ப்பாக, தனக்கு வந்த பந்தை நிதர்சன், மதிவதனனுக்கு தட்டிவிட, கோலை நோக்கி மதி உதைந்த பந்து கம்பங்களை சற்று அண்மித்த வகையில் வெளியே சென்றது.

ஆட்டம் மிகவும் விறுவிறுப்படைந்து சென்றுகொண்டிருக்கையில், மத்திய களத்தில் இருந்து நிதர்சனுக்கு வழங்கிய பந்தை அவர் ஹெடர் மூலம் கோலுக்குள் செலுத்தினார். இதன்போது பந்தை கோல் காப்பாளர் பாய்ந்து தட்டினார். எனினும், நிதர்சன் ஓப் சைட் இருந்ததாக எல்லையில் இருந்த நடுவர் சைகை காண்பித்தார்.

போட்டியின் இறுதி நிமிடம் வரை மேரிஸ் வீரர்கள் தமக்கான முதல் கோலைப் பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும், போராட்டங்களும் எதிர் தரப்பான சுபர் சன் வீரர்களுக்கு கடும் அழுத்தமாக இருந்தது என்றே கூறவேண்டும்.

முழு நேரம்: சுபர் சன் விளையாட்டுக் கழகம் 1 – 0 சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம்

Thepapare.com இன் ஆட்ட நாயகன்: நுவன் பிரியன்கர (சுபர் சன் விளையாட்டுக் கழகம்)

வளமேதுமின்றி வளர்ந்துநிற்கும் நாவாந்துறை சென். மேரிஸ் அணி

போட்டியின் பின்னர் Thepapare.com இடம் கருத்து தெரிவித்த சுபர் சன் அணியின் பயிற்றுவிப்பாளர் நூர்தீன், ”இன்றைய ஆட்டம் இறுதி வரை இடம்பெற்ற மிகவும் சிறந்த ஒரு மோதலாக இருந்தது. நாம் இந்த FA கிண்ணத்தில் மோதிய அணிகளில் மிகவும் பலம் வாய்ந்த, கடுமையான அழுத்தம் தந்த ஒரு அணியாக சென் மேரிஸ் அணியே இருந்துள்ளது.

இதற்கு அடுத்த போட்டி பிரபலமான படைத்தரப்பின் அணியொன்றுடன் இடம்பெறவுள்ளது. முன்னர் இருந்த எமது அணியுடன் ஒப்பிடும்பொழுது, தற்போதைய அணியில் சிறந்த முன்னேற்றம் காணப்படுகின்றது. எனவே எமது வீரர்கள் அடுத்த கட்டத்தில் எதிரணிக்கு எதிராக சிறந்த ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்” என்றார்.

கோல் பெற்றவர்கள்

சுபர் சன் விளையாட்டுக் கழகம் – பரூட் பாயிஸ்