டிபெண்டர்ஸ் அணியை இலகுவாக வீழ்த்திய அப்கண்ட்ரி லயன்ஸ்

Super League 2021

388

நீண்ட ஒரு இடைவேளையின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சுபர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய (29) போட்டியில் அப்கண்ட்ரி லயன்ஸ் கால்பந்து கழகம் 2-0 என்ற கோல்கள் கணக்கில் டிபெண்டர்ஸ் கால்பந்து கழகத்தை வீழ்த்தியுள்ளது.

இந்த வருடத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அங்குரார்ப்பண சுபர் லீக் தொடரின் மூன்றாவது வாரத்திற்கான போட்டிகளுடன் தேசிய அணியின் பயிற்சிகள் மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்காக ஒரு இடைவேளை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஏற்கனவே மூன்றாவது வாரத்திற்காக இடம்பெற இருந்து, வீரர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியமையினால் ஒத்திவைக்கப்பட்ட இந்தப் போட்டியே எஞ்சிய போட்டிகளுக்கான ஆரம்பப் போட்டியாக இன்று சுகததாஸ அரங்கில் இடம்பெற்றது.

ஏற்கனவே முன்னைய போட்டிகளில் விளையாடிய வெளிநாட்டு வீரர்கள் யாரும் இன்றியே டிபெண்டர்ஸ் அணி இன்றைய போட்டியில் விளையாடியது.

ஆட்டத்தின் ஆரம்ப நிமிடம் முதல் பந்துப் பரிமாற்றங்கள் மற்றும் சிறந்த தடுப்பாட்டத்தினை மேற்கொண்ட அப்கண்ட்ரி லயன்ஸ் வீரர்களுக்கு எதிராக டிபெண்டர்ஸ் வீரர்கள் அதிகமான கோல் முயற்சிகளை எடுத்தனர். எனினும், டிபெண்டர்ஸ் வீரர்கள் கோல் வாய்ப்புக்களை சிறப்பாக நிறைவு செய்யத் தவறினர். அதேபோன்று, டிபெண்டர்ஸ் வீரர்கள் எடுத்த இரண்டு சிறந்த முயற்சிகளை கோல் காப்பாளர் சுஜான் சிறப்பாகத் தடுத்தார்.

ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் மத்திய களத்தின் ஒரு திசையில் இருந்து அப்கண்ட்ரி லயன்ஸ் வீரர்களுக்கு கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை காலித் அஸ்மில் உள்ளனுப்ப, அதனை அப்கண்ட்ரி லயன்ஸ் வீரர்கள் கம்பங்களுக்குள் ஹெடர் செய்ய முயற்சித்தபோது டிபெண்டர்ஸ் அணித் தலைவர் ஜேசுராஜ் பேனார்டின் உடம்பில் பந்து பட்டு ஓன் கோலாக மாறியது. இதனால் அப்கண்ட்ரி லயன்ஸ் வீரர்கள் போட்டியில் முன்னிலை பெற்றனர்.

மீண்டும் ஆட்டத்தின் இரண்டாவது பாதி ஆரம்பமாகியதிலிருந்து அப்கண்ட்ரி லயன்ஸ் வீரர்கள் கோலுக்கான அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொண்டாலும் அவற்றினால் சிறந்த நிறைவுகள் பெறப்படவில்லை.

போட்டியின் 85 நிமிடங்கள் கடந்த நிலையில் அப்கண்ட்ரி லயன்ஸ் அணிக்கு கிடைத்த கோணர் வாய்ப்பின்போது காலித் அஸ்மில் உள்ளனுப்பிய பந்தை டிபெண்டர்ஸ் கோல் காப்பாளர் நுவன் கிம்ஹான வெளியே செல்லும் வகையில் தடுக்கும்போது, பந்து அவரது கைகளில் பட்டு கோலுக்குள் சென்றது.

இதனால், போட்டி நிறைவில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற அப்கண்ட்ரி லயன்ஸ் அணி தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. தமது முதல் இரு போட்டிகளையும் சமநிலையில் முடித்த டிபெண்டர்ஸ் அணிக்கு இது முதல் தோல்வியாகும்.

முழு நேரம்: அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க 2 – 0 டிபெண்டர்ஸ் கா.க 

கோல் பெற்றவர்கள்

  • அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க –  ஜேசுராஜ் பேனார்ட் (OG) 27‘, காலித் அஸ்மில் 86ss‘

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<