இலங்கை உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 26 வருடங்கள்

70
Sri Lanka won Cricket World Cup in 1996
 

இலங்கை கிரிக்கெட் அணி, முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் ஒன்றை வென்று இன்றுடன் 26 வருடங்கள் நிறைவடைகின்றது.

>> டெல்லி கெபிடல்ஸின் உதவிப் பயிற்சியாளராக ஷேன் வொட்சன்

அந்தவகைனில் இலங்கையில் கிரிக்கெட் முதன்மை விளையாட்டாக இலங்கையில் மாறுவதற்கு 1996ஆம் ஆண்டினுடைய கிரிக்கெட் உலகக் கிண்ண வெற்றி, மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

எந்த விளையாட்டுக்களிலும் அப்போது பெரிய சாதனைகள் செய்திராத இலங்கை, கிரிக்கெட் விளையாட்டிலும் ஒரு கத்துக்குட்டியாகவே (Underdogs) கருதப்பட்டு வந்திருந்தது. தகுதிகாண் போட்டிகள் மூலமே இலங்கை முன்னர் உலகக் கிண்ணத் தொடர்களிலும் விளையாடியிருந்தது.

ஆனால் 1996ஆம் ஆண்டின் உலகக் கிண்ண வெற்றியினைத் தொடர்ந்து இலங்கை சர்வதேச அரங்கில் ஒரு முன்னணி கிரிக்கெட் அணியாக வலம் வரத் தொடங்கியது.

இலங்கை அணி 1996ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் எந்தவொரு தோல்வியையும் பெறாத அணியாக இறுதிப் போட்டியில் அப்போது கிரிக்கெட் உலகின் ஜாம்பவன்களில் ஒருவராக இருந்த அவுஸ்திரேலிய அணியினை வீழ்த்தி உலகக் கிண்ண சம்பியன்களாக மகுடம் சூடியது. இந்த இறுதிப் போட்டியில் அரவிந்த டி சில்வா சதமொன்றுடன் சகலதுறைகளிலும் அசத்தல் ஆட்டத்தினை வெளிப்படுத்தி இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்தார்.

அவுஸ்திரேலிய அணி மாத்திரமின்றி இலங்கை அணி 1996ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத் தொடரில் கிரிக்கெட் போட்டிகளில் அப்போது தம்மை விட பெரிய அணிகளாக இருந்த இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளையும் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1996ஆம் ஆண்டு அர்ஜூன ரணதுங்க என்னும் சிறந்த தலைவர் மூலம் கட்டமைக்கப்பட்ட இலங்கை அணியில் காணப்பட்ட அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய போன்ற வீரர்கள் தம்முடைய அட்டகாச கிரிக்கெட் விளையாட்டினையும் உலகிற்கு அறியச் செய்திருந்தனர்.

இதில் குறிப்பாக சனத் ஜயசூரிய, கிரிக்கெட் உலகின் அதிரடி நாயகனாக முடிசூடாது வலம் வருவதற்கான அத்திவாரமும், 1996 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் போதே போடப்பட்டிருந்தது. குறித்த உலகக் கிண்ணத்தின் போது, சனத் ஜயசூரிய பல பந்துவீச்சாளர்களுக்கு தனது துடுப்பாட்டத்தினை கட்டுப்படுத்துவதனை மிகக் கடினமாக மாற்றியிருந்தார். சனத் ஜயசூரியவின் தொடர்ச்சியான அதிரடி ஆட்டங்கள் அவருக்கு 1996ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத்திற்குரிய தொடர் நாயகன் விருதினை வெல்வதற்கும் காரணமாக அமைந்திருந்தது.

அது மாத்திரமின்றி இலங்கை கிரிக்கெட் அணி 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் மூலம், இலங்கை கிரிக்கெட்டின் கட்டமைப்பு வேறு ஒரு நிலைக்கு வளர்ச்சியடைவதற்கும் காரணமாக இருந்தது.

அதாவது முன்னர் குறிப்பிட்டதற்கு போன்று இந்த உலகக் கிண்ணத் தொடரின் வெற்றியின் பின்னர், இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டு முன்னணி விளையாட்டாக மாறியதோடு, மக்களும் கிரிக்கெட்டின் பால் அதிகம் ஈர்க்கப்பட்டனர்.

இந்த உலகக் கிண்ணத்தின் தாக்கம் இலங்கை அணி 2007ஆம், 2011ஆம் ஆண்டுகளின் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களின் இறுதிப் போட்டிகளுக்கும் இலங்கை அணி தெரிவாக காரணமாகியதோடு, ஒரு தடவை T20 உலகக் கிண்ண சம்பியன்களாக (2014) மாறவும் காரணமாக அமைந்தது. இதன் பின்னர் 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரிலும் சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி, இரண்டு தடவைகள் (2009,2012) T20 உலகக் கிண்ணத் தொடர்களில் இறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

>> உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் புதிய மைல்கல்லை எட்டினார் அஸ்வின்

இதனைத் தொடர்ந்து அண்மைய நாட்களில் இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச போட்டிகளில் சிறிது சரிவினைச் சந்தித்து வருகின்ற போதிலும், இலங்கை அணி எதிர்காலத்தில் வெற்றிகரமாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<