ஆசிய ஹொக்கி சம்மேளன (ஃபெடரேஷன்) கிண்ணப் போட்டிகளில் சிறந்த வெற்றிகளைத் தனதாக்கிக் கொண்டு எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருந்த இலங்கை மகளிர் தேசிய அணி, அரையிறுதிப் போட்டிக்கான இறுதி குழு நிலையில் தகுதி பெறும் போட்டியில் சைனிஸ் தாய்பேயினுடனான போட்டியில் துரதிர்ஷ்டமாக 4-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்று அரையிறுதிக்கான சந்தர்ப்பத்தை நழுவவிட்டது.

4ஆவது ஆசிய ஹொக்கி சம்மேளன (ஃபெடரேஷன்) மகளிர் சம்பியன்ஷிப் கிண்ண ஆரம்பப் போட்டிகளான உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தோனேஷியாவுடனான போட்டிகளில் கடின போரட்டத்தின் மத்தியில் இலங்கை மகளிர் அணி மாயாஜால வித்தைகள் மூலம் வென்றது. இந்தோனேஷியாவுடனான போட்டியில் 19-0 என்ற கோல் கணக்கில் வென்று எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தது.

அதன் பின்னரான, குழு நிலைப் போட்டிகளில் இலங்கை அணிக்கு சாதகமான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. போட்டி நடைபெற்ற தாய்லாந்து நாட்டு அணியினுடனான போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது. இதன் காரணமாக ஏமாற்றம் அடைந்த இலங்கை மகளிர் அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற சைனிஸ் தாய்பேயினுடனான போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.

நேற்று நடைபெற்ற இறுதி குழு நிலை போட்டிகளில் நடப்பு சம்பியனான சைனிஸ் தாய்பேயினுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய  சைனிஸ் தாய்பே மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுக்கொண்டதன் முலம் இலங்கை மகளிர் அணிக்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டன.

வெற்றியீட்டிய சைனிஸ் தாய்பே மகளிர் அணிகாக சான் பெய் லயாவ் மற்றும் யூ சியா வங் தலா இரண்டு கோல்களை அடித்தனர். எனினும், இலங்கை அணிக்கு ஆறுதல் தரும் வகையில், சத்துரி கொன்னசிங்க கிடைக்கப்பெற்ற பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 70ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.

அரையிறுதிப் போட்டிகளுக்காக சைனிஸ் தாய்பே, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றன. அதே நேரம், இலங்கை தேசிய மகளிர் ஹொக்கி அணி நாளை, 5ஆவது மற்றும் 6ஆவது இடத்துக்கான போட்டியில் ஹொங்கொங் உடன் மோதவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.