கோலூன்றிப் பாய்தல் இலங்கை சாதனையை முறியடித்தார் யாழ். வீரர் புவிதரன்

National Athletics Trails 2022

436

தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் சனிக்கிழமை (17) ஆரம்பமாகிய இந்த ஆண்டுக்கான கடைசி மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் வடக்கின் நட்சத்திர மெய்வல்லுனர் வீரர் அருந்தவராசா புவிதரன், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 5.15 மீட்டர் உயரம் தாவி புதிய இலங்கை சாதனை படைத்தார்.

இந்த சாதனையை முறியடிக்க இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த கோலூன்றிப் பாய்தல் வீரர் சன்ன பெர்னாண்டோ, பயிற்சியின் போதும் போட்டியின் போதும் புவிதரனுக்கு கோலை வழங்கியிருந்தமை சிறப்பம்சமாகும்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா மற்றும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரை இலக்காகக் கொண்டு இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் சனிக்கிழமை (17) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

மட்டுப்படுத்தப்பட்ட வீரர்கள் மாத்திரம் பங்குகொண்ட இந்த தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட அருந்தவராசா புவிதரன், 5.15 மீட்டர் உயரத்தை தாவி புதிய இலங்கை சாதனை படைத்தார்.

கோலூன்றிப் பாய்தல் சம்பியனை வீழ்த்தி தங்கம் வென்ற புவிதரன்

இந்தப் போட்டியின் முதல் முயற்சியில் 4.70 மீட்டர் உயரத்தைத் தாவிய புவிதரன், அதன்பிறகு 4.80, 4.90, 5.00 மீட்டர் உயரங்களையும் தனது முதல் முயற்சியிலேயே தாவி அசத்தினார்.

இதனையடுத்து, இலங்கை விமானப்படை வீரர் இஷார சந்தருவன் 2017ஆம் ஆண்டு 5.11 மீட்டர் உயரத்தைத் தாவி நிலைநாட்டிய இலங்கை சாதனையை முறியடிப்பதற்கான முயற்சியில் புவிதரன் களமிறங்கினார்.

இதன்படி, 5.12 மீட்டர் உயரத்தை தெரிவு செய்த அவர் முதலாவது முயற்சியிலேயே அந்த மைல்கல்லை வெற்றிகரமாக தாண்டி ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இலங்கை சாதனையை 5 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்தார்.

இது இவ்வாறிருக்க, தனக்கு கிடைத்த அடுத்த வாய்ப்பில் 5.15 மீட்டர் உயரத்தை நிர்ணயித்த புவிதரன் அந்த உயரத்தை 2ஆவது முயற்சியில் தாவி மீண்டும் ஒரு தடவை தன்னுடைய இலங்கை சாதனையை புதுப்பித்தார்.  இறுதியில் 5.15 மீட்டர் உயரம் தாவிய புவிதரன் முதலிடத்தைப் பிடித்து அசத்தினார்.

கோலூன்றிப் பாய்தலில் அண்மைக்காலமாக தேசிய ரீதியில் பல வெற்றிகளையும், சாதனைகளையும் படைத்து வருகின்ற யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான அருந்தவராசா புவிதரன், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 5.00 மீட்டர் உயரத்தைத் தாவி முதல் தடவையாக தேசிய கோலூன்றிப் பாய்தல் சம்பியனான இஷார சந்தருவனை வீழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான இரண்டாவது தகுதிகாண் போட்டியில் 5.10 மீட்டர் உயரத்தைத் தாவி ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இலங்கை சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை ஒரு சென்றி மீட்டரினால் புவிதரன் துரதிஷ்டவசமாக தவறவிட்டார். குறித்த போட்டியிலும் அவர் இஷரா சந்தருவனை வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

கோலூன்றிப் பாய்தல் சம்பியனை மீண்டும் வீழ்த்தினார் புவிதரன்

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் மீண்டும் 5.00 மீட்டர் உயரத்தைத் தாவி இலங்கை சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

எனவே, கோலூன்றிப் பாய்தல் இலங்கை சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை 3 தடவைகள் அடுத்தடுத்து தவறவிட்ட புவிதரன், சனிக்கிழமை நடைபெற்ற மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் முறியடித்து வரலாற்று சாதனை படைத்தார்.

பாடசாலைக் கல்வியை நிறைவு செய்ததன் பிறகு தற்போது இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகத்தில் இணைந்து கொண்டுள்ள புவிதரன், அவருடைய ஆரம்பகால பயிற்சியாளரும், யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பயிற்சியாளருமான கணாதீபனிடம் தொடர்ந்து பயிற்சிகளைப் பெற்று வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், புவிதரனின் இந்த வரலாற்று சாதனை தொடர்பில் கணாதீபன் எமது இணையத்தளத்துக்கு கருத்து தெரிவிக்கையில்,

”இதே தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்று (16) நிறைவுக்கு வந்த சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டியின் போது சக வீரர்களுடன் சேர்த்து பயிற்சிகளை வழங்கவே புவிதரனை நான் கொழும்புக்கு அழைத்து வந்தேன். உண்மையில் இன்று ஆரம்பமாகிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் பங்குபற்ற அவர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஒன்று அவரிடம் போதியளவு பயிற்சி இருக்கவில்லை. அடுத்தது எங்களிடம் அதற்கான நிறையையும், உயரத்தையும் கொண்ட கோல் (Pole) இருக்கவில்லலை. தற்போது புவிதரனிடம் இருக்கின்ற கோலானது 4.80 அல்லது 4.90 மீட்டர் உயரத்தை தாவுகின்ற அளவைக் கொண்ட கோலாகும். எனவே இலங்கை சாதனையை முறியடிக்க அந்த கோலின் உயரம் போதாதது. அதுமாத்திரமின்றி, தற்போதைய சந்தையில் கோலொன்றின் விலை 5 இலட்சம் ரூபாவாக உள்ளதுடன், அதை வாங்குகின்ற வசதியும் புவிதரனுக்கு இல்லை.

எவ்வாறாயினும், நேற்று நடைபெற்ற பயிற்சியின் போது இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த கோலூன்றிப் பாய்தல் வீரர் சன்ன பெர்னாண்டோவின் கோலைக் கொண்டு புவிதரன் பயிற்சிகளை மேற்கொண்டார். இதனிடையே, இன்று நடைபெற்ற போட்டியின் போது அவரது கோலைப் பயன்படுத்தியே புவிதரன் 5 ஆண்டுகள் பழமையான இலங்கை சாதனையை முறியடித்தார். எனவே இந்த தருணத்தில் சன்ன பெர்னாண்டோவுக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

எனவே, எதிர்வரும் காலங்களில் சர்வதேச மட்டத்தில் நடைபெறுகின்ற போட்டிகளில் பங்குகொண்டு இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுக்க வேண்டும் என இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளம் ThePapare.com சார்பாக புவிதரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதேநேரம், சனிக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் புவிதரனுடன் போட்டியிட்ட எரங்க ஜனித் 4.90 மீட்டர் உயரத்தைத் தாவி இரண்டாவது இடத்தையும், முன்னாள் தேசிய சம்பியனான இஷார சந்தருவன் 4.80 மீட்டர் உயரத்தைத் தாவி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<