களுத்துறை வெர்னன் பெர்னாண்டோ மைதானத்தில் நடைபெற்ற FA கிண்ணத்தின் இறுதி 32 சுற்றில் மாவனல்லை செரண்டிப் விளையாட்டுக் கழகத்தை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி சுபர் சன் விளையாட்டு கழகம் அடுத்த சுற்றிற்கு தெரிவாகியது.
ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தை 3-0 என இலகுவாக வீழ்த்தி சுபர் சன் விளையாட்டுக் கழகம் இச்சுற்றுக்கு தெரிவாகியிருந்த அதேவேளை மறுமுனையில் செரண்டிப் விளையாட்டுக் கழகம் பலமான மன்னார் புனித ஜோசப் அணியை 4-2 என பெனால்டி உதையில் வீழ்த்தி இறுதி 32 சுற்றுக்கு முன்னேறியது.
போட்டியின் ஆரம்பத்தில் இரு அணிகளின் வீரர்களும் சம பலத்ததுடன் ஆரம்பித்தாலும் நேரம் செல்லச்செல்ல சுபர் சன் விளையாட்டுக் கழகம் தமது ஆதிக்கத்தை மேலோங்கச் செய்தது.
எனினும் சுபர் சன் விளையாட்டுக் கழகத்தின் தவறான பின்கள முகாமைத்துவத்தினால் செரண்டிப் அணிக்கு ஒருசில வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றன. எனினும் செரண்டிப் அணியினால் அவற்றினை பயன்படுத்தி கோலாக்கிக்கொள்ள முடியாமற் போனது.
போட்டியின் முதலாவது கோலினை சுபர் சன் விளையாட்டுக் கழகம் 19ஆவது நிமிடத்தில் போட்டது. தமக்கு வழங்கப்பட்ட கோர்னர் கிக் வாய்ப்பை நுவன் ப்ரியங்கர தலையினால் அடித்து (Header) கோலாக மாற்றினார்.
அதன் பின்பு தொடர்ந்து தமது ஆதிக்கத்தினை தக்கவைத்தது சுபர் சன் விளையாட்டுக் கழகம்.
எனினும் முதல் பாதியின் இறுதி நேரத்தில் மொஹமட் ஹபீல் கையால் பந்தினை கையாண்டதனால் செரண்டிப் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. எனினும் கிடைக்கப்பெற்ற வாய்ப்பினை அமீர் அலி நேராக கோல் காப்பாளரின் கைகளுக்கு உதைந்து வாய்ப்பை வீணாக்கினார்.
முதலாவது பாதியின் முடிவில் சுபர் சன் விளையாட்டுக் கழகம் 1-0 என முன்னிலை பெற்றது
முதல் பாதி – சுபர் சன் விளையாட்டுக் கழகம் 1-0 செரண்டிப் விளையாட்டுக் கழகம்
இரண்டாவது பாதியினை செரண்டிப் அணி மிகவும் உத்வேகமாக ஆரம்பித்தது. போட்டியில் சமநிலை பெற முழு முனைப்புடன் போராடினர்.
அதன் பலனாக 55ஆவது நிமிடத்தில் ரியாஸ் மொஹமட் செரண்டிப் கழகத்திற்கு கோலொன்றினைப் பெற்றுக்கொடுத்தார். பெனால்ட்டி பகுதியின் வெளியில் நின்று அவர் அடித்த அபாரமான உதை கோல் காப்பாளரைத் தாண்டி கோல் கம்பங்களுக்குள் சென்றது.
அதன் பின்பு இரு அணிகளும் வெற்றி கோலினை அடிக்கப் போராடியது.
இரு அணிகளும் ஒரு கட்டத்தில் முறையற்ற தடுப்பாட்டத்தினை கையாளத் தொடங்கியது. இதன் காரணமாக ஆறு வீரர்களுக்கு மஞ்சள் அட்டைகள் வழங்கப்பட்டன.
போட்டி சமநிலையில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட பொழுதும் போட்டியின் 85ஆவது நிமிடத்தில் சுபர் சன் அணியின் காயிஸ் சப்ராஸ் கோல் காப்பாளரைத் தாண்டி அபாரமாக கோலொன்றைப் போட்டு சுபர் சன் அணியின் வெற்றிக்கனவை நனவாக்கினார்.
இறுதியில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் சுபர் சன் அணி வெற்றி பெற்றது.
முழு நேரம்- சுபர் சன் விளையாட்டுக் கழகம் 2-1 செரண்டிப் விளையாட்டுக் கழகம்
ThePapare.com சிறப்பாட்டக்காரர்- மொஹமட் பருட் (சுபர் சன் விளையாட்டுக் கழகம்)
போட்டியின் முடிவில் கருத்து தெரிவித்த சுபர் சன் விளையாட்டுக் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,
“செரண்டிப் அணி மிகவும் சிறந்த அணி. நாங்கள் வாய்ப்புகளை ஏற்படுத்தினோம். அவர்களும் பதிலடி வழங்கினர். இறுதியில் நாம் வெற்றி பெற்றோம். எமது அணி இளம் வீரர்களைக் கொண்ட அணி. நாம் அடுத்த போட்டியில் வெல்ல நிச்சயம் பாடுபடுவோம்” என்று கூறினார்.
செரண்டிப் அணியின் முகாமையாளர் மொஹமட் நவ்சில் கருத்து தெரிவிக்கையில்,
“எமது அணி பெருமை கொள்ளும்படி விளையாடியது. சுபர் சன் விளையாட்டுக் கழகம் சுபர் லீக் விளையாடும் அணியினர். அவர்களுக்கு இத்தகைய போராட்டத்தை அளித்தது சிறந்த விடயம். வெற்றிபெறவே இங்கே வந்தோம். பெனால்டி கை நழுவிய போதும் நம்பிக்கை இருந்தது. இத்தொடரில் இவ்வளவு தூரம் முன்னேறியமை மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் சிறப்பாக செயற்பட உத்வேகம் உள்ளது” எனத் தெரிவித்தார்.
கோல் அடித்தவர்கள்
சுபர் சன் விளையாட்டுக் கழகம் – நுவன் பிரியங்கர 19′, காயிஸ் சப்ராஸ் 85′
செரண்டிப் விளையாட்டுக் கழகம் – ரியாஸ் மொஹமட் 55′மஞ்சள் அட்டை
சுபர் சன் விளையாட்டுக் கழகம் – மொஹமட் ஹபீல், காயிஸ் சப்ராஸ், நுவன் பிரியங்கர, மொஹமட் அப்துல்லா
செரண்டிப் விளையாட்டுக் கழகம் – மொஹமட் முபீட், மொஹமட் பாசித், மொஹமட் முன்சிப்