பெல், அஸ்லோப் ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டத்தினால் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு முதல் வெற்றி

1173
SL A v ENG Lions
Getty Images

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, இங்கிலாந்து லயன்ஸ் அணி மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான, ஒரு நாள் தொடரின் நான்காவது போட்டியில் இன்று இலங்கை தரப்பினை இங்கிலாந்து லயன்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி தொடரில், முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், ஏற்கனவே நடந்த முடிந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று  இலங்கை A அணி தொடரை கைப்பற்றிய காரணத்தினால், இத்தொடரில் உள்வாங்கப்பட்டிருந்த  தேசிய அணி வீரர்களிற்கு இப்போட்டியில் ஓய்வளிக்கப்பட, இலங்கை A அணியினை மிலிந்த சிறிவர்த்தனவிற்கு பதிலாக அஷான் பிரியன்ஞன் தலைமை தாங்கியிருந்தார்.

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில், நாணய சுழற்சியினை தமதாக்கி கொண்ட இலங்கை A அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து கொண்டது.

தனுஷ்க குணத்திலக்க, மற்றும் முதலாவது List A போட்டியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றிருந்த, ரொன் சந்திரகுப்தா ஆகியோருடன் மைதானம் நுழைந்த இலங்கை A அணி, எல்லைக்கோடுகளிற்கு மேலாக பந்ததுகளை விரட்டி நல்ல ஆரம்பத்தினை வெளிக்காட்டியிருந்தது.

இலங்கை A அணியின் முதல் விக்கெட்டாக, அதிரடி துடுப்பாட்டத்தினை மீண்டும் வெளிப்படுத்தியிருந்த குணத்திலக்க, வெறும் 29 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள், ஐந்து பவுண்டரிகளை விளாசி 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து, சிறிது நேரத்தில் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சந்திரகுப்தாவும் (33) ஆட்டமிழக்க, களத்தில் நின்ற துடுப்பாட்ட வீரர்கள் சரித் அசலன்க (34) மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர், கவனமான முறையில் துடுப்பாடி நல்ல இணைப்பாட்டம் (85) ஒன்றினை மூன்றாம் விக்கெட்டுக்காக வழங்கி அணியின் ஓட்ட எண்ணிக்கையை 180 வரை கொண்டு சென்றனர்.

இவர்கள் இருவரினதும் விக்கெட்டுகளைத் தொடர்ந்து, வந்த மத்திய வரிசை வீரர் சத்துரங்க டி சில்வாவினைத் தவிர ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் யாவரும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறியதால், இங்கிலாந்து லயன்ஸ் அணிப் பந்து வீச்சில், தடுமாறிய இலங்கை A அணி 46.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 242 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது.

இலங்கை A அணி சார்பாக துடுப்பாட்டத்தில், அரைச்சதம் கடந்த சதீர சமரவிக்ரம 52 பந்துகளுக்கு 6 பவுண்டரிகள் உள்ளடங்களாக, 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அத்துடன், சத்துரங்க டி சில்வா ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களுடன் நின்றிருந்தார்.

இங்கிலாந்து லயன்ஸ், அணியின் பந்து வீச்சில் டொபி ரோலன்ட்-ஜோன்ஸ் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் வைட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியதோடு, இலங்கை தரப்பின் ஆரம்ப துடுப்பாட்ட  வீரர்களை போல்ட் செய்த லியாம் லிவிங்ஸ்டன் இரண்டு விக்கெட்டுகளை தனக்கு சொந்தமாக்கியிருந்தார்.

பின்னர், 243 ஓட்டங்கள் என்கிற வெற்றியி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி, தமது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் கீட்டன் ஜென்னிஸ் மற்றும் பென் டக்கெட் ஆகிய இருவரினையும் போட்டியின் ஆரம்பத்திலேயே விக்கும் சஞ்சயவின் வேகத்திற்கு பலியாக்கியது.

எனினும், அப்போது களத்தில் நின்ற, டேனியல் பெல்-டிரம்மொன்ட் மற்றும் டொம் அஸ்லோப் ஆகியோர் மூன்றாம் விக்கெட்டுக்காக நுணுக்கமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி பெற்ற 200  ஓட்ட இணைப்பாட்டத்தினால், முடிவில், 47.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து லயன்ஸ் அணி 246 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கினை அடைந்தது.

இதில், பெல்-டிரம்மொன்ட் மொத்தமாக 111 பந்துகளுக்கு 100 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன், அஸ்லோப் 96 ஓட்டங்களைப் பெற்று சரித் அசலன்கவினால் சதம் கடக்கத் தவறியிருந்தார்.

இலங்கை தரப்பின் பந்து வீச்சில், விக்கும் சஞ்சய மற்றும் சத்துரங்க டி சில்வா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை தம்மிடையை பகிர்ந்து இருந்தனர்.

இரு அணிகளும் பங்குகொள்ளும், தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் 11 ஆம் திகதி இதே மைதானத்தில் (CCC) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை A அணி – 242 (46.5) – சதீர சமரவிக்ரம 54(52), தனுஷ்க குணத்திலக்க 44(29), சரித் அசலன்க 34(58), சத்துரங்க டி சில்வா 33*(34), ரொன் சந்திரகுப்தா 33(40), கிரேம் வைட் 53/3(10), டொபி ரோலன்ட்-ஜோன்ஸ் 58/3(10)

இங்கிலாந்து லயன்ஸ் அணி – 246/5 (47.2) – டேனியல் பெல்-டிரம்பொன்ட் 100(111), டொம் அஸ்லோப் 96(105), சத்துரங்க டி சில்வா 42/2(10), விக்கும் சஞ்சய 26/2(6)

போட்டி முடிவு – இங்கிலாந்து லயன்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி