இளையோர் கபடியில் சபிஹான், டிலக்ஷனா சிறந்த வீரர்களாக தெரிவு

152

இலங்கை கபடி சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய இளையோர் கபடி சம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் பிரிவில் அம்பாறை மாவட்ட அணியும், பெண்கள் பிரிவில் யாழ். மாவட்ட அணியும் சம்பியன்களாகத் தெரிவாகின.

இலங்கை கபடி அணிக்கு திறமையான இளம் வீரர்களை இனங்காணும் நோக்கில் இலங்கை கபடி சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்த மாவட்ட ரீதியிலான 25 வயதுக்குட்பட்ட தேசிய கபடி சம்பியன்ஷிப் தொடர் கடந்த வார இறுதியில் கொழும்பு-07 இல் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட இம்முறை போட்டித் தொடரில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் இருந்து 40 அணிகள் பங்குபற்றியிருந்தன.

இம்முறை போட்டித் தொடரின் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் யாழ். மாவட்ட அணியை அம்பாறை மாவட்ட அணியான மதீனா விளையாட்டுக் கழகம் 52–32 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிகொண்டது.

தொடரின் சிறந்த வீரராக இலங்கை தேசிய கபடி அணி வீரரும், அம்பாறை மாவட்ட நிந்தவூர் மதீனா விளையாட்டு கழக கபடி அணித் தலைவருமான எஸ்.எம் சபிஹான் தெரிவு செய்யப்பட்டார்.

இறுதியாக, இந்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற்ற தேசிய கபடி சம்பியன்ஷிப் தொடரில் மட்டக்களப்பு மாவட்ட அணியை வீழ்த்தி முதல் முறையாக தேசிய கபடி சம்பியன்ஷிப் பட்டத்தை அம்பாறை மாவட்ட அணி சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மட்ட கபடி போட்டிகளில் முன்னணி அணியாக வலம்வருகின்ற அம்பாறை மதீனா விளையாட்டு கழகம், இறுதியாக நடைபெற்ற 33ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் தேசிய மட்ட கபடி போட்டியில் சம்பியனாகத் தெரிவாகியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, ஆண்கள் பிரிவில் இரண்டாவது இடத்தை யாழ். மாவட்ட அணியும், மூன்றாவது இடத்தை அநுராதபுரம் மாவட்ட அணியும் பெற்றுக் கொண்டன.

இதேவேளை, பெண்களுக்கான இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியை 38–35 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி யாழ். மாவட்ட அணி சம்பியனாக மகுடம் சூடியது.

சம்பியன் பட்டம் வென்ற யாழ். மாவட்ட அணியைச் சேர்ந்த விமலேந்திரன் டிலக்ஷனா பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்கனைக்கான விருதைப் பெற்றுக் கொண்டார்.

இது இவ்வாறிருக்க, பெண்கள் பிரிவில் மூன்றாவது இடத்தை கேகாலை மாவட்ட அணி பெற்றுக் கொண்டது.

இறுதிப்போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்ற இரண்டு அணிகளுக்கும், வெற்றிக் கிண்ணத்துடன் ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட, 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அணிகளுக்கு தலா 75 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டன.

>>  பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<