யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய அணிகள் மோதும் 111 ஆவது வடக்கின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டி இன்று யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற, சென் ஜோன்ஸ் கல்லூரி அணித்தலைவர் ஜெனி பிளமின் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் மத்திய கல்லூரியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஜெயதர்சன் ஓட்டமேதுமின்றியும் அணித்தலைவர் பிரியலக்சன் 4 ஓட்டங்களுடன் ஓய்வரைக்கு நடையைக்கட்ட தொடர்ந்து வந்த கோமேதகனும் ஓட்டமேதுமின்றி ஆட்டமிழந்தார்.

அதற்கு அடுத்த பந்தில் ஜெரோசனும் நேரடியாக இலக்குத் தகர்க்கப்பட (Bowled), மத்திய கல்லூரி அணி 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.  

பெல், அஸ்லோப் ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டத்தினால் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு முதல் வெற்றி

மறுபுறத்தில் அதிரடி காட்டிக்கொண்டிருந்த கௌதமன் நன்கு பௌண்டரிகள், இரண்டு சிக்சர்கள் உள்ளடங்கலாக 35 ஓட்டங்களைப் பெற்று மைதானம் விட்டு அகன்றார். சற்று நிலைத்த  சஜீபனும்(19) ஆட்டமிழக்க 80 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் ஆறாவது விக்கெட்டையும் இழந்திருந்தது யாழ் மத்திய கல்லூரி அணி.

எனினும் பின்னர் ஏழாவது விக்கெட்டுக்காக இணைந்த கார்த்தீபன், தசோபன் இணை 50 ஓட்டங்களைப் பகிர, கார்த்திபன் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து செல்ல, மறுமுனையில் நிதானமாக ஆடிய தசோபன் 48 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

துசாந்தன் மற்றும் நிக்சன் ஆகியோர் ஒற்றையிலக்கத்துடன் நடையைக்கட்ட, உதிரிகளாகப் பெறப்பட்ட 12 ஓட்டங்களுடன்  யாழ் மத்திய கல்லூரி அணி முதல் இனிங்சிற்காக 164 ஓட்டங்களைப் பதிவு செய்தது.

பந்து வீச்சில் கபில்ராஜ் 4 விக்கெட்டுகளையும், யதுசன், அபினாஷ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

[rev_slider dfcc728]
.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சிற்காகக் களமிறங்கிய சென் ஜோன்ஸின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் 68 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில், துலக்சன் 42 ஓட்டங்களோடும் சோமஸ்கரன் 14 ஓட்டங்களோடும் களம் விட்டகன்றனர்.

பின்னர் தேவப்பிரசாத்தும் ஒரு ஓட்டத்தோடு அடுத்த ஓவரில் நடையைக் கட்டினார். நிலைத்து நின்று ஆடிய கிசாந்துஜன் 29 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார்.

பின்னர் களத்திற்கு வந்த யோசப் ஸ்ரலோன் 4 ஓட்டங்களோடு இன்றைய நாளின் இறுதிப் பந்தில் ஆட்டமிழக்க, மறுமுனையில் 7 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார் அணித்தலைவர் ஜெனி பிளமின்.

உதிரிகளாக 17 ஓட்டங்கள் கிடைக்கப் பெற 114 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து, மத்தியை விட 50 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இன்றைய  நாள் ஆட்டத்தை நிறைவு செய்தது சென் ஜோன்ஸ் அணி.

பந்து வீச்சில் தசோபன் 3 விக்கெட்டுகளையும், துசாந்தன் 2 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தனர்.

நாளை இடம்பெறவுள்ள இப்போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தையும் நீங்கள் ThePapare.com ஊடாக கண்டுகளிக்க முடியும் என்பதனையும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.

நாளைய போட்டியைக் நேரடியாகப் பார்வையிட

போட்டியின் சுருக்கம்