சிங்கர் டிவிஷன் – II சம்பியனாக முடிசூடிக்கொண்ட பாணதுறை புனித ஜோன்ஸ் கல்லூரி

266
Schools Cricket

இன்று நடைபெற்று முடிந்திருக்கும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – II பாடசாலைகளின் 2016/17ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மாத்தறை புனித தோமியர் கல்லூரியை முதல் இன்னிங்ஸ் வெற்றியின் மூலம் வீழ்த்தி பாணதுறை புனித ஜோன்ஸ் கல்லூரி சம்பியனாக முடிசூடிக்கொண்டது.

எனினும், இப்போட்டியில் பங்குபற்றியிருந்த இரு பாடசாலைகளும் அடுத்த பருவகாலத்தில் டிவிஷன் – 1 பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ளன.

மக்கோன சர்ரே மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியிருந்த இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த மாத்தறை புனித தோமியர் கல்லூரி முதலில் களத்தடுப்பினைத் தெரிவு செய்திருந்தது.  

இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய புனித ஜோன்ஸ் கல்லூரி அணி கவிந்து ஹஷான், சிதும் தெல்கே மற்றும் ருக்ஷான் திசாநாயக்க ஆகியோரின் சிறப்பாட்டத்துடன், 80.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் ஹஷான் அரைச்சதம் தாண்டி 59 ஓட்டடங்களையும் தெல்கே 49 ஓட்டங்களையும் திசாநாயக்க 42 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

புனித தோமியர் கல்லூரியின் பந்து வீச்சில் பிரவீன் மதுஷன் 64 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுகளையும், ஹஷிம் தில்மான் மூன்று விக்கெட்டுகளையும் பதம் பார்த்திருந்தனர்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த புனித தோமியர் கல்லூரி அணியினர் நேற்றைய ஆட்ட நேரம் நிறைவு வரை விக்கெட் இழப்பின்றி 12 ஓவர்களுக்கு 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

போட்டியின் இறுதி நாளான இன்று தமது ஆட்டத்தினை தொடர்ந்த மாத்தறை புனித தோமியர் கல்லூரி அணியினர் எதிரணியின் பந்து வீச்சினை சமாளித்து ஓட்டங்கள் சேர்ப்பதில் தடுமாற்றத்தினை எதிர் கொண்டனர்.

முடிவில், 89 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த மாத்தறை புனித தோமியர் கல்லூரி 193 ஓட்டங்களை மாத்திரமே தமது முதலாம் இன்னிங்சிற்காகப் பெற்றுக்கொண்டனர். இதனால், 14 ஓட்டங்களால் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றிருந்த பாணதுறை புனித ஜோன்ஸ் கல்லூரி போட்டியின் வெற்றியாளராகத் தீர்மானிக்கப்பட்டது.

தோமியர் கல்லூரியின் துடுப்பாட்டத்தில், அதிகபட்சமாக தருஷ கவிந்த 33 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட அதேவேளையில் பந்து வீச்சில் சிறப்பித்திருந்த புனித ஜோன்ஸ் கல்லூரி வீரர் அஷான் தில்ஹார 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 207 (80.4) – கவிந்து ஹஷான் 59, சிதும் தெல்கே 49, ருக்ஷான் திசாநாயக்க 42, ஹஷிம் தில்மான் 3/63, பிரவீன் மதுஷான் 4/64

புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 193 (89) – தருஷ கவிந்த 33, இஷான் ஜயவர்தன 31, அஷான் தில்ஹார 3/48

போட்டி முடிவு – புனித ஜோன்ஸ் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி.