இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் அணியில் இணைந்த அதிரடி வீரர்

462

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சிட்டகொங்கில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

[rev_slider LOLC]

இந்நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் டெஸ்ட் குழாம் நேற்று (04) அறிவிக்கப்பட்டது.

பங்களாதேஷ் டெஸ்ட் அணியில் அண்மைக்காலமாக தொடர்ந்து விளையாடி வந்த அனுபவமிக்க மத்திய வரிசை வீரரான சபிர் ரஹ்மான் மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருட இறுதியில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணியில் இடம்பெற்றிருந்த சபிர் ரஹ்மான், எதிர்பார்த்த அளவு திறமைகளை வெளிப்படுத்தவில்லை. இதன் காரணமாக இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்குவதற்கு அந்நாட்டு தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வரிசையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் சபிர் ரஹ்மானை மீண்டும் டெஸ்ட் அணியில் இணைத்துக்கொள்ள அந்நாட்டு தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் அவ்வணிக்காக விளையாடிய சுழல் பந்துவீச்சாளரான சுன்சமுல் இஸ்லாம் மற்றும் ருபைல் ஹொசைன் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் ருபெல் ஹொசைன் முதல் போட்டியில் விளையாடாவிட்டாலும், சன்சுமுல் இஸ்லாம் குறித்த போட்டியில் 45 ஓவர்கள் பந்துவீசி 153 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் வெற்றி வாய்ப்பை சிதறடித்த மோமினுலின் சதம்; போட்டி சமநிலையில் முடிவு

இதேவேளை, இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர் முதல் அவ்வணியின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட சகிப் அல் ஹசன், கைவிரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடமாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில், சகிப் அல் ஹசனுக்குப் பதிலாக சுமார் 4 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷ் டெஸ்ட் குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்ட அனுபவமிக்க வீரரான 35 வயதுடைய அப்துர் ரசாக், 2ஆவது டெஸ்ட் போட்டியில் இறுதி பதினொருவர் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை அணிக்கு எதிரான பங்களாதேஷ் குழாம்

மஹ்முதுல்லா ரியாத் (தலைவர்), தமீம் இக்பால், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், இம்ருல் கைஸ், மொமினுல் ஹக், மொஸாதிக் ஹொசைன், சபிர் ரஹ்மான், தஜிஉல் இஸ்லாம், முஸ்தபிசூர் ரஹ்மான், கம்ருல் இஸ்லாம் ரப்பி, மெஹிதி ஹசன் மீராஸ், தன்பிர் ஹைதர், நயீம் ஹசன், அப்துர் ரசாக்