அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் புதுமுக வேகப் பந்துவீச்சாளர் அபூ ஜெயிட்டின் அபார பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பான ஆட்டத்தால் பங்களாதேஷ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
முஸ்பிகுர், முஸ்தபிசூர் அபாரம்: இறுதிப் போட்டியில் பங்களாதேஷ்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டப்ளினில்……..
மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் தற்போது அயர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், அயர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான கடைசி லீக் ஆட்டம் நேற்று (15) டப்ளினில் நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 292 ஓட்டங்களைக் குவித்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் போல் ஸ்டேர்லிங் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 141 பந்துகளில் 130 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து 3ஆவது விக்கெட்டுக்காக 174 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்ற அணித் தலைவர் வில்லியம் போர்டர்பீல்ட் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 94 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பங்களாதேஷ் பந்துவீச்சில் தனது 2ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய 25 வயதுடைய இளம் வேகப் பந்துவீச்சாளர் அபூ ஜெயிட் ஜாயித் 9 ஓவர்கள் பந்துவீசி 58 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அத்துடன், மொஹமட் சைபுதீன் 2 விக்கெட்டுகளையும், ருபெல் ஹொசைன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, 50 ஓவரில் 293 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களான தமீம் இக்பால், ஜானி லிடன் தாஸ் இருவரும் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்காக 117 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுச்சேர்க்க, தமீம் இக்பால் 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய லிடன் தாஸ் 76 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து களமிறங்கிய சகிப் அல் ஹசனின் அரைச் சதம் மற்றும் முஸ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லாஹ் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் உதவியுடன் பங்களாதேஷ் அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 294 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக இளம் வேகப் பந்துவீச்சாளர் அபூ ஜெயீட் தெரிவானார்.
இதேநேரம், நாளை (17) நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.
போட்டியின் சுருக்கம்
அயர்லாந்து அணி – 292/8 (50) – போல் ஸ்டேர்லிங் 130, வில்லியம் போர்டர்பீல்ட் 94, அபூ ஜெயீட் 5/58, மொஹமட் சைபுதீன் 2/43, ரொபெல் ஹொசைன் 1/41
பங்களாதேஷ் அணி – 294/4 (43) – லிடன் தாஸ் 76, தமீம் இக்பால் 57, சகிப் அல் ஹசன் 50, முஸ்பிகுர் ரஹீம் 35, மஹ்முதுல்லாஹ் 35, போய்ட் ரென்கின் 2/48
முடிவு – பங்களாதேஷ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<