பாரிஸ் 2024 ஒலிம்பிக் பதக்கங்கள் அறிமுகம்

Paris 2024 Olympic Games

144
Paris 2024 Olympic Games

பாரிஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படவுள்ள பதக்கங்கள் நேற்று (08) உத்தியோகப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டன.

இதில் சிறப்பம்சம் என்னவெனில் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கான பதக்கங்களில் தனித்துவமான அம்சமாக உலகப்புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தின் இரும்பு துண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

33ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 200 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த நிலையில், இம்முறை ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு இன்னும் 5 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் வெற்றியாளருக்கு வழங்கப்படும் பதக்கங்கள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

பாரிஸில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இம்முறை ஒலிம்பிக் பதக்கத்தில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களை பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழா ஏற்பாட்டுக் குழு தெளிவுபடுத்தியது.

பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் விளையாட்டு விழாவிற்காக மொத்தம் 5,084 பதக்கங்கள் தயாரிக்கப்படுகிறது. இவற்றில் 2,600 பதக்கங்கள் ஒலிம்பிக்கிலும், மீதமுள்ள பதக்கங்கள் பாராலிம்பிக்கிலும் வழங்கப்பட உள்ளது.

பதக்கத்தின் முன்பக்கத்தில் கிரேக்கத்தின் வெற்றி கடவுளான நைக்கி ஏதென்ஸ் அரங்கத்தின் முன் நிற்பது போன்றும், ஒலிம்பிக் வளையம் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக்கின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரான்ஸின் தனி அடையாளமான உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தின் சின்னமும் ஒரு ஓரத்தில் இடம்பெற்றுள்ளது.

பதக்கத்தின் பின்பக்கத்தில் ஈபிள் கோபுரத்தின் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஈபிள் கோபுரத்தை புதுப்பித்த போது அதில் இருந்து அகற்றப்பட்ட இரும்பு உலோகங்கள் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை செதுக்கி, போலிஸ் செய்து சிறிய துண்டுகளாக அறுங்கோண வடிவத்தில் பதக்கத்தின் பின்பகுதியில் பதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பதக்கத்திலும் ஈபிள் கோபுரத்தின் 18 கிராம் இரும்பு அடங்கியிருக்கும். இவற்றை பிரான்ஸின் பிரபல ஆபரண நிறுவனமான சவ்மெட் வடிவமைத்துள்ளது.

1889ஆம் ஆண்டு உருவான ஈபிள் கோபுரத்தில் இருந்து ஒரு பகுதியை ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் அனைவருக்கும் வழங்க வேண்டும் விரும்பினோம். அதை நிறைவேற்றி உள்ளோம் என்று போட்டி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டோனி எஸ்டான்கட் குறிப்பிட்டார்.

இம்முறை ஒலிம்பிக் பதக்கம் 85 மில்லிமீட்டர் சுற்றளவும், 9.2 மில்லிமீட்டர் அடர்த்தியும் கொண்டது. தங்கப் பதக்கம் 529 கிராம் எடை கொண்டது. இது முற்றிலும் தங்கத்தால் செய்யப்பட்டது அல்ல. வெள்ளியால் உருவாக்கப்பட்ட இந்த பதக்கத்தில் 6 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும். வெள்ளிப் பதக்கம் 525 கிராமும், வெண்கலம் 455 கிராமும் எடை கொண்டது.

பாராலிம்பிக் பதக்கத்தில் ஒரு பக்கத்தில் ஈபிள் கோபுரத்தின் தோற்றம் பொறிக்கப்பட்டுள்ளது. இம்முறை பாராலிம்பிக் விளையாட்டு விழா ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<