பயிற்சிப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய தனன்ஜய, எம்புல்தெனிய

Sri Lanka tour of West Indies 2021

928

மேற்கிந்திய தீவுகள் தலைவர் பதினொருவருக்கு எதிரான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டியை இலங்கை அணி சமப்படுத்தியுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடருக்கு முன்னர், மேற்கிந்திய தீவுகள் பதினொருவர் அணி மற்றும் இலங்கை அணிகள் பயிற்சிப்போட்டியொன்றில் விளையாடியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் பதினொருவர் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது.

>> அவிஷ்கவின் அரைச்சதத்தால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த SSC

அதன்படி, களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 172 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஓசத பெர்னாண்டோ 47 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, தினேஷ் சந்திமால் 40 ஓட்டங்களையும், பெதும் நிசங்க 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் தலைவர் பதினொருவர் அணியின் தலைவர் ரொஸ்டன் சேஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், என்டர்சன் பிலிப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

பின்னர், பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் நாள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 103 ஓட்டங்களை பெற்றிருந்தது. இலங்கை அணிக்கு ஒருநாள் போட்டிகளில் தடுமாற்றத்தை கொடுத்த ஷேய் ஹோப் அரைச்சதம் கடக்க, டெரன் ப்ராவோ 30 ஓட்டங்களை பெற்றார்.

மிகச்சிறந்த ஓட்ட எண்ணிக்கையுடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் சவால் கொடுத்தனர். டெரன் ப்ராவோ 30 ஓட்டங்களுடன் வெளியேற, 68 ஓட்டங்களுடன் ஷேய் ஹோப்பை, விஷ்வ பெர்னாண்டோ வெளியேற்றினார்.

இவர்களின் ஆட்டமிப்பின் பின்னர் கெயல் மேயர்ஸ் (57)  மற்றும் ரொஸ்டன் சேஸ் (52) ஆகியோர் அரைச்சதங்கள் கடந்த போதும், இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். இதன் காரணமாக 294 ஓட்டங்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் தனன்ஜய டி சில்வா மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த, சுரங்க லக்மால் 2 விக்கெட்டுகளையும், தசுன் ஷானக மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து இலங்கை அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியதுடன், ஆட்டநேர நிறைவில் விக்கெட்டிழப்பின்றி 56 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள போட்டி வெற்றித்தோல்வியின்றி முடிவடைந்தது. துடுப்பாட்டத்தில் திமுத் கருணாரத்ன 27 ஓட்டங்களையும், லஹிரு திரிமான்ன 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி சுருக்கம்

இலங்கை 172 (49.3) ஓசத பெர்னாண்டோ 47, தினேஷ் சந்திமால் 40, பெதும் நிசங்க 23, ரொஸ்டன் சேஸ் 4/12, எண்டர்சன் பிலிப் 3/47

மே.தீவுகள் தலைவர் பதினொருவர் 103/1 (26) ஷேய் ஹோப் 68, கெயல் மேயர்ஸ் 57, ரொஸ்டன் சேஸ் 52, தனன்ஜய டி சில்வா 3/26, லசித் எம்புல்தெனிய 3/69

இலங்கை (2வது இன்னிங்ஸ்) 56/0 (13), திமுத் கருணாரத்ன 27*, லஹிரு திரிமான்ன 23*

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<