பதினேழு நாடுகள் பங்குபற்றும் ஆசிய கயிறிழுத்தல் போட்டி இலங்கையில்

107

ஆசிய கயிறிழுத்தல் சம்மேளனத்துடன் இணைந்து இலங்கை கயிறிழுத்தல் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள 13 ஆவது ஆசிய கயிறிழுத்தல் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இம்மாதம் 15 ஆம், 16 ஆம் திகதிகளில் கொழும்பு டொறிங்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடர் இலங்கையில் நடத்தப்படும் முதல் சந்தர்ப்பமாகும்.

ஆண், பெண் இரு பாலாருக்கும் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் ஆசிய கயிறிழுத்தல் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 21 நாடுகளில் 17 நாடுகள் பங்குபற்றவுள்ளன.

அத்துடன், தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறும் இப் போட்டித் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், தாய்லாந்து மற்றும் மலேஷியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கயிறிழுத்தல் அணிகள் இந்த தொடரில் பங்கேற்பதற்கான சம்மதத்தையும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக இலங்கை கயிறிழுத்தல் சம்மேளனத்தின் தலைவர் கேர்னல் ஜானக ரணசிங்க தெரிவித்தார்.

இப்போட்டித் தொடர் 3 எடைப் பிரிவுகளில் நடைபெறவுள்ளன. பெண்கள் பிரிவுக்கான போட்டிகள் 540 கிலோ கிராம் எடைப் பிரிவிலும், ஆண்களுக்கான போட்டிகள் 640 கிலோ கிராம் எடைப் பிரிவிலும் இடம்பெறவுள்ளன. அதுமாத்திரமின்றி, 600 கிலோ. கிராம் எடைப் பிரிவில் கலப்பு போட்டிகளும் இடம்பெறவுள்ளதுடன், ஓர் அணியில் 8 வீரர்கள் இடம்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வளர்ந்து வரும் அணியை தலைமை தாங்கும் சரித் அசலங்க

வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ….

இதேவேளை, நேபாளத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 3 ஆவது தெற்காசிய கயிறிழுத்தல் போட்டிகளையும் இந்தப் போட்டித் தொடருடன் இணைந்ததாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கயிறிழுத்தல் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதன்படி, குறித்த போட்டித் தொடரில் இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.

இது தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் மாநாடு விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலைமையில் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு விளையாட்டத்துறை அமைச்சர் கருத்து வெளியிடுகையில், ”இலங்கை கயிறிழுத்தல் சம்மேளனத்தினால் முதல் தடவையாக ஏற்பாடு செய்துள்ள ஆசிய கயிறிழுத்தல் போட்டிகளுக்கு எனது பூரண ஒத்துழைப்பு வழங்குவேன். இது கிராமப்புற விளையாட்டாகும். எமது நாட்டில் இடம்பெறுகின்ற பாரம்பரிய விளையாட்டு விழாக்களின் போது இந்த கயிறிழுத்தல் போட்டிகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. எனவே நாட்டின் பாரம்பரியத்துடன் தொடர்புடைய விளையாட்டை பாதுகாத்து அதை முழு உலகிற்கும் வியாபிக்கச் செய்வது எம் அனைவரினதும் பொறுப்பாகும்” என்றார்.

அதுமாத்திரமின்றி, இலங்கை கயிறிழுத்தல் சம்மேளனத்தில் அதிகாரிகள் என்னை சந்தித்த போதுதான் கயிறிழுத்தல் போட்டிகளுக்கு சர்வதேச அளவில் இருக்கின்ற வரவேற்பு குறித்து எனக்கு அறிந்து கொள்ள முடிந்தது. எனவே இந்தப் போட்டித் தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.

இது இவ்வாறிருக்க, ஒவ்வொரு போட்டியிலும் இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் 60 பேர் கொண்ட வீரர்கள் குழாமை இலங்கை கயிறிழுத்தல் சம்மேளனம் தெரிவு செய்துள்ளமை மற்றமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<