அப் கண்ட்ரி லயன்ஸை வீழ்த்திய சீ ஹோக்ஸ்; ரினௌன் – புளூ ஸ்டார் மோதல் சமநிலையில்

Super League 2021

217

சுபர் லீக் கால்பந்து தொடரின் நான்காம் வாரத்திற்காக திங்கட்கிழமை (06) இடம்பெற்ற ஒரு போட்டியில் அப் கண்ட்ரி லயன்ஸ் கால்பந்து கழகத்தை 1-0 என சீ ஹோக்ஸ் கால்பந்து கழகம் வீழ்த்தியது. புளூ ஸ்டார் மற்றும் ரினௌன் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான போட்டி கோல்கள் இன்றி சமநிலையில் நிறைவடைந்தது.

அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க எதிர் சீ ஹோக்ஸ் கா.க

சுகததாஸ அரங்கில் திங்கட்கிழமை (6) இடம்பெற்ற இரண்டாவது போட்டியின் ஆரம்ப 45 நிமிடங்கள் முழுமையாக அப்கண்ட்ரி லயன்ஸ் அணியின் ஆதிக்கத்தில் இருந்தது.

ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களில் காலித் அஸ்மில் கோல் நோக்கி அடித்த பந்து இடது பக்க கம்பத்தில் பட்டு வந்தது. அதன் பின்னரும் அந்த அணி வீரர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் கோல் இன்றி நிறைவடைந்தது. எனினும் சீ ஹோக்ஸ் வீரர்கள் முதல் பாதியில் கோலுக்கான எந்த ஒரு உதையையும் பெறவில்லை.

எனினும், கோல்கள் இன்றிய நிலையில் ஆரம்பமான இரண்டாம் பாதி ஆட்டத்தில் முதல் பாதி போன்று இல்லாமல் சீ ஹோக்ஸ் அணியினரும் சிறந்த பந்து பரிமாற்றங்களுடன் ஆடினர்.

இறுதி நிமிடம் வரை இரண்டு அணி வீரர்களும் கோலுக்காக போராடிய நிலையில் சீ ஹோக்ஸ் அணிக்கு மாற்று வீரராக வந்த தனுஷ்க மதுசங்க போட்டியின் உபாதையீடு நேரத்தில் கோலுக்கு சற்று தொலைவில் இருந்து கோலின் வலது பக்கத்தினால் பந்தை செலுத்தி போட்டியின் வெற்றி கோலைப் பதிவு செய்தார்.

இந்த முடிவுடன் சீ ஹோக்ஸ் அணி தாம் ஆடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது. அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர்கள் தமது 4 போட்டிகளின் நிறைவில் இரண்டு வெற்றிகள், ஒரு சமநிலை மற்றும் ஒரு தோல்வியுடன் தொடர்ந்தும் 7 புள்ளிகளுடன் உள்ளது.


ரினௌன் வி.க எதிர் புளூ ஸ்டார் வி.க

திங்கட்கிழமை முதல் போட்டியாக இடம்பெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் புளூ ஸ்டார் வீரர்கள் கோலுக்கான சில வாய்ப்புக்களைப் பெற்றாலும் அவற்றை கோலாக நிறைவு செய்யாமையினால் முதல் பாதி கோல்கள் இன்றி நிறைவடைந்தது.

எனினும், இரண்டாம் பாதியில் ரினௌன் அணி வீரர்கள் எதிரணியின் கோல் எல்லையில் கோலுக்கான பல வாய்ப்புக்களை அடுத்தடுத்து பெற்றனர். இதில் அவ்வணியின் ஜொப் மைக்கல் இலகுவான வாய்ப்புக்களை பெற்ற போதும் எதனையும் கோலுக்காக நிறைவு செய்யவில்லை.

எனவே, வாய்ப்புக்கள் வீணடிக்கப்பட்ட இந்த போட்டி கோல்கள் எதுவும் இன்றி சமநிலையில் நிறைவு பெற்றது.

இந்த முடிவுடன் புளூ ஸ்டார் அணி 4 போட்டிகள் நிறைவில் இரண்டு வெற்றிகள், ஒரு சமநிலை மற்றும் ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதேவேளை, ரினௌன் அணி 4 போட்டிகள் நிறைவில் இரண்டு சமநிலை மற்றும் இரண்டு தோல்விகளுடன் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

முழு நேரம்: ரினௌன் வி.க 0 – 0 புளூ ஸ்டார் கா.க 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<